Friday, January 3, 2020

அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)

மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.

நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.
ஒரு காலத்தில் எம் பால்ய, பதின்மப் பருவங்களில் நாம் வாசித்த படைப்புகள் (வெகுசன, குழந்தை இலக்கிய) எல்லாம் பின்னர் எம் வாழ்வின் அழியாத கோலங்களாகி நிரந்தரமாக எம் ஆழ் மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மீண்டுக் காண்கையில் இன்பம் கொப்பளிக்கின்றது. மகிழ்ச்சியால் பூரித்துப்போய் விடுகின்றோம். அவை எம்மை வாசித்த அப்பருவங்களுக்கே தூக்கிச் சென்று விடுகின்றன. அவற்றையெல்லாம் அழகாக ஓவியங்களுடன் வெளியான அத்தியாயங்களுடன் 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்; தொலைத்து விட்டோம். அவ்விதமான பல்வகைப்படைப்புகளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலில் என்னைப்போல் பலர் இழந்திருப்பார்கள். ஆனால் இன்று இணையம் ஓரளவுக்கு அவ்விதம் இழந்ததையெல்லாம் மீண்டும் கண்டு அனுபவிக்க இடமேற்படுத்தித் தந்துள்ளது. நான் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் வாசித்துக்குவித்த கல்கி சஞ்சிகையின் படைப்புகளை அக்கல்கி இதழ்களினூடே மீண்டும் வாசிப்பதற்கு இணையம் வழியேற்படுத்தித் தந்துள்ளது. நூல்கள் பலவற்றைப் பழைய புத்தகக் கடைகளில் தேடிக்கண்டுபிடிக்க இணையம் உதவுகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் வாழ்க்கைச் சுமைகளில் இன்பத்தைத் தருபவை வாசிப்பும், எழுத்தும், சிந்திப்புமே.

இவ்விதம் எம் தலைமுறையினருக்கு இன்பத்தை அளித்த ஓவியர்களாக ஓவியர் வினு, ஓவியர் கல்பனா, ஓவியர் லதா, ஓவியர் கொபுலு, ஓவியர் விஜயா, ஓவியர் மாயா, ஓவியர் ரமணி , ஓவியர் மொறாயஸ் , ஓவியர் மூர்த்தி என்று பலரைக் குறிப்பிடலாம். இவர்களின் ஓவியங்களை அகப்படுகையில் அவ்வப்போது இங்கு பதிவு செய்வேன்.

அவ்வகையிலோர் ஓவியம். பொன்னியின் செல்வனுக்கு ஓவியர் வினு வரைந்தது. நமக்கெல்லாம் மிகவும் பிடித்த நாவலின் நாயகன் வாணர்குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனும், பழுவூர் இளைய ராணியான பேரழகி நந்தினியும் இடம்பெறும் காட்சியிது.

பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவரப்போகுமிச் சந்தர்ப்பத்தில் இவ்வோவியத்தை நோக்குகையில் என்னால் வந்தியத்தேவனின் இடத்தில் நடிகர் கார்த்தியை நினைத்துப்பார்க்கவே முடியாது. உண்மையில் நடிகர் சூரியாவின் முகப்பொலிவு வந்தியத்தேவனுக்கு நன்கு பொருந்தும். இதற்குக் காரணம் நாமெல்லாரும் பொன்னியின் செல்வன் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் நாவலின் பாத்திரங்களுடன் உறவாடியவர்கள். அவ்வோவியங்களின் சாயலற்ற முகத்தோற்றமுள்ளவர்களை அதனால்தான். ஏற்றுக்கொள்வதில் சிறிது சிரமம். ஆனால் நந்தினி பாத்திரத்துக்கு ஐஸ்வரராய் நன்கு பொருந்துவார். இதுபோல் நிதானமும், மதியூகமும் மிக்கவராகக் கல்கியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் குந்தவைப்பிராட்டியாரின் பாத்திரத்துக்கும் திரிஷா பொருந்துவாரா என்பதில் எனக்குச் சந்தேகமே. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நன்கு பொருந்துவார்கள்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்