Thursday, January 19, 2023

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு... - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம்  (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...


நள்ளிரவு. நகர் மெல்ல மெல்ல ஓசைகள் அடங்கித் துஞ்சத் தொடங்குகின்ற நேரம். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து வானத்தை நோக்கியபடியிருக்கின்றேன். இருவர் ஒரே நேரத்தில் இலகுவாகச் சாய்ந்திருக்கும் வகையிலான அகன்ற் சாய்வு நாற்காலி. அருகில் என்னுடன் ஒட்டி இணைந்தபடி, தன் தலையை என் வலது பக்கத்து மார்பில் சாய்த்தபடி , ஒருக்களித்து படுத்தபடி என்னுடன் அகன்ற ஆகாயத்தைப் பார்த்தபடி மெய்ம்மறந்திருக்கின்றாள்  மனோரஞ்சிதம்.

விரிந்திருக்கும் இரவு வான் எப்பொழுதுமே என் மனத்தின் இனம்புரியாத இன்பக் கிளர்ச்சியைத்தருமொன்று. எண்ணப்பறவையைச் சிறகடித்துப் பறக்க வைக்குமொன்று. இரவு வானை இரசித்தபடி எவ்வளவு நேரமென்றாலும் என்னாலிருக்க முடியும். தெளிந்த வானில் நகரத்து ஒளி மாசினூடும், நூற்றுக்கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காண முடிந்தது. நட்சத்திரத்தோழியருடன் பவனி வரும் ஓர் இளவரசியாக முழுமதி விளங்கிக்கொண்டிருந்தாள். முகில்களற்ற தெளிந்த இரவு வானம் சிந்தைக்கு ஒத்தடம் தருவதுபோல் ஒருவிதத் தண்மை மிகுந்த உணர்வினைத் தருகின்றது.

விரிந்திருக்கும் வானில் கொட்டிக்கிடக்கும் சுடர்களிலொன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப்போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக்கூடும்.  இவ்விதம் நினைக்கையிலேயே நெஞ்சில் இன்பம் பொங்கியது.  அவ்வின்பம் வெளிப்பட வாய் விட்டு 'நண்பனே' என்றழைக்கின்றேன்."என்ன கண்ணா, யாரை அழைக்கின்றாய். அருகில் என்னைத்தவிர வேறு யாருமேயில்லையே?" என்று கூறியபடி என் தாடையைச் செல்லமாகத் தட்டினாள் மனோரஞ்சிதம்.

"கண்ணம்மா, நான் என் அண்டத்து நண்பனைப்பற்றி எண்ணினேன். அவனை அழைத்தேன்." என்றேன்.

"அண்டத்துச் சிநேகிதனா? இல்லை சிநேகிதியா?'' என்று குறும்பு குரலில் தொனிக்கப் பதிலுக்குக் கேட்டாள்  மனோரஞ்சிதம்.

"ஏன் கண்ணம்மா, சிநேகிதி ஒருத்தி எனக்கு இருக்கக் கூடாதா?" என்று பதிலுக்கு அவளைச் சீண்டினேன்.

"கண்ணா, உனக்கு என்னைத்தவிர சிநேகிதி வேறு எவளும் இருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாது."

"கண்ணம்மா, நீயா இப்படிப் பேசுவது?"

"நான் பேசாமால் வேறு யார் பேசுவதாம் கண்ணா? அது சரி நான் பேசியதிலென்ன தவறு கண்ணா?"

"கண்ணம்மா, நீ நட்பையும், காதலையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறாயடி. நட்பு எத்தனை பேருடனும், எந்தப் பாலினருடனும் இருக்கலாம். ஆனால் காதல் காதலுக்குரியவரிடம் மட்டுமே இருக்க முடியும். காதலுக்குரியவர் சிறந்த நண்பராகவுமிருக்க முடியும். ஆனால் சிறந்த நண்பர் எல்லாரும் காதலர்களாக இருந்து விட முடியாது கண்ணம்மா. நீ என் காதலி கண்ணம்மா. நீ  என் சிநேகிதி கண்ணம்மா."

இவ்விதம் நான் கூறவும் மனோரஞ்சிதத்தின் முகத்தில் நாணப்புன்னகை படம் விரித்தது. அத்துடன் பின்வருமாறு கூறவும் செய்தாள்:

"உன்னுடன் என்னால் பேசி வெல்ல முடியாது கண்ணா. எல்லாவற்றிலும் நீ மிகவும் தெளிவாக  இருக்கிறாய். அதுசரி விடயத்துக்கு வருவோம் கண்ணா.  நீ யாரை அழைத்தாய் கண்ணா?"

"கண்ணம்மா, என் சிந்தனைப்போக்குதான் உனக்குத்தெரியுமே.  எப்பொழுதும் அண்டத்தை அளந்துகொண்டிருப்பவன் நான் என்பது நீ அறியாத ஓன்றல்லவே.  என்னை எப்பொழுதுமே ஈர்க்குமொரு விடயம் அண்டத்து உயிர்கள் பற்றியது. அது பற்றிச் சிந்திப்பது. இவ்விதம் விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்த்து மெய்ம்மறந்து இருக்கையில் இவ்விதமான சிந்தனைகளால் நெஞ்சு நிறைந்து விடுகின்றது. இவ்விதம் நெஞ்சு நிறைந்து விடுகையில் சில வேளைகளில் வார்த்தைகள், சொற்களை என்னை மீறிப்  பேசி விடுகின்றேனடி. அவ்விதமானதொரு தருணத்தில்தான் நண்பனே என்றேன்.நீ பிடித்துக்கொண்டு விட்டாய்."

