Wednesday, January 1, 2020

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர்!

 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அழைக்கப்படும் ஜெய்சங்கருக்கு அப்பட்டம் கிடைப்பதற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் முக்கியமான காரணம். மாடர்ன் தியேட்டர்சின் பல படங்களில் ஜெய்சங்கர் நடித்திருக்கின்றார். அவற்றில் சிலவற்றில் அவர் ஏற்ற துப்பறிவாளர் பாத்திரமே அவருக்கு அப்பெயர் ஏற்படக் காரணம். கறுப்பு வெள்ளைத்திரைப்படங்களில் ஆரம்பகாலத்து அழகான ஜெய்சங்கரை இரசிக்கலாம். பின்னாளில் ஜெய்சங்கர் பருத்து, நடிப்புச் சீர்குலைந்து கதாநாயக அந்தஸ்தினை இழந்து வில்லனாக நடிக்கத் தொடங்கினார். இருந்தாலும் அவ்வப்போது மனதில் நிற்கக்கூடிய குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றார். உதாரணத்துக்கு 'ஊமை விழிகள்' உண்மைக்காகப் போராடும் பத்திரிகை நிலைய நிறுவனராக நடித்திருப்பதைக் கூறலாம். 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்து நெஞ்சைக் கவர்ந்திருப்பார். முதல் படமான 'இரவும் பகலும்' திரைப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

ஜெய்சங்கர் நடித்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் கூட்டணியில் பல, சிந்தையைக் கொள்ளை கொள்ளும் பாடல்களுள்ளன. இவற்றில் பல ஜெய்சங்கர் , எல்.விஜயலட்சுமி, பாரதி, சி.ஐ.டி.சகுந்தலா , வாணிஶ்ரீ, பாரதிபோன்றவர்களின் நடிப்பில் உருவானவை. பெரும்பாலான அவ்வகைத்திரைப்படங்களில் வில்லியாகக் கலக்கியிருப்பார் நடிகை விஜயலலிதா. இப்படங்களிலுள்ள புகழ்பெற்ற ஜெய்சங்கர், டி.எம்.எஸ் கூட்டணிப்பாடல்களில் சிலவாக 'நான் மலரோடு தனியாக', 'நாணத்தாலே கால்கள் பின்னப்பின்ன', 'உன் பருவத்தின் மீதென்ன துடிப்பு, 'செவ்வானத்திலொரு நட்சத்திரம்', 'கொஞ்சம் நில்லடி என் கண்ணே', 'பார்வை ஒன்றே போதுமே' , 'குயிலாக நான் இருந்தென்ன", 'இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது' போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இவற்றிலெல்லாம் டி.எம்.எஸ் வழக்கமாக எம்ஜிஆர், சிவாஜிக்குப் பாடும் குரலற்று, ஜெய்சங்கருக்குப் பொருத்தமான குரலில் பாடியிருப்பார். அக்குரலை நான் அவ்வப்போது கேட்டு இரசிப்பதுண்டு.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் தவிர ஜெய்சங்கர், ஜெயலலிதா, வாணிஶ்ரீ, கே.ஆர்.விஜயா, லட்சுமி போன்றவர்களுடன் இணையாகப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அவற்றில் ஜெயலலிதாவுடன் நடித்த 'யார் நீ', கே.ஆர்.விஜயாவுடன் நடித்த 'பட்டணத்தில் பூதம்', 'பெண்ணே நீ வாழ்க', 'நிலவே நீ சாட்சி', 'பஞ்சவர்ணக்கிளி', வாணிஶ்ரீயுடன் நடித்த 'டீச்சரம்மா' போன்ற படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்தில் இரு வேடங்களில் நினைவில் நிற்கும் வகையில் நடித்திருப்பார். ஜெய்சங்கருடன் பல நாயகிகள் நடித்திருந்தாலும் அவரது ஆஸ்தான நாயகி என்று கூறுமளவுக்கு நினைவில் வருபவர் எல்.விஜயலட்சுமியே.

