நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல் மிகுல் டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra) எழுதிய் புகழ் பெற்ற ஸ்பானிஸ் மொழி நாவலான 'டொன் கியூடே அல்லது டொன் கியூடி' (Don Quixote) பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இரு பாகங்களை உள்ளடக்கிய நாவல் தமிழில் 'டான் குயிக்ஸாட்' என்னும் பெயரில் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார் பேராசிரியர் சிவ முருகேசன்.
இந்நாவலைப் பற்றிய என் குறிப்பினை வாசிக்கையில் , குறிப்பாக நீங்கள் இலங்கைத் தமிழராக இருக்கும் பட்சத்தில் , நிச்சயம் உங்களுக்கு ஒருவரின் நினைவு தோன்றலாம். அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.
டொன் கியூடே நாவல் இலக்கியத்தில் சுவையான, மறக்க முடியாத கதா நாயகர்களில் ஒருவன். இந்நாவல் அவனது சாகசப்பயண அனுபவங்களை விபரிப்பது.
நாவலின் கதை இதுதான்: டொன் கியூடே வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன். அவன் வீர தீரச் செயல்கள் மிகுந்த சாகசக் கதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவன். அவனது வாசிப்பின் விளைவாக அவன் தன்னை ஒரு சாகச வீரனாகக் கற்பனை செய்து கொள்கின்றான். உலகைக் காக்க வந்த ஒரு வீரனாக எண்ணிக்கொள்கின்றான். அந்த கற்பனை உலகையே அவன் உண்மையான உலகாக எண்ணி, நிசத்துக்கும் , நிழலுகுமிடையில் நிலவும் வேறுபாட்டினை உணராது செயற்படுகின்றான்.ஒரு நாள் தன் வீட்டிலிருந்த பழைய குதிரை வீரனுக்குரிய போர்க் கவசங்களை அணிந்து, ஈட்டியுடன் , தன்னிடமிருந்த வயதான, நோஞ்சையான, குதிரையொன்றின் மீதேறி உலகைக் காப்பதற்கான தன் பயணத்தை மேற்கொள்கின்றான். முதலில் அவன் விடுதியொன்றைக் காண்கின்றான். அதனை அவன் ஒரு கோட்டையாகக் கருதிக்கொள்கின்றான். அங்கு தங்கவும் செய்கின்றான். அங்கிருந்தவர்களுக்கு அவரது விசித்திரமான தோற்றம் வேடிக்கையாகத் தெரிகிறது. அவரை ஒரு பைத்தியக்காரன் என்றே எண்ணுகின்றார்கள். இந்நிலையில் அவ்விடுதியின் சொந்தக்காரனுக்கோ எப்படியாவது அவனை அங்கிருந்து வெளியேற்றினால் போதுமென்றாகிவிட்டது. அவனை வெளியேற்றுவதற்காக டொன்கியூட்டேவைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அவனுக்கு வீரர் பட்டம் வழங்குகின்றான். அதனால் மகிழ்ச்சியடைந்த டொன் கியூட்டே வீடு திரும்புகின்றான்.
வழியில் வியாபாரிகள் கூட்டத்தை வீரர்கள் கூட்டமாக எண்ணி அவர்களுடன் மோதுகின்றான். அவர்களோ அவனைத்தாக்கிவிட்டுச் செல்கின்றனர். தாக்குதல்களுள்ளாகி வீதியில் விழுந்து கிடந்தவனை ஊரவன் ஒருவன் வீடுகொண்டு வந்து சேர்க்கின்றான். அவனது இவ்விதமான விசித்திரமான நடவடிக்கைகளுக்குக் காரணம் அவன வாசிக்கும் சாகசப் புத்தகங்களே என்று முடிவு கட்டி , வீட்டிலிருந்தவர்களுக்கும் சாமியார் ஒருவரும் அந்நூல்களையெல்லாம் எரித்து விடுகின்றார்கள்.
