Saturday, January 18, 2020

கவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல! - வ.ந.கிரிதரன் -


நள்ளிரவு. நீண்டு விரிந்திருக்கும் விண்ணில்
நகைக்கும் சுடர்க்கன்னிகள்தம் பேரழகில்
மனதொன்றிக்கிடந்திருந்த சமயம்
வழக்கம்போல் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன்.
இரவுகளில் தனிமைகளில் சிந்தித்தலென்பதென்
பிரியமான பொழுதுபோக்குகளிலொன்று.
அவ்விதமான சமயங்களில் பிரபஞ்சம் பற்றி,
அண்டத்தினோரணுவென விளங்கும் 

நம்முலகு,
நம்மிருப்பு பற்றி 

எண்ணுவதுமென் விருப்பு.
பரிமாணக்கைதியென் புரிதலுக்குமொரு சுவருண்டு.
சுவரை மீறுதலென்பதென்னியற்கைக்கு மீறிய செயலென்பதும்
எனக்கு விளங்கித்தானுள்ளது. இருந்தும் அது பற்றிச்
சிந்தித்தலும், பரிமாணச்சிறைக்கும் வெளியே
இருப்பவைபற்றி எண்ணுவதிலுமோர் இலயிப்பு\
எப்போதுமுண்டு எனக்கு.
வழக்கம்போலன்றுமிருந்தேன்.
பிரையன் கிறீனென்னும் என் பிரிய
அறிவியலறிஞன் எடுத்துரைத்த உண்மைகள் சிலபற்றி
எண்ணியிருந்தேன்.
பல்பரிமாணம் பற்றி, காலவெளிச்சட்டங்கள்தம்
பல்லிருப்பு ஒரு கணத்தில் பற்றி
அவன் எடுத்துரைத்தவை பற்றியும்
எண்ணியிருந்தேன்.
ஐன்ஸ்டைனின் இடவெளி , காலவெளிபற்றிய
எண்ணங்களிலும் மூழ்கிக்கிடந்தேன்.

விரிந்திருக்கும் நம் விரிஅண்டத்தில்
அருகிலுருக்கும் சுடர் செல்வதும்
அவ்வளவு சுலபமல்லவென்பதும் புரிந்தது.
இந்நிலையில் ஏனைய சுடர்க்குடும்பங்களை\
அடைதலெப்போ? மலைப்பில் உளம் மலைத்தேன்.
பரிமாணம் மீறிப்பயணித்தலெப்போ?
பறப்பதற்கு எண்ணத்தில் முடிவு செய்தேன்.
எண்ணப்பயணத்தில் என்னனுபவம் பற்றி
எடுத்துரைப்பேன் நானிப்போது.
பிராணவாயுவுடம்பு துறந்தேன். குருதிபாயும்
உடம்பு துறந்தேன்.
வெறுமை அழுத்தம் தாங்குமுடல் பெற்றேன்.
வெறுமை துளைக்கும் மின்காந்தவலை
வேகத்தையும் மீறி விரையும் வேகம்பெற்றேன்.
பரிமாணச்சிறையுடைத்துப் பயணிக்குமாற்றலும் பெற்றேன்.
என்னிருப்பின் புரிதலற்ற வினாக்கள்தம் விடைகள்
புரிந்தகளிப்பில் காலவெளிப்பயணம் செய்தேன்.
சுடர்நெருக்கப்பாதிப்புமற்ற இருப்பில்
பயமற்றுப் பயணித்தேன்.
பரிமாணங்கள் மீறிப்பல்லுயிர்கள் சூழ்
பிரபஞ்ச வெளிபற்றி
உண்மையறிந்தேன்.
எண்ணங்களைச் சில்லுகளிலடக்கி
அலையாகிப்பயணிக்கும்
இருப்புகள் இருப்பதை
பயணத்தில் கண்டேன்.
எம்மிருப்பின் குறைகளை உணர்ந்தேன்.
என்னவரும் என்னைப்போல் பயணிப்பின்
எண்ணப்பயணம் புரியும்
உண்மைபுரிவார். புரியின்
ஏனிந்த மோதல்? ஏனிந்த மோதல்?
நம்மவர் கூர்ப்பில் நாளை நடப்பதை
நானிங்கு எடுத்துரைத்தேன்.
நாளை இது நடக்கையில்
நானொரு தீர்க்கதரிசி என்பீர்.
காலவெளிச்சட்டங்கள் பின்னிய மேடையில்
எதிர்வுகூறிய காலவெளிக்குடுகுடுப்பை என்பீர்.
நானொன்றுமக்குக் கூறுவேன்.
பரிமாணம் மீறி எண்ணப்பயணம்
என்னைப்போல் மேற்கொள்வீர்.
எப்போதும் முரண்களற்றவோருலகில்
இருப்பீர்.இன்பத்திலிருப்பீர்.
ஆதலினால் கூறுவேன். அடித்துக்கூறுவேன்.
என்னைப்போல் எண்ணப்பயணம் மேற்கோள்வீர்.
முரண்களற்றவோரிருப்பில்
தெளிவுடனிருப்பீர்.
காலவெளிக்குடுகுடுப்பை நான் கூறியவை
ஆருடமல்ல அறிவுரை.
தீர்க்கதரிசனமல்ல தெளிவுரை.
நானுமொரு புதிய கோணங்கியென்று
நீரொதுக்கி விடாதீர். இது
புதிய கோணங்கியின் புலம்பலல்ல.
நான் கூறுவதை நன்கு செவி மடுப்பீர்.
நான் அவ்வளவுதான் கூறுவேன்.
நல்ல காலம் தெரியுது.
நல்ல காலம் தெரியுது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் தெரியுது.
நல்ல காலம் தெரியுது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நன்றி:  பதிவுகள்.காம்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்