Monday, August 24, 2026

ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'


எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது.  அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.


இந்தத்தொடர்கதை வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனால்தான் அதே பாணியிலான இன்னுமொரு தலைப்பில் அவர் பின்னர் 'நந்தா என் நிலா' என்னும் தொடர்கதையினை எழுதினார். அதனை நான் வாசிக்கவில்லை. அதற்கும் 'நீ நான் நிலா'வுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

நீ நான் நிலா அப்போது தினமணிக்கதிர் ஆசிரியரான எழுத்தாளர் சாவியின் தூண்டுதலின் பேரில் தான் எழுதிய, தனது முதலாவது நாவல் என அந்நாவல் பின்னர் இரு தொகுதிகளாக நூலுருப்பெற்றபோது அதன் முன்னுரையில் ஶ்ரீ வேணுகோபாலன் குறிப்பிட்டிருக்கின்றார்.


ஶ்ரீ வேணுகோபாலனாக எழுதியவரை புஷ்பா தங்கதுரையாக்கியவரும் சாவிதான் என்று நினைக்கின்றேன். புஷ்பா தங்கதுரையாக அவர் எழுதிய முதலாவது நாவலும் தினமணிக்கதிரில் வெளியான புகழ்பெற்ற நாவல். அது பின்னர் திரைப்படமாகவும் . கமல் ,சுஜாதா ,  ராஜேஷ் நடிப்பில் வெளியானது. வெற்றிப்படம். அது - 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'.


நீ நான் நிலா வாசகர் நெஞ்சை உருக்கும் காதல் கதை. கதையின் நாயகனின் காதலுக்குரியவள் முடிவில் இறந்து விடுகின்றாள். இறக்கும் தருணம் அவன்  மேலுள்ள தன் காதலை, அவனுடன் பழகிய பொழுதுகளைப்பற்றியெல்லாம் தன் தங்கையிடம் கூறி அவள் தானாக அவனுடன் இணைய வேண்டுமென வேண்டுகோளை வைக்கின்றாள். அதனை நாயகன் பாபுவும் ஏற்றுக்கொள்வதுடன் கதை முடிகின்றது.

நீ நான் நிலா தொடர் நாவலுக்குப் பின்னர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி கல்கியில் எழுதிய தொடர்நாவல் 'தீராத விளையாட்டு'. அதுவும் ஒரு காதல் கதை. அதில் காதலுக்குரியவளுடன் இணைய முடியாமல் , அவள் இன்னுமொருவனை மணம் முடிக்கும் நிலை ஏற்படுகின்றது.  சமூக வேறுபாடுகள், நாயகனின் சமூகப் பிரக்ஞை போன்றவை காரணமாக அந்நிலை ஏற்படுகின்றது.  இறுதியில் அவள் இறந்து விடுகின்றாள். அவளது தங்கையை நாயகன் மணம் முடிக்கின்றான். இந்த விடயத்தில் தீராத விளையாட்டு நாவலுக்கும், நீ நான் நிலா நாவலுக்குமிடையில் ஒருவித ஒற்றுமை இருப்பதை அவதானிக்கலாம்.

நீ நான் நிலா தொடர்கதையாக வந்தபோது அதற்கு ஓவியங்கள் வரைந்தவர் ஓவியர் கோபுலு.

என் வாசிப்புப்  படிக்கட்டில் ஓர் அழியாத கோலம்தான் ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'






No comments:

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்

தகழி சிவசங்கரப் பிள்ளை எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journa...