நள்ளிரவு. நீண்டு விரிந்திருக்கும் விண்ணில்
நகைக்கும் சுடர்க்கன்னிகள்தம் பேரழகில்
மனதொன்றிக்கிடந்திருந்த சமயம்
வழக்கம்போல் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன்.
இரவுகளில் தனிமைகளில் சிந்தித்தலென்பதென்
பிரியமான பொழுதுபோக்குகளிலொன்று.
அவ்விதமான சமயங்களில் பிரபஞ்சம் பற்றி,
அண்டத்தினோரணுவென விளங்கும்
நம்முலகு,
நம்மிருப்பு பற்றி
எண்ணுவதுமென் விருப்பு.
பரிமாணக்கைதியென் புரிதலுக்குமொரு சுவருண்டு.
சுவரை மீறுதலென்பதென்னியற்கைக்கு மீறிய செயலென்பதும்
எனக்கு விளங்கித்தானுள்ளது. இருந்தும் அது பற்றிச்
சிந்தித்தலும், பரிமாணச்சிறைக்கும் வெளியே
இருப்பவைபற்றி எண்ணுவதிலுமோர் இலயிப்பு\
எப்போதுமுண்டு எனக்கு.
வழக்கம்போலன்றுமிருந்தேன்.
பிரையன் கிறீனென்னும் என் பிரிய
அறிவியலறிஞன் எடுத்துரைத்த உண்மைகள் சிலபற்றி
எண்ணியிருந்தேன்.
பல்பரிமாணம் பற்றி, காலவெளிச்சட்டங்கள்தம்
பல்லிருப்பு ஒரு கணத்தில் பற்றி
அவன் எடுத்துரைத்தவை பற்றியும்
எண்ணியிருந்தேன்.
ஐன்ஸ்டைனின் இடவெளி , காலவெளிபற்றிய
எண்ணங்களிலும் மூழ்கிக்கிடந்தேன்.