"அது சரி கண்ணா,  நீ நண்பனே  என்றழைத்தாயே. அவனா, அவளா , அதுவா? அதைத்தான் நான் மிகவும் சாதாரணமாகக் கேட்க நினைத்தேன். ஆனால் உன் மீதான எனது அளவு கடந்த உரிமையுடன் கூடிய உறவு என்னைத் திசை திருப்பி விட்டது. இப்போது வழிக்கு வந்து  விட்டேன் கண்ணா. சரி இப்போதாவது சொல். யார் அவன்? அவள்? அது?"

"கண்ணம்மா, ஏற்கனவே நாம் பல தடவைகள் இவ்விடயத்தில் உரையாடியிருக்கிறோம்.  நான் நிச்சயம் விரிந்திருக்கும் பேரண்டத்தில், இதைப்போல் பில்லியன் பில்லியன் கணக்கில் வேறு அண்டங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றிலெல்லேம் எம்மையொத்த, அல்லது எமக்கும் மேலான, அல்லது கீழான நிலையில் உயிரினங்கள் இருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன். அப்படி இருக்க முடியாதென்றால் நாமிருப்பதும் இங்கு சாத்தியமில்லையல்லவா கண்ணம்மா."

"ஓரு தர்க்கத்துக்காகக் கேட்கின்றேன். நீயே பல தடவைகள் கூறியுள்ளதைப்போல் எம் புலன்களுக்கப்பால் பொருளுலகு இருப்பதை ஒருபோதுமே இருப்பதை நிரூபிக்க முடியாதல்லவா. அப்படிப்பார்த்தால் நாம் இருப்பது என்பது கூட உண்மையா என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஏனென்றால் நாம் இருப்பதைக்கூட நாம் எம் புலன்களால்தாமே அறிகின்றோம். என்ன சொல்லுகிறாய் கண்ணா?"

"கண்ணம்மா , நீ என்னைக்கொண்டு என்னையே மடக்கி விட்டாயடி. இதனால்தான் நீ என் தோழி. என் காதலி. சரி இந்த விடயத்தில்   'காண்பதுவே உறுதி கண்டோம்.  காட்சி நித்தியமாம்'  என்று பாடும் பாரதியின் வழி நடப்போம். ஒரு கதைக்கு அப்படியே எம் நிலைப்பாட்டையும் வைத்தால் மேலே தொடர்வதில் குழப்பமில்லையல்லவா கண்ணம்மா."

"சரி மேலே சொல்லு கண்ணா. அப்படியும் வைத்துக்கொள்ளலாம்தானே.  பொருளும் சக்தியம் ஒன்றுதானே.  அறிவியல் இவ்விதம்தானே கூறுகின்றது. நீயே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறாய் மறந்து விட்டாயா கண்ணா?"

"கண்ணம்மா, இந்தத் தெளிவுதான் முக்கியம்,. இந்தத் தெளிவுதான் மேலும் சிந்தனையைப்பெருக்கத் தேவையானது. சரி நீ  கேட்ட விடயத்துக்கே வருகின்றேன். இவ்விதம் இரவு வானைப்பார்த்தபடி படுத்திருக்கையில் எனக்கு இளவயதில் படித்த 'ட்விங்கிள் ட்விங்கள் லிட்டில் ஸ்டார்' நேர்சரி றைம் நினைவுக்கு வருவதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த பாடலது. அது குழந்தைப்பாடல் மட்டுமல்ல வளர்ந்தவர்களுக்கும், இருப்பு பற்றிய சிந்தனைத் தேடல் மிக்கவர்களுக்கும் உரிய பாடலென்பது என் கருத்து."

"கண்ணா , இந்த விடயத்தில் எனக்கும் உன் கருத்தே. மனத்தில் சிந்தனைக் கிளர்ச்சியூட்டும் வரிகள். குறிப்பாக up above the world so high என்னும் வரியைக் கூறலாம். அதில்வரும் high உண்மையிலேயே எனக்குக் கிளர்ச்சியுட்டும் சொல் கண்ணா"

"கண்ணம்மா, அங்கே , உலகம் மிகவும் உயரத்தில் இருக்கிறது. அந்த உயரம் பல கால அடுக்குகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் பல்வேறு காலகட்டங்களை இங்கிருந்து காண்கின்றோம்.  அப்பொழுதெல்லாம் என் மனத்தில் அங்கு என்ன இருக்கும்? இருக்கிறது? என்னும் சிந்தனைகளே ஓடுவது வழக்கம். அப்பொழுதெலாம் நான் நினைப்பேன் - அங்கும் எம்மைபோன்ற உயிரனமொன்று இவ்விதம், தான் வாழும் கிரகத்தில் நாம் அறிந்த தொழில் நுட்பங்களுடன் வாழுமா? அல்லது எம்மைவிட மேலான தொழில் நுட்பத்துடன் வாழும் ஆற்றல் மிக்கவையா? இவை போன்ற சிந்தனைகள் நிரம்பி வழியும் கண்ணம்மா."

"கண்ணா, இந்த விடயத்தைப்பற்றி விடிய விடிய கதைத்துக்கொண்டேயிருக்கலாம். ஆனால் எனக்குத்தூக்கம் வருகிறது கண்ணா, நீ கொஞ்ச நேரம் சிந்தனையைத் தொடரு கண்ணா?"

இவ்விதம் கூறிய மனோரஞ்சிதம் என்னை அணைத்தபடி , மார்பில் சாய்ந்தபடி வெகு விரைவிலேயே தூக்கத்திலாந்துபோனாள். நெஞ்சுக்கினியவள் நெஞ்சினில் தூங்கிக்கொண்டிருக்கையில் என் நெஞ்சிலோ சிந்தனைகள் மேலும் மேலும் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன.

எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்