Thursday, August 13, 2026

தாமரைச்செல்வியின் 'சுமைகள்'


இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது.  அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதியில் வாசித்த நாவல்களிலொன்று 'சுமைகள்'. அப்பொழுது வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்களில் பலவற்றை வாசித்திருக்கின்றேன். அ.பாலமனோகரனின் 'நிலக்கிளி', வ.ந.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்ச்ப் பறவைகள்', செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை', தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள்  சாவதில்லை', சொக்கனின் 'செல்லும் வழி இருட்டு' , கதைக்கனிகள் சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும். 


காலங்கள்  மாறலாம். மானுடர் வாழும் சமூக, அரசியல் , பொருளாதார மற்றும் தொழில் நுட்பச் சூழல்கள் மாறலாம்.  சூழல்கள் எவையாயினும் காதல், உறவுகளுக்கிடையிலான பாசம், இருப்புக்காக  உழைக்கும் நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் மானுட உணர்வுகள் மாறுவதில்லை. அதனால்தான் சங்கம் மருவிய காலத்துப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை இன்றும் பெரு விருப்புடன் வாசிக்கின்றோம், இருபதாம் நூற்றாண்ட்டுத் தமிழ்ப் புனைகதை உலகில், திரைப்பட  உலகில் சிலப்பதிகாரம் ஏற்படுத்திய பாதிப்பால் உருவான படைப்புகள் நிச்சயம் பல நூறைத்தாண்டு. சிலப்பதிகார மாந்தர் வாழ்ந்த சூழல் வேறு, நாம் வாழும் சூழல் வேறு. இன்றும் அக்காப்பியம் எம்மைக் கவர்வதன் காரணம் மேற்படி மானுட உணர்வுகளை அவை வெளிப்படுத்துவதே. 

தாமரைச்செல்வியின் 'சுமைகள்''எழுபதுகளில் எழுதப்பட்டிருக்கலாம். கதைககளம் பரந்தனைச் சார்ந்த மண்ணாக இருக்கலாம். ஆனால் கதாபாத்திரங்களின் உணர்வுகள் எமக்கும் உரியவவை. அதனால்தான் நாவல் முதல் வாசிப்பிலேயே எம்மைக் கவர்கின்றது.

நாவலில் வரும் செந்திலைப்போன்ற இளைஞர்கள் எங்குமிருக்கின்றார்கள். அவனைச் சார்ந்த குடும்ப உறவுகளை ஒத்த உறவுகள் எங்குமிருக்கின்றார்கள். அவனைப்போல், அவன் குடும்பத்தவரைபோல்  இருப்புக்கான நிர்ப்பந்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் எங்குமிருக்கின்றார்கள். இதனால் வாசிக்கும் எவரும் தம்மையொத்த நாவலின் பாத்திரங்களின் உணர்வுகளுடன் ஒன்றிப்போய் விடுவார்கள். உதாரணமாக அப்போது எனக்குப் பதின்ம வயதின் இறுதிக்காலம். செந்திலின் குடும்பத்தில் ஐந்து சகோதரர்கள். மூத்த அண்ணன், அக்காமார் இரண்டு, துடுக்குத்தனம் மிக்க தங்கை. என் குடும்பத்தில் அக்கா, தம்பி, தங்கைமார் இருவர். நாவலில் செந்தில் தந்தையை இள வயதில் இழந்து  விடுகின்றான். நானும் அப்பொழுதுதான் இழந்திருந்தேன். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலகட்டம். செந்திலின் உணர்வுகளை அவனையொத்த,  என்னையொத்த இளைஞர்கள் பலரும் அடைந்திருப்போம். அது நாவலின் வெற்றிக்குக் காரணம்.