ஆரம்பக் காலத்து ஜெய்சங்கர் படங்கள் பலவற்றில் அவரது தெளிவான தமிழ் உச்சரிப்பும் , நடிப்பும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். நாடக உலகிலிருந்து திரையுலகுக்கு வந்தவர் ஜெய்சங்கர். ஆனாலும் பின்னர் புகழின் உச்சியில் அவர் தான் ஏற்கும் பாத்திரங்களைத் தேர்வு செய்வதில் போதிய கவனமற்று, ஏனோ, தானோவென்று நடிக்கத்தொடங்கி விட்டதாகவே நான் அவரது கதாநாயகனாக நடித்த பிற்காலத்துப் படங்கள் சிலவற்றைப் பார்த்தபோது எண்ணியிருக்கின்றேன். சிலவற்றில் அவரது உடலசைவுகள் வேடிக்கையாகப் பொருத்தமற்று அன்று என்னைக் கவர்ந்த ஜெய்சங்கரா இவர் என்றும் நினைத்துச் சலித்திருக்கின்றேன்.

இவரது புகழ் ஓங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவரது படமொன்று வெளியாகிக்கொண்டிருந்தது. அதனால் வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் இவர் அழைக்கப்பட்டிருக்கின்றார். எம்ஜிஆர், சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு மத்தியில் தனக்கென்று இரசிகர் கூட்டமொன்றினை வைத்திருந்த ஜெய்சங்கர் இளம் பெண்கள் மத்தியில் 'தனக்கு மாப்பிள்ளை பார்த்தால் ஜெய்சங்கரைப்போல் பார்' என்று கூறுமளவுக்குப் புகழ்பெற்ற ஒருவராகவும் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஞ்சிகைகளில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் தொடர்கள் கூட வெளியாகின. அவ்விதமான தொடர்களிலொன்று எழுபதுகளில் 'தினமணிக்கதிர்' சஞ்சிகையில் தொடராக, ஓவியர் ஜெயராஜ் ஓவியரின் ஓவியங்களுடன் வந்ததும் ஞாபகத்துக்கு வருகின்றன.

ஜெய்சங்கரின் நடிப்புத்திறமையின் நன்கு வெளிப்படுத்திய திரைப்படங்களாக கே.பாலச்சந்தரின் 'நூற்றுக்கு நூறு' , பஞ்சவர்ணக்கிளி, குழந்தையும் தெய்வமும் ஆகிய படங்களே உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன. நல்லதொரு பொழுது போக்குச்சித்திரமாகப் 'பட்டணத்தில் பூதம்' படத்தினைக் கூறலாம். கே.பாலச்சந்தர் இவரை வைத்து 'பூவா தலையா', 'நான்கு சுவர்கள்' போன்ற படங்களையும் எடுத்தள்ளது ஜெய்சங்கரின் புகழ் பாலச்சந்தரையும் விட்டு வைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்த்திரையுலகின் துப்பறியும் திரைப்படங்கள் மாத்திரமல்ல 'கெளபாய்' திரைப்படங்களுக்காகவும் இவர் நினைவுகூரப்படுவார். அவ்வகையான இவரது திரைப்படங்களாக 'கங்கா', எங்க பாட்டன் சொத்து' போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவரது தந்தை ஒரு நீதிபதி என்பதும், இவரது இயற்பெயார் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் நடிகர் சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவிலொருவராக நடித்தவர் என்பதும், இவரது மகன் விஜய் சங்கர் நன்கு அறிமுகமான டாக்டர்களிலொருவர் என்பதும் இவரைப்பற்றிய மேலதிகமான தகவல்கள்.

அவர் நினைவாக அவரது திரைப்படப்பாடல்களின் தொகுப்புக்கான இணைப்பினைப் பகிர்ந்துகொள்கின்றேன்: https://www.youtube.com/watch?v=AsndlnMjFgI&fbclid=IwAR227qVF-Yqr3CAxuVfNrqyM_VZJCtfIG4Qf71AVxzwiT8iGRO8mot2GEhQ

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்