Saturday, January 28, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (20) - கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபது: கண்ணம்மாவுக்கு நான் சூடிய சொல்மாலை!

"கண்ணம்மா"

"என்ன கண்ணா?" என்றவாறு என்னைத் தன் ஓரக் கண்களால் ஏறிட்டுப் பார்த்தாள் மனோரஞ்சிதம்.

"இது நானுனக்குச் சமர்ப்பிக்கும் சொல் மாலை."

"என்ன கண்ணா இது. சொல் மாலையா? எனக்கா? ஏன்? ஏன் இப்போ?"

"கண்ணம்மா, இப்போ இல்லையென்றால் எப்போ? அதுதான் இப்போ."

"சரி,சரி கண்ணா. அதுதான் உன் விருப்பமென்றால் தாராளமாகச் சமர்ப்பி உன் சொல் மாலையை. மாலையை எங்கே சமர்ப்பிக்கப்போகிறாய்? இதுதான் மலர் மாலை அல்லவே கண்ணா. அது சரி ஒரு கேள்வி."

"கேள்வியா? என்ன கேள்வி கண்ணம்மா. கேள்வி இல்லாமல் இருப்பில் எதுவுமில்லை. கேளு கண்ணம்மா."

"கண்ணா, இவ்விதமான சமர்ப்பணத்துக்கு நான் அப்படியென்ன செய்து விட்டேன். "

"கண்ணம்மா, நீ செய்தவற்றைப் பட்டியலிடுவேன். கேள். "

"அப்படியா? சரி. சரி. பட்டியலிடு என் கண்ணா. பார்ப்போம் உன் பட்டியலை"

வழக்கம்போம் அவள் குரலில் தொனித்த குறும்பு கலந்த தொனியை அவதானித்தேன்.

நான் தொடர்ந்தேன்:

"முதன் முதலாக என் குடும்பத்தவர் அல்லாத ஒருவரிடம் நான் அன்பு கொண்டது உன்னிடம்தான். அதற்காக உனக்கு நிச்சயம் நன்றி கூற வேண்டும். பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இதுதான் கண்ணம்மா."
"ம்ம்ம்.. மேலே சொல்லு" கண்ணைச் சிமிட்டினாள் மனோரஞ்சிதம்.

"எந்த விதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பினை நீ வழங்கினாய். அது உண்மையிலேயே மகத்தானதொரு விடயமாகத்தான் எனகுத் தோன்றுகின்றது கண்ணம்மா. அது பட்டியலில் இடம் பெறும் இரண்டாவது விடயம் கண்ணம்மா."

"உன்மேல் நான் வைத்திருந்த அன்பு , தூய்மையான அன்பு, தூய்மையான காதலாக மாறியது. காதலென்றால் என்ன, அதன் விளைவுகள் எவை, இவற்றையெல்லாம் என் வாழ்வில் விளக்கியது நீதான். உன் மேல் நான் வைத்திருக்கும் காதல்தான்.அதறகாக நான் உனக்குக் கடமைப்பட்டிருக்கின்றேன்."

"அடுத்தது.. இன்னும் மேலே ஏதாவது  இருக்குதா கண்ணா."

"என்னைப்போல் நீயும் இருப்பு பற்றிய தேடல் மிக்கவள். சிந்தனைகள் வேறானவையாகவிருந்தபோதும் தேடலில் ஒன்றிணைந்தவர்கள். இவ்விடயத்தில் என்னுடன் தர்க்கபூர்வமாக விவாதிப்பவள்.  அதவும் பட்டியலிலிடப்பட வேண்டியதொன்று."

"கண்ணா  , நீ கூறுவதைக் கேட்கையில் தித்திக்கிறதே."

"தித்திக்கிறதா? அதெப்படி கண்ணம்மா. தித்திப்பதற்குப் பட்டியலென்ன உணவா" இவ்விதம் கேலியாகக் கேட்டேன். அதற்கு அவள் என்ன பதிலைக்கூறப்போகின்றாளோவென்று ஆர்வத்துடன் நோக்கினேன்.

அதற்கு மனோரஞ்சிதம் தனக்கேயுரிய சாமர்த்தியத்துடன் " ஏன் கண்ணா, செவிநுகர் கனிகளைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா. அதுபோல்தான் இதுவும்." என்றாள்.

"என் கண்ணம்மாவின் சாமர்த்தியம் வேறு  யாருக்கும் வராது." என்று அவள் சாமர்த்தியத்தை மெச்சினேன்.


கண்ணம்மாவுக்கு நான் சூடிய  சொல்மாலை!

கண்ணம்மா, இந்தச் சொல் மாலையை நானுக்குச்
சமர்ப்பிக்கின்றேன்.
சிலவற்றைச் சொல்லாமலிருக்க முடிவதில்லை.
இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான்.
இதயத்தின் கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய
நினைவு. உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாததொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில் இன்றோ
விடுபட முடியாததொரு நிலை.
அது உனக்கும் புரியும். எனக்கும் தெரியும்,.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில்
அமைதியும் இன்பமும் என்றும் நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்ந்த பொழுதுகளை
நினைத்துப் பார்க்கின்றேன்.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை...
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்...
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று
ஒயிலாகச் சென்றாய்.
ஓரக்கண்ணால் சிறைப்பிடித்தாய்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே.
அதை உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின்
ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் உன் இதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

'எனது குழந்தைகள்' கவிதை பற்றி...

'புதுசு' சஞ்சிகையின் ஜூலை 1984 இதழில் வெளியான கவிதை இது. துஷ்யந்தன் எழுதியது. இந்தக் கவிதையை வாசித்தபோது குறிப்பாக 'யுத்தத் தாங்...

பிரபலமான பதிவுகள்