Wednesday, May 7, 2025
தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -
பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத் துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.
Monday, May 5, 2025
கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -
* ஓவியம் - AI
நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமண்காடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.
Sunday, May 4, 2025
வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவம் பற்றி....
ஒருவரின் வாசிப்புப் படிக்கட்டில் அம்புலிமாமாக் கதைகளுக்கும் ஒரு தேவையுண்டு. அது போன்றதுதான் வெகுசனப் படைப்புகளின் முக்கியத்துவமும். யாரும் நேரடியாகத் தீவிர வாசிப்புக்குள் குதித்து விடுவதில்லை. எல்லோருமே திருஞானசம்பந்தராக இருந்து விடுவதில்லை.
சுஜாதாவின் முக்கியத்துவம் அவரது மொழி, அறிவியலை எளிய மொழியில் தமிழுக்குள் கொண்டு வந்தது, தமிழில் மர்மக்கதை இலக்கியப் பிரிவுக்கான அவரது பங்களிப்பு எனக் கூறலாம். வெவ்வேறு வாசிப்புப் படிக்கட்டுகளில் உள்ள வாசகர்களுக்கான தேவைகளை இவ்விதமான வெகுசனப் படைப்புகள் பூர்த்தி செய்கின்றன.
நம் படைப்பாளிகள் பலருக்கு ஒரு குணம் உண்டு. அவர்கள் தம் பால்ய, பதின்மப் பருவங்களில் வெகுசனப் படைப்புகளில் மூழ்கிக் கிடப்பார்கள். அவற்றினூடு வளர்ந்து வந்திருப்பார்கள். வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு வந்ததும் , தம்மை வளர்த்த இவ்வகையான வெகுசனப் படைப்புகளைப் பற்றிக் கூறுவதைத்தவிர்த்து விடுவார்கள். பதிலாக இவ்வகையான படைப்புகளைப் பற்றி இளக்காரமாகப் பேசத்தொடங்கி விடுவார்கள். அது அவர்களது பெருமை அல்ல சிறுமை என்பேன்.
Monday, April 28, 2025
வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்!
எனக்கு இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில் என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர். அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான்.
இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும் விண்ணை ஆராய்வதற்குரிய் வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம். அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.
Saturday, April 26, 2025
கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்'
பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில் நன்றி.
இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்.
குறிப்பேடாக விளங்கிய 'சி.ஆர்.கொப்பி' (CR)
எண்பதுகளில் என் உணர்வுகளின் வடிகால்களாக இருந்தவை எழுத்துகளே. அப்பொழுதுதான் மார்க்சிய நூல்களை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு வித வெறியுடன் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதுவரை சமூகம், அரசியல், தேசியம் , மதம் என்பவற்றை நான் பார்த்த பார்வையை மாற்றி அமைத்தன மார்க்சிய நூல்கள். சிந்தனை அதுவரை அடைத்திருந்த வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியேறிய காலமது. அப்போது என் உணர்வுகளைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதிக்கொட்டினேன். அவற்றுக்கு வடிகால்களாக இருந்தவை இங்கு நீங்கள் காணும் சி.ஆர் கொப்பிகளே.
நீண்ட பக்கங்களைக் கொண்ட 'கொப்பி'களாக இவை இருந்ததால் அதிக விபரங்களை ஒரு பக்கத்தில் எழுதுவதற்கு உதவியாக இருந்தன. அதனால் என் பிரியத்துக்குரிய குறிப்பேடுகளாக இவை விளங்கின.
Friday, April 25, 2025
வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!
வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!
அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார். வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு -
https://www.aaees.org/e4saward
தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர் எனக்கு அறிமுகமானது எழுத்தாளராகத்தான். பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் அதில் நடைபெற்ற விவாதங்களில் திண்ணைதூங்கி என்னும் பெயரில் அறிமுகமானார். பதிவுகள் விவாத அரங்கின் இறுதிக்காலத்தில் அதனை என்னுடன் சேர்ந்து நிர்வகிப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். திண்ணைதூங்கி, சித்தார்த்த சேகுவேரா என்னும் புனைபெயர்களில் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் பதிவுகள் உட்படப் பல்வேறு இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. தொண்ணூறுகளில் வீரகேசரி நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியிலும் இவரது குறுநாவல் விருதினைப்பெற்றதாக ஞாபகம். பதிவுகளின் படைப்பாளிகளில் ஒருவர் என்னும் ரீதியில் பதிவுகள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics' . 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...



