Tuesday, August 25, 2026

கவிதை: வீரியம் குன்றாத விண்மீன்கள்! - வ.ந.கிரிதரன் -



வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல் 
காத்திருப்பார்கள். 
காத்திருக்கும் காலத்தில் 
காலத்தை ஓட்டியது தவிர
வேறென்ன செய்தார்கள்?
விருது பற்றிய அறிவிப்பு 
வந்து விட்டால் போதும்
வீரம் மிகுந்து விடும்.
கர்ச்சனை செய்வார்கள்.
பாய்ந்து  
கொத்திக் குதறி எடுப்பார்கள்
விருதையும், 
விருது பெற்றவரையும்.
சில சமயங்களில் இவர்கள் 
மெளனித்திருப்பார்கள்.
மெளனத்திற்குக் காரணம் 
அச்சமயம் இவர்கள்தம்
நட்புக்குரியவர்களுக்கு 
விருதுகள் கிடைத்திருக்கும்.
எத்தனையோ விருதுமீன்கள்
இலக்கிய வானில் கொட்டிக் கிடக்கின்றன.
சிலவற்றின் 
ஒளிர்வடர்த்தி அதிகம்.
இன்னும் சிலவற்றின் 
ஒளிவடர்த்தியோ 
கண்களுக்கும் தெரிவதில்லை.
அவை 
இவர்கள் கண்களுக்கும்
தெரிவதில்லை.
அப்போதெல்லாம் இவர்கள் 
கர்ச்சித்துப் பொங்குவதில்லை.
மெளனித்துக் கிடப்பார்கள்.
ஆனால்,
சுடர் அடர்த்தி மிகுந்தவை 
தூங்கிக் கிடக்கும்  இவர்களை 
எழுப்பி விடும்.
பிறகென்ன, 
இரவும் பகலும் 
இவர்கள் கூக்குரல்களால்
மின்வெளி நிறைந்திருக்கும்.
தாமே படைப்புக் கடவுள்கள்
என்ற இறுமாப்புக்குப் பங்கம் 
விளைவிக்கும் 
விருதுமீன்கள் 
இவர்கள் சீற்றத்தை  அதிகரித்து  
விடுவதொன்றும்
ஆச்சரியப்படத்தக்கதல்ல.

நரிகள் ஊளையிடுவதால்
நள்ளிரவிலும் சுடர்விடும் 
விண்மீன்களின் சுடர்களின்
வீரியம் 
குறைந்து விடுவதில்லை.


No comments:

கவிதை: வீரியம் குன்றாத விண்மீன்கள்! - வ.ந.கிரிதரன் -

வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல்  காத்திருப்பார்கள்.  காத்திருக்கும் காலத்தில்  காலத்தை ஓட்டியது தவிர வேறென்ன செய்தார்கள்? விருது பற்றிய அ...