Wednesday, January 1, 2020

கடற்கொள்(ளல்) = கடற்கோள்!



அண்மையில் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் சுனாமியின் ஆழிப்பேரலைக்குப்பதில் கடற்கோள் என்னும் சொல்லே சிறந்தது என்னும் கருத்துப்படப் பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் 'மணிமேகலையில் சாத்தனார் பயன்படுத்திய "கடல்கோள்" அதன் அசல் விஞ்ஞான விளக்க அர்த்தத்தமுள்ள ஒரு கலைச்சொல்(Technical word) கடல்பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் சடுதியான கடல் பெருக்கு பட்டினத்துள் புகுந்து அழிப்பதையே அவர் குறிக்கிறார். 'என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அப்பதிவு பற்றிய என் எண்ணங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

முதலில் நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்கள் மணிமேகலையில் எங்கு இச்சொல் வந்துள்ளது என்பதைக் கூற முடியுமா? கடல் கொள, கடல் கொளும் என்று வந்துள்ளதை அவதானித்தேன். ஆனால் கடல் கோள் என்னும் சொல்லைக் காணவில்லை. தவற விட்டு விட்டேன் போலும். மணிமேகலையில் எங்கு அச்சொல் வருகின்றது என்பதைக்குறிப்பிடவும். தமிழில் கோள் என்பதற்கு பல கருத்துகளுள்ளன.அனைவரும் அறிந்த கருத்து உருண்டை வடிவம் .அதனால்தான் கிரகங்களைக் கோளம் என்றும் அழைக்கின்றோம். நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதியில் கோள் என்பதற்கு இடையூறு, காவட்டம், புல், கிரகம், கொலை, கொள்ளல், கோட்பாடு,  தீமை,  நட்சத்திரம், நாள், பழமொழி, புறங்கூறல், பொய்வலி என்று அர்த்தங்கள் பல இருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் எங்கும் கோள் என்பதற்கு அலை என்னும் அர்த்தத்தைக் காண முடியவில்லை. எனவே கடல் கோள் என்பது கடலால் ஏற்படும் இடையூறு (கோள் என்பதற்கு இடையூறு என்னும் அர்த்தமும் உண்டு) என்னும் பொதுவான அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.

 கோள் என்பதற்குக் கொள்ளல் என்னும் இன்னுமோர் அர்த்தமும் உண்டு என்பதை நா.கதிரைவேற்பிளையின் 'தமிழ் மொழி அகராதி' குறிக்கின்றது. அதன்படியும் கடல் கொள்ளல் கடல் கொள் ஆகியிருக்க வேண்டும். கடல்கொள் என்பதும் கடல்கோள் என்பதும் ஒரே அர்த்தத்தையே குறிக்கின்றன. ஏனெனில் கோள் - கொள்ளல் என மேற்குறிப்பிட்டுள்ள தமிழ் அகராதி கூறுகின்றது.

கோள் என்பதற்கு இன்னும் என்னென்ன அர்த்தங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். //Water Fall என்ற ஆங்கிலச்சொல்லுக்கு அருவி என்ற அசலான தமிழ் சொல்லிருக்க நீர் வீழ்ச்சி என்று ஆங்கிலம் வழி மொழிபெயர்த்தவர்கள் நம்மவர்கள்.// அதிலொன்றும் தப்பில்லையே. ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருப்பதைக் காண்கின்றோம்.

இவ்விதமான அர்த்தங்கள் இவ்விதமே பல்வேறு சமயங்களில் தோன்றின. அருவி என்பதற்கு இதனால் நீர்வீழ்ச்சி என்னும் இன்னுமொரு சொல்லும் கிடைத்துள்ளது நல்லதுதானே. நீர்வீழ்ச்சி கிடைத்ததால் அருவியை யாரும் ஒதுக்கித் தள்ளிவிடவில்லையே. சான்று: 'குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதாம்' திரைப்படப்பாடல்.

சுனாமிக்குரிய தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்ற ஆழிப்பேரலை என்பது பொருத்தமான சொல்லே.மேற்படி நட்சத்திரன் செவ்விந்தியனின் பதிவுக்கு (டிசம்பர் 29 பதிவு) எதிர்வினையாற்றிய சுடர் முருக சரஸ்வதி "கடல் கொள்தல் என்பதால் கடல் கோள் உருவானதாகவே நான் விளங்கியிருந்தேன். " என்று தன் எதிர்வினையியில் குறிப்பிட்டிருந்தார்.

Sreeno Sri Sreesu என்பவரும் "கடற்கோளை மணிமேகலையில் காணவில்லை. ஒளிந்திருக்கலாம்..! கடல் கொள்ளல்" என்ற அர்த்தத்தில்தான், கடல் கோள் வந்திருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். இவர்கள் கூறுவதும் பொருத்தமானதே.

ஆழிப்பேரலை என்னும் சொல் தமிழில் சுனாமிக்குரிய சொல்லாகப் பாவிக்கப்படுவது நல்லதே. பொருத்தமானதே. கடல் கொள் அல்லது கடற்கோள் என்பது சுனாமியின் முக்கிய அம்சமான பேரலையைக் குறிப்பிடுவதில்லை. அவ்வகையில் ஆழிப்பேரலை என்பது சுனாமியின் முக்கிய பண்பினை வெளிப்படுத்துவதால் அதுவே பொருத்தமானதென்பது என் நிலைப்பாடு.

ngiri2704@rogers.com

No comments:

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!

கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வை...

பிரபலமான பதிவுகள்