Tuesday, January 31, 2023

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல் விருதுகள்!



தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் வருடத்துக்கான இயல் விருதுகளைப் பெறுபவர்களின் விபரங்களை அறிவித்துள்ளார்கள். அவற்றில் எனக்கும் ஒரு விருது கிடைத்துள்ளது. 'இலக்கிய'த்துக்கான விருது அது. 'தமிழ் இலக்கியத் தோட்ட' விருதுக்காக என்னைப் பரிந்துரைத்தவர்களுக்கும், தெரிவு செய்தவர்களுக்கும் நன்றி.
வ.ந.கிரிதரனின் & பதிவுகள்.காம் படைப்புகள் - ஒரு தகவலுக்காக:

1. வ.ந.கிரிதரனின் மின்னூல்கள் - அமேசன் - கிண்டில் பதிப்புகளாக

2. ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள்.காம் படைப்புகள் சில

Saturday, January 28, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (20) - கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபது: கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை!

"கண்ணம்மா"

"என்ன கண்ணா?" என்றவாறு என்னைத் தன் ஓரக் கண்களால் ஏறிட்டுப் பார்த்தாள் மனோரஞ்சிதம்.

"இது நானுனக்குச் சமர்ப்பிக்கும் சொல் மாலை."

"என்ன கண்ணா இது. சொல் மாலையா? எனக்கா? ஏன்? ஏன் இப்போ?"

"கண்ணம்மா, இப்போ இல்லையென்றால் எப்போ? அதுதான் இப்போ."

"சரி,சரி கண்ணா. அதுதான் உன் விருப்பமென்றால் தாராளமாகச் சமர்ப்பி உன் சொல் மாலையை. மாலையை எங்கே சமர்ப்பிக்கப்போகிறாய்? இதுதான் மலர் மாலை அல்லவே கண்ணா. அது சரி ஒரு கேள்வி."

"கேள்வியா? என்ன கேள்வி கண்ணம்மா. கேள்வி இல்லாமல் இருப்பில் எதுவுமில்லை. கேளு கண்ணம்மா."

"கண்ணா, இவ்விதமான சமர்ப்பணத்துக்கு நான் அப்படியென்ன செய்து விட்டேன். "

"கண்ணம்மா, நீ செய்தவற்றைப் பட்டியலிடுவேன். கேள். "

"அப்படியா? சரி. சரி. பட்டியலிடு என் கண்ணா. பார்ப்போம் உன் பட்டியலை"

வழக்கம்போம் அவள் குரலில் தொனித்த குறும்பு கலந்த தொனியை அவதானித்தேன்.

நான் தொடர்ந்தேன்:

"முதன் முதலாக என் குடும்பத்தவர் அல்லாத ஒருவரிடம் நான் அன்பு கொண்டது உன்னிடம்தான். அதற்காக உனக்கு நிச்சயம் நன்றி கூற வேண்டும். பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதுதான் கண்ணம்மா."

Thursday, January 19, 2023

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு... - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...


நள்ளிரவு. நகர் மெல்ல மெல்ல ஓசைகள் அடங்கித் துஞ்சத் தொடங்குகின்ற நேரம். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து வானத்தை நோக்கியபடியிருக்கின்றேன். இருவர் ஒரே நேரத்தில் இலகுவாகச் சாய்ந்திருக்கும் வகையிலான அகன்ற் சாய்வு நாற்காலி. அருகில் என்னுடன் ஒட்டி இணைந்தபடி, தன் தலையை என் வலது பக்கத்து மார்பில் சாய்த்தபடி , ஒருக்களித்து படுத்தபடி என்னுடன் அகன்ற ஆகாயத்தைப் பார்த்தபடி மெய்ம்மறந்திருக்கின்றாள்  மனோரஞ்சிதம்.

விரிந்திருக்கும் இரவு வான் எப்பொழுதுமே என் மனத்தின் இனம்புரியாத இன்பக் கிளர்ச்சியைத்தருமொன்று. எண்ணப்பறவையைச் சிறகடித்துப் பறக்க வைக்குமொன்று. இரவு வானை இரசித்தபடி எவ்வளவு நேரமென்றாலும் என்னாலிருக்க முடியும். தெளிந்த வானில் நகரத்து ஒளி மாசினூடும், நூற்றுக்கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காண முடிந்தது. நட்சத்திரத்தோழியருடன் பவனி வரும் ஓர் இளவரசியாக முழுமதி விளங்கிக்கொண்டிருந்தாள். முகில்களற்ற தெளிந்த இரவு வானம் சிந்தைக்கு ஒத்தடம் தருவதுபோல் ஒருவிதத் தண்மை மிகுந்த உணர்வினைத் தருகின்றது.

விரிந்திருக்கும் வானில் கொட்டிக்கிடக்கும் சுடர்களிலொன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப்போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக்கூடும்.  இவ்விதம் நினைக்கையிலேயே நெஞ்சில் இன்பம் பொங்கியது.  அவ்வின்பம் வெளிப்பட வாய் விட்டு 'நண்பனே' என்றழைக்கின்றேன்.

Monday, January 16, 2023

அடையாளம் குறித்த தேடல்: வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை! - முனைவர் சு. குணேஸ்வரன் -


- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021)  நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -


வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.

மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.

அடையாளம் குறித்த கதைகள்

அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.

Thursday, January 12, 2023

சிங்கிஸ் ஐத்மாத்தாவின் 'அன்னை வயல்'! - வ.ந.கிரிதரன் -



அளவில் சிறியதான இந்த நாவல் கிடைத்ததுமே முதலில் வாசித்தேன். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கும் நாவல், முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

சிறிய நாவலில் இயற்கையுடன் ஒன்றிய மானுட வாழ்வு எவ்விதம் பல்வகை இடர்களுக்குள்ளாகிறது என்பதை நெஞ்சைத்தொடும் வகையில் ,அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்படுகின்றது. பாசம், காதல் போன்ற மானுட உணர்வுகளையெல்லாம் போர் எவ்விதம் சிதைத்து விடுகின்றது.

Saturday, January 7, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (18) - தளைகள்! தளைகள்! தளைகள்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!

"கண்ணம்மா, எத்தனை எத்தனை தளைகள்.  சுற்றியெங்கு பார்த்தாலும் தளைகள். உள்ளே தளைகள். வெளியேயும் தளைகள்."

என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?"

"பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"

"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"

"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள்.  இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான  தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா?  இவ்வகையான தளைகள்  அனைத்திலுமிருந்து  விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.  ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்