Thursday, January 12, 2023

சிங்கிஸ் ஐத்மாத்தாவின் 'அன்னை வயல்'! - வ.ந.கிரிதரன் -



அளவில் சிறியதான இந்த நாவல் கிடைத்ததுமே முதலில் வாசித்தேன். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கும் நாவல், முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

சிறிய நாவலில் இயற்கையுடன் ஒன்றிய மானுட வாழ்வு எவ்விதம் பல்வகை இடர்களுக்குள்ளாகிறது என்பதை நெஞ்சைத்தொடும் வகையில் ,அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்படுகின்றது. பாசம், காதல் போன்ற மானுட உணர்வுகளையெல்லாம் போர் எவ்விதம் சிதைத்து விடுகின்றது. நாவலின் போர் கவிந்திருக்கும் மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி தரும் துயரம் போரற்ற மானுட வாழ்வுக்காக ஏங்க வைக்கின்றது.

போருக்காக ஆண்கள் இராணுவ சேவைக்கு அழைக்கப்படுவதும், அதனால் பெண்கள் (மனைவி, தாய் என) அடையும் மனப்பாதிப்புகளும் சிறப்பாக விபரிக்கப்பட்டுள்ளன. உண்மையில் வாசித்ததும் நெஞ்சில் நிலைத்து நின்று விடும் படைப்பு. கவித்துவம் மிக்க , இயற்கையுடன் ஒன்றிப்பயணிக்கும் மொழி நாவலின் இன்னுமொரு சிறப்பு. 

இந்த நாவலில் எறும்புகள் பற்றி வரும் பகுதி என் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மீண்டும் நினைவூட்டியது. சாரை சாரையாக நடந்து செல்லும் எறும்புகளைப் பார்த்து தல்கோனை பொறாமைப்படுகின்றாள். அவற்றுக்கு மானுடர் அடையும் போர்த்துயரங்கள் இல்லையே என்று ஏங்குகின்றாள். இவ்விதமானதொரு மனநிலையினை நானும் அடைந்திருக்கின்றேன். 83 கலவரத்தின்போது தெகிவளைச் சந்தியில் காரியாலய வானிலிருந்து இறங்கி, கடற்கரை வழியாக ராமகிருஷ்ண மண்டபத்தை நோக்கிச் செல்கையில் எம்மைச் சுற்றி நகரம் கலவரத்தால் பற்றியெரிந்து கொண்டிருந்தது. அபொழுது என்னருகில் பறந்து கொண்டிருந்த பறவைகளைப் பார்த்து அவை எவ்விதம் கீழே நடக்கும் சூழலின் பாதிப்புகளற்றுப் பறந்து கொண்டிருக்கின்றன என்று ஏங்கியிருக்கின்றேன். இதனை என் 'குடிவரவாளன்'நாவலிலும் பதிவு செய்துள்ளேன்:
 

"இது பற்றிய எவ்விதக் கவலைகளுமற்று விண்ணில் சிறகடித்துக்கொணடிருந்த பறவைகள் சிலவற்றை ஒருவிதப் பொறாமையுடன் பார்த்தான் இளங்கோ. இத்தகைய சமயங்களில் எவ்வளவு சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடிக்கின்றன." ('குடிவரவாளன்' நாவல், பக்கம்  32)
 

'அன்னை வயல்'  நாவலில் எறும்புகள் பற்றிப் பின்வருமாறு வருகின்றது:

"எறும்புகள் சாரை சாரையாகப் பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவையும் உழைத்தன. வைக்கோலையும் தானியத்தையும் சுமந்து சென்றன.  துயரத்தில் ஆழ்ந்த மனிதப்பிறவி , உழைப்பாளி அருகே வீற்றிருப்பது எவ்விதத்திலும் குறையாத உழைப்பாளி அருகே வீற்றிருப்பது , அந்தக் கணத்தில்  அவற்றின் மேல் , அற்ப உழைப்பாளிகளான  எறும்புகள் மேல்கூட  அந்த மனிதப்பிறவி பொறமைப்படுவது அவற்றுக்குத் தெரியவே தெரியாது.  நிம்மதியுடன் தங்கள் வேலையைச் செய்ய அவற்றுக்கு முடிந்தது. "('அன்னை வயல்' நாவல், பக்கம் 41)


நாவல் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்த்தவர் பூ.சோமசுந்தரம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

girinav@gmail.com

No comments:

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்'

ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் ' கிழவனும் கடலும் ' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவல...

பிரபலமான பதிவுகள்