அத்தியாயம் (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!
என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?""பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"
"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"
"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள். இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா? இவ்வகையான தளைகள் அனைத்திலுமிருந்து விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும். ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"
"கண்ணா, எனக்கொரு சந்தேகம்?."
"என்ன கண்ணம்மா?"
"பூரண மானுட விடுதலைக்கு முதலில் அகவிடுதலை பெற்றால் நல்லது இல்லையா?"
"கண்ணம்மா, இங்குதான் பிரச்சனையே இருக்கு"
"இதிலேன பிரச்சனை இருக்க முடியும் கண்ணா?"
"கண்ணம்மா,
இங்கு புறத்திலுள்ள பிரச்சனைகள் எல்லாமே நாம் உருவாக்கியவை.
மனிதர்களாகிய நாம் உருவாக்கியவை. இப்பிரச்சினை இருக்கும் மட்டும் எம்மால்
சிந்தனையை எம் அகவிடுதலையை நோக்கிப் பூரணமாகத் திருப்பவே முடியாது. ஒரு
சிலரால் திருப்ப முடிந்தாலும், பெரும்பான்மையான சாதாரண மக்களால் திருப்பவே
முடியாது. அதனால்தான் முதலில் புறவிடுதலையை நோக்கி எம் கவனத்தைத் திருப்ப
வேண்டும். உன்மையில் மார்க்சியம் இதனையே வலியுறுத்துகின்றது."
"கண்ணா, எனக்கென்னவோ இது நடைமுறைச்சாத்தியமில்லைபோல்தான் தெரிகிறது."
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய் கண்ணம்மா"
"உலகம்
செல்வந்த நாடுகள் , வறிய நாடுகளென்று பிரிபட்டுக்கிடக்கின்றது.
இந்நிலையில் வறிய நாடுகளின் வளங்கலைச் சுரண்டித்தான் செல்வந்த நாடுகள்
தங்கள் நாட்டுத் தொழிலாளர்கள் தமக்கெதிராக எழுந்து விடாமல் அடக்கி
வைத்திருக்கின்றன."
"கண்ணம்மா, நீ சொல்லுவது சரிதான். இவ்விதம்
உலகம் வர்க்கரீதியாகப் பிளவுண்டுகிடக்கும் நிலையில் ,இப்பிளவினைத்
தொடர்ந்தும் தக்க வைக்க ஆதிக்க சக்தியினர் உலக நாடுகளின் மத்தியில் தேசிய,
இன, மத, மொழி, வர்ணப்பிளவுகள் இருப்பதை ஆதரிப்பார்கள். இப்பிளவு
பட்டிருக்கும் உலகு செல்வந்த நாடுகளுக்கு பாதுகாப்பினைத் தருவதாக
அந்நாடுகள் எண்னுகின்றன. அதற்கேற்ப தம் நாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகளை
வகுத்துக்கொள்கின்றன. இதனால் தான் மார்க்சியவாதிகள் உலகத்தொழிலாளர்களே
ஒன்று படுங்கள் என்று குரல் எழுப்புகின்றார்கள். உலகத்தொழிலாளர்கள்
ஒன்றிணைந்து உருவாகும் சமூக, பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்கள் மட்டுமே
இறுதியில் பூரணமான மானுடரின் புற விடுதலையினைத் தரும். "
"கண்ணா, தனியுடமை இருக்கும் வரையில் இதற்குச் சாத்தியமிருப்பதாகத் தெரியவில்லையே"
'கண்ணம்மா, சரியாகச் சொன்னாய். அதனால்தான் கார்ல் மார்க்ஸ் பொதுவுடமைச் சமுதாய அமைப்பைத் தீர்வாக முன் வைத்தார்."
"கண்ணா,
கேட்கவே எவ்வளவு நன்றாகவுள்ளது. தனியுடமை உணர்வுகளற்ற , பொதுவுடமைச்
சமுதாய அமைப்புள்ள இப்பூவுலகில் அகவுணர்களைப்புரிந்து , அதன் விடுதலைக்காக
வாழும் மனிதர்கள்.... நினைக்கவே எவ்வளவு மகிழ்ச்சியினைத் தருகிறது. எவ்வளவு
இன்பம் மிக்க பூவுலகாக அவ்வுலகு இருக்கும்."
'கண்ணம்மா, அது பற்றிய நினைப்பே இவ்வளவு மகிழ்ச்சியைத் தருமென்றால், உண்மையில் நிகழ்ந்துவிட்டால் எப்படியிருக்கும். ஆனால்..."
"என்ன கண்ணா ஆனால்...?"
"ஏந்தப் பொதுவுடமை அமைப்பிலும் என் கண்ணம்மா மட்டும் என்றுமே என் தனியுடமை."
இதைக்கேட்டதும் மனோரஞ்சிதத்தின் முகத்தில் நாணமும், மகிழ்ச்சியும் படர்ந்த ரேகைகள் படர்ந்தன. அத்துடன் கூறினாள்:
"கண்ணா , என்றுமே நீயுமென் தனியுடமை."
இவ்விதம் கூறியவளை வழக்கம்போல் வாரியணைத்துக்கொண்டேன்.
தளைகள்! தளைகள்! தளைகள்!
எங்குமே, நானாபக்கமுமே,
சுற்றிப்படர்ந்திருக்கும்
தளைகள்! தளைகள்! தளைகள்!
சுயமாகப் பேசிட, சிந்தித்திட
உன்னையவை விடுவதில்லை.
நெஞ்சு நிமிர்த்தி நடந்திட
அவை சிறிதும் நெகிழ்ந்து
கொடுப்பதில்லை.
உள்ளும் , புறமும் நீ
உருவாக்கிய தளைகள்.
இன்றுனை இறுக்கி, நெருக்கி,
உறிஞ்சிக்கிடக்கையிலே
விழி! எழு! உடைத்தெறி!
உன் கால்களை,
உன் கைகளை,
உன் நெஞ்சினைப்
பிணைத்து நிற்கும் தளைகளை,
விலங்குகளை
உடைத்துத்தள்ளு! வேரறுத்துக்
கொல்லு!
[தொடரும்]
No comments:
Post a Comment