Monday, August 17, 2026

எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்' நல்லதொரு சிறுவர் நூல்!


குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு முக்கியம். ஆங்கிலத்திலும் , தமிழிலும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அது இந்நூலின் நல்லதோர் அம்சம்.

சிறுவர் இலக்கியம் மானுட சமுதாயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. குழந்தைகளே நாட்டின் எதிர்கால நாயகர்கள். அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதொரு படிக்கட்டு சிறுவர் இலக்கியம்.  

குழந்தைப்பருவம் வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்ளும் பருவம் அல்ல. பாடசாலை,  வீடு என்று வண்ணத்துப் பூச்சிகளாகச் சிறகடிக்கும் காலகட்டம். இப்பருவத்தில் அவர்கள் உள்ளங்களில் நல்ல சிந்தனைகளை வளர்ப்பது அவசியம். நாம் வாழும் மண், அதன் பண்பாட்டின் ஆரோக்கியமான அம்சங்களில் கவனத்தைத்  திருப்புவது அவசியம்.  நாம் வாழும் இப்பூமி பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். இப்பூமி இருக்கும் சூரியக் குடும்பம்,சூரியக் குடும்பங்கள் இருக்கும் பிரபஞ்சம்  இவற்றை அறிந்து கொள்ள வைப்பது அவசியம். கற்பனைத்திறனை வளர்ப்பது அவசியம். மொழித்திறனை அதிகரிக்க வைப்பது அவசியம்.  இள வயதிலேயே வாசிக்கும் ஆர்வத்தை உருவாக்குவது அவசியம். வாசிப்பில் மனதொன்றிக்கிடப்பது மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க வைக்கின்றது. அவ்விதம் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்ப்பது அவசியம். வாசிப்பு ஒரு பொழுது போக்கு, அந்தப் பொழுது போக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை மிக்கது.  அவ்விதம் மனத்தை இன்பமாக வைத்திருப்பது அவசியம். இவை அனைத்தையும் செய்கிறது குழந்தை இலக்கியம்.

சிறுவயதில் நாம் அனைவரும் படித்த 'Twinkle Twinkle Little star' குழந்ந்தைப்பாடலை மிகவும் அற்புதமானதொரு வானியல் சார்ந்த குழந்தைப்பாடலாகவும் கருதலாம். இப்பாடலின் வரிகள்  நான் அண்ணாந்து விரிந்திருக்கும் வானைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்,. உயரத்தில் அங்கே  யாராவது எம்மைப்போல் இருக்கிறார்களா என்னும் கேள்வியை எழுப்பும் பாடல் இது. அவ்வகையில் எனக்கு மிகவும் பிடித்த குழந்தைப்பாடல்களில் ஒன்று இந்தப்பாடல். இப்பாடல் செய்வதைத்தான் குழந்தைகளுக்கான அறிவியல் நூல்களும் செய்கின்றன.

எழுத்தாளர் குரு அரவிந்தன்

அறிஞர்கள் பலரை அவர்கள்தம்   குழந்தைப்பருவத்தில் அவர்கள் வாசித்த குழந்தை இலக்கியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களே  எதிர்கால அறிஞர்கள் ஆக்கியுள்ளன என்பதைக் கண்டிருக்கின்றோம். சிறுவயதில் ஐன்ஸ்டைனை அறிவியல் துறைக்குத் தள்ளியது அவரது மாமா ஒருவர் அவருக்குக் கொடுத்த திசையறி கருவியே. அத்திசையறி கருவியைப் போன்றதுதான் குழந்தைகள் இலக்கியமும் . குறிப்பாகக் குழந்தைகளுக்கான அறிவியல் இலக்கியம். அவ்வகையில் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்', மிகச்சிறந்ததொரு குழந்தைகளுக்கான் நூலாகக் கருதுவேன்.  

இன்னுமொரு முக்கிய விடயம் - இதில் வானம் ஏன் நீல நிறம் என்றொரு கேள்விக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இன்னுமொரு விடயத்தையும் எதிர்காலத்தில் சேர்க்கலாம், அதனைக் கண் டு பிடித்தவர் சேர். சி.வி.ராமன். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது. அதுதான்  அவரது ஒளிச்சிதறல் கண்டு பிடிப்பு.  வானம் நீல நிறமாக இருப்பதே கடலின் நீல நிறத்துக்கும் காரணம் என்று நம்பப்பட்டு வந்த சூழலில் அவ்வாறில்லை, அதன் காரணம் கடல் நீரில் நிகழும் ஒளிச்சிதறலே என்று கண்டு பிடித்தார் சி.வி.ராமன், அதுவே அவரது புகழ்பெற்ற, அவருக்கு நோபல் பரிசினைப் பெற்றுக்கொடுத்த 'ஒளிச்சிதறல்' கண்டு பிடிப்பாகும். 'ராமன் நிறமாலை' இன்று மருத்துவம் உட்பட நவீனத்தொழில் நுட்பங்கள் பலவற்றில் பயன்பட்டு வருகின்றது.

இவ்விதமான சிறுவர் நூலில் , குறிப்பாக வானம் ஏன் நீலமாக இருக்கிறது? கடல் ஏன் நீலநிறமாக இருக்கிறது போன்ற நூல்களில் சி.வி.ராமன்  போன்ற அறிவியல் அறிஞர்களின் கண்டு பிடிப்புகளையும் உள்ளடக்குவது வாசிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலக் கனவுகளை உருவாக்கும் சாத்தியங்களை அதிகரிக்கும். இந்நூலின் மறு பதிப்பில் இவ்வித விடயங்களையும் உள்ளடக்குவது பற்றியும் குரு அரவிந்தன் சிந்திக்கலாம்.

இந்த நூல் எனக்கு என் பால்யப்பருவத்து வாசிப்பு அனுபவங்களை நினைவூட்டியது. பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான சிறுவர் பக்கங்களை நினைவூட்டியது. என் எழுத்துலக வாழ்க்கை ஈழநாடு (யாழ்ப்பாணம்)  பத்திரிகையின் 'மாணவர் மலர்' மூலமே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலைப் பருவத்தில் உயிரியல் கற்பிக்க வந்து 'வானியலை' அறிமுகப்படுத்திய ஆசிரியரை நினைவூட்டியது. கல்கியில் விரும்பி வாசித்த வாண்டுமாமாவின் 'சிறுவர் விருந்து' பக்கத்தினை நினைவூட்டியது. இரவு நேரங்களில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப் பார்த்து வியந்து கிடந்த பொழுதுகளை நினைவூட்டியது.

சிறந்ததொரு சிறுவர் நூலைத்  தந்திருக்கின்றார் எழுத்தாளர் குரு அரவிந்தன்.  இந்நூல் அவர் பல்லாண்டுகளாக நடத்தி வரும் 'தமிழ்  ஆரம்' சஞ்சிகையின் சிறுவர் மலராக வெளிவந்திருக்கின்றது. அதற்காக அவருக்கு வாழ்த்துகளும் , பாராட்டுகளும்.



No comments:

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை! வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 5...