உடல் நிலை சீரடைந்ததும் டொன் கியூட்டே மீண்டும் தன் சாகசப் பயணத்தைத் தொடர விரும்புகின்றான். தன் அயலவான சாஞ்சோ (SANCHO) என்பவனைத் தான் எதிரிகளுடனான சண்டையில் கைப்பற்றப் போகும் தீவொன்றின் ஆளுநராக்குவதாக உறுதி அளித்துத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றான். டொன் கியூட்டே குதிரையிலும், சாஞ்சோ கழுதையிலும் பயணத்தைத் தொடர்கின்றார்கள்.
இப்பயணத்தில் ஒரு தடவை வழியில் காற்றலையொன்றை எதிர்கொள்கையில் ட், டொன் கியூடே அதன் பிரம்மாண்டமான காற்றாடிகளை அசுரர்களாக எண்ணி அவற்றுடன் சண்டையிட ஈட்டியுடன் பாய்ந்து விடுகின்றான்.
இவ்விதமான பல சுவையான சம்பவங்களை விபரிப்பதுதான் டொன் கியூட்டே நாவலின் பிரதான கதை. நாவல் முழுவதும் செவான்டீஸ்ட் மிகவும் சிறப்பாகச் சம்பவங்களை, கதை நடைபெறும் சூழலை, மானுட உணர்வுகளையெல்லாம் விபரித்திருப்பார். நாவலை முழுமையாக வாசிக்க வேண்டுமென்ற தேவையே இல்லை. இவ்வித விவரிப்புகளை வாசித்தால் அவ்வாசிப்பு பேரானந்தத்தைத்தருவதை வாசிப்பவர்கள் உணர்ந்து கொளவர்.
இவ்விதமாகத் தன்னை உலகைக் காக்க வந்த ஒருவனாக உருவகித்துப் பயணிக்கும் டொன் கியூட்டே தான் அதுவரை சந்திக்காத ஒருத்திக்காகக் காதலும் மிக்கவனாக விளங்குகின்றான்.
இவ்விதமாகச் செல்லும் கதையின் முடிவில் டொன் கியூட்டே மனத்தெளிவினை அடைகின்றான். மரணத்தின் வாசலில் நிற்கும் நேரமது. தன் கடந்த கால வாழ்க்கைக்காக மதகுருவிடன் பாவமன்னிப்புக் கேட்கின்றான். தன் நண்பன் சாஞ்சோவிடம் கொடுத்திருந்த பணத்தை அவனே வைத்திருக்கும்படி கூறுகின்றான். தன் சொத்துக்களையெல்லாம் தன் மருமகளுக்கு எழுதிவைக்கின்றான், ஆனால் ஒரு நிபந்தனையுடன். அது என்ன நிபந்தனை? தன் மருமகள் திருமணம் செய்ய விரும்பினால் , ஒருபோதும் தன்னைப்போல் சாகசக்கதைகளை வாசிக்கும் ஒருவனை அவள் மணம் செய்யக்கூடாது என்பதுதான் அது.
இந்நாவலின் தாக்கத்தால் பல புனைகதைகள் வெளியாகின. பதினெட்டாம் நூற்றாண்டில் வெளியான வால்டயரின் கேண்டிட் நாவலை வாசித்தபோது எனக்கு இந்நாவல் நினைவுக்கு வந்தது.
உலக இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் இந்நாவல் இன்றுவரை உலக இலக்கியத்தில் அதன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. பல பதிப்புகளாக , உலகின் பல்வேறு மொழிகளிலும் ஆண்டுதோறும் வெளியாக்கொண்டிருக்கின்றது.
ஒருவகையில் இந்நாவல் அங்கத நாவல். உணர்வுகளைத் தூண்டும் எழுத்துகளின் பாதிப்பை எடுத்துரைக்கும் நாவல் என்றும் கூறலாம். எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்றாக இதனையும் எவ்விதத் தயக்கமுமின்றிக்கூறுவேன்.
No comments:
Post a Comment