Monday, August 17, 2026

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சியில்.....


நேற்று ஸ்கார்பரோவிலுள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நடனக்கலைஞர்கள் தயாரித்தளித்த அவர்கள்தம் மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. வானொலி ஊடகக்கலைஞம், திருக்குறளில் மேதமை மிக்கவருமான ஜோதி ஜெயகுமாரின் நெறிப்படுத்தலில் மேடை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பால்யப்பருவத்து மாணவர்கள் பலர் ,அழகான தமிழில் , சிறந்த பேச்சாளர்களைப்போல் ஏற்ற, இறக்கங்களுடன் தம் உரைகளை ஆற்றியது சிறப்பாக அமைந்திருந்தது. நடன நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவிகளுக்கு கலை, இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆளுமைகள் பலர் விருதுச்சான்றிதழ்களை வழங்கினார்கள்.
எழுத்தாளர்கள் பலருக்கு அவர்கள் தம் நூல்களைக் காட்சிப்படுத்தவும் , விற்பனை செய்யவும் மேசைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 'காலம்' செல்வம், அகணி சுரேஷ், வீணை மைந்தன், 'எழுநா' நடராஜா முரளிதரன், மாவலி மைந்தன், குரு அரவிந்தன், அகணி சுரேஷ், தமிழ்நதி, சிவவதனி பிரபாகரன், அரசி விக்னேஸ்வரன் உட்படப் பலர் இவ்வசதியைப் பயன்படுத்திக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இம்முறை எனக்கும் ஒரு மேசை கிடைத்திருந்தது. கனடாவில் நன்கறியப்பட்ட கலை, இலக்கிய ஆளுமைகளான எழுத்தாளர்களான நவம், கனடா மூர்த்தி , 'உதயன்' லோகேந்திரலிங்கம், சிந்தனைப் பூக்கள்' பத்மநாதன், சோதி மாணிக்கம், கடல் புத்திரன் & சமூக ,அரசியற் செயற்பாட்டாளர் கோணேஸ் எனப்பலரை நிகழ்ச்சியில் காண முடிந்தது.
நிகழ்ச்சி முழுவதும் காணொளிக்காகப் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்ததையும் அவதானித்தேன். விரைவில் நிகழ்ச்சிக்கான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகுமென்று கருதுகின்றேன்.
நிகழ்ச்சியில் சிற்றுண்டி வகைகள் மதிய உணவு மற்றும் மதிய உணவு வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றிய எழுத்தாளர்கள், பதிப்பகத்தாருக்குப் பங்கு பற்றியமைக்காகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த 'சோக்கல்லோ' சண்முகம் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. அத்துடன் என் முகநூற் பதிவுகளையெல்லாம் தவறாது வாசித்து வரும் அவரைச் சந்தித்தபோது எனக்கும் மகிழ்ச்சியே. அவரைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படமிது.
சிறப்பாக நடத்திய , பயனுள்ள முயற்சி. அதற்காகக் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கும், அதன் தலைவர் எழுத்தாளர் ரவி கனகசபை, மற்றும் இணையத்தின் செயற்குழுவினர்களுக்கும் பாராட்டுகள்.

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...