சரளமான, எங்கும்  தொய்வற்ற , மொழி நடை.  சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட கதைப்பின்னல் நாவலின் வெற்றிக்கு  முக்கிய காரணங்கள் .  இதனையொத்த நாவல்கள் அக்காலகட்டத்தில் பல வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் அவை கூறப்படும் முறையில், அனுபவச் சித்திரிப்பில் தனித்துவமானவை. நாவல் முழுவதும் தவழும் மண் வாசனை. குடும்ப உறவுகளுக்கிடையிலான உறவுச்சிக்கல்கள் மிகவும் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக பதின்ம வயதினரை ஆட்டிப்படைக்கும் காதல் உணர்வுகள், திருமணத்துக்காகக் காத்திருக்கும் மூத்த அக்கா இவையெல்லாம் நாவலில் நன்கு வெளிப்படுகின்றன. நாவலில் மூத்த அக்காவின் உணர்வுகள் விரிவாகக் கூறப்பட்டிருக்கவில்லை. சில வரிகளில் கூறப்பட்டிருந்தாலும் அவை சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதால் மூத்த அக்காவும் மனத்தில் நிலைத்து  நின்று விடுகின்றார். செந்தில், அவன் நெஞ்சுக்குரியவளான தீபா, நண்பன், அண்ணன், அவன் முதலாளி என அனைவரும் நினைவில் நிற்கின்றார்கள். ஆரம்பத்தில் அவனுடன் முரண்பட்டதால், பின்னர் அவனது மூத்த அக்காவைப் பெண் கேட்டு வந்து நிராகரித்துச் செல்லும் ராமநாதனையே பின்னர் செந்தில்,  யாருக்கும் உதவாதவனாகக் கருதப்பட்ட செந்தில் சேர்த்து வைக்கின்றான். ராமநாதனும் மூத்த அக்காவைப்போல் சில வரிகளால் அறிமுகமானாலும் நினைவில் நிற்கின்றான்.அதற்குக் காரணம் தாமரைச்செல்வியின் பாத்திரச்சித்திரிப்புத்தான். 

நாவலின் முடிவு ஆரோக்கியமாக முடிந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. எல்லாராலும் உதவாதவனாகக்  கருதப்பட்ட நிலையில்  செந்தில் எவ்விதம் பொறுப்புள்ள மனிதனாக  உருவாகின்றான் என்பதுதான் நாவலின் மையக்கருத்து. குடும்பச்சுமைகளுடன் தன் காதற் சுமையையும் கூடவே சேர்த்து வாழ்வை  அவன் ஆரம்பிப்பதுடன் நாவல் முடிவுக்கு வருகின்றது. நாவலின் இறுதியில் செந்தில் தன்னுடன் அழைத்து வந்த காதலி தீபாவுக்குக் கூறுவான்: "மற்றவை எனக்குப் பாசச்சுமையென்றால், நீ எனக்கு இன்பச்சுமை".  அக்காட்சியை விபரிக்கும் நாவலாசிரியை கூறுவார் "தீபாவின் நயனங்களிலிலிருந்து அவளது செந்திலுக்காக இ னிய பனிமலர்கள் உருண்டன' . நிச்சயம் வாசகர்களின் உள்ளங்களிலும் இன்பக்குருவிகள் சிறகடித்துப் பறந்திருக்கும்.

(இவ்விதச் சொல்லாட்சி அக்காலத் திமுகவினரின், குறிப்பாக அறிஞர் அண்ணாவின் மொழியை நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரது புகழ்பெற்ற நாவலான 'ரங்கோன் ராதா'வை அவர் இவ்விதம் முடித்திருப்பார்: "'இன்பமே' என்றேன் நான்.  கண்களை ஒரு விநாடி மூடித்திறந்தாள்.  செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள். வசந்தம் வீசிற்று. புன்னகை புரிந்தாள். புது விருந்து உண்டேன்."  தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் திமுகவினரின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றின் பாதிப்புகள் எங்குமிருந்தன.)


'சுமைகள்' நாவல் (வீரகேசரிப் பிரசுரம்) - https://noolaham.net/project/965/96487/96487.pdf


No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...