Sunday, December 30, 2018

தொடர் நாவல்: குடிவரவாளன் (20 - 23) - வ.ந.கிரிதரன் --

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் 'நடுத்தெரு நாராயணன்'. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:


இளங்கோவுக்கோ சட்டவிரோதமாக நடைபாதையில் அவ்விதம் பொருட்கள் விற்பதற்குச் சிறிது தயக்கமாகவிருந்தது. அவனுக்கு இந்திராவைப் பார்த்தால்தான் சிறிது பாவமாகவிருந்தது. நடுத்தெருவில் அவளை அவ்விதம் விட்டுவிட்டுப் போய் விட்ட நடுத்தெரு நாராயணின்மேல் சிறிது கோபமாகவுமிருந்தது. இத்தகைய பாவ, கோப உணர்வுகளுடன் அவன் அவளிடம் "இவ்விதம் நடுத்தெருவில் நின்று விற்பதற்குத் தயக்கமாகவோ அல்லது பயமாகவோ இல்லையா?" என்று கேட்டான். அதற்கு அவள் சிரித்தவாறு பதிலளித்தாள்:

"ஆரம்பத்தில் இவ்விதம்தான் பயமாகவிருந்தது. ஆனால் போகப் போகப் பயமெல்லாம் போயே போய் விட்டது. பழகப் பழக எல்லாமே பழகிவிடும் இல்லையா? அது போல்தான்."

"உண்மையாகத்தான் சொல்லுகிறீர்களா? இப்போழுது இங்கே ஒரு காவற்துறை அதிகாரி வந்து நடைபாதையில் விற்பதற்குரிய பத்திரங்களெங்கேயென்று கேட்டால் என்ன செய்வீர்கள்?"

"அதற்கும் அவர் சுலபமானதொரு வழியைச் சொல்லித் தந்திருக்கிறாரே"

"என்ன வழி?"

"அப்படி யாராவது வந்து கேட்டால் எனக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை என்று கூறி விடுவேன்..."

"அதெப்படி.. நீங்கள் இங்கு நின்று கொண்டு அபபடியெப்படி இவ்விதம் கூறலாம்?"

"அதுவும் மிகவும் சுலபம். 'நான் இங்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தவள். கடைக்காரரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இனி இது உங்கள் பொறுப்பு' என்று நழுவி விடுவேன்"

இளங்கோவுக்கு அவளது பதில் ஆச்சரியத்தைத் தந்தது.

"நீங்கள் உண்மையிலேயே மிகுந்த தைரியசாலிதான். என்னால் இவ்வளவு துணிந்து பொய் கூற முடியாது. அதுசரி அப்படி நீங்கள் கூறி நழுவி விட்டால் இங்குள்ள விற்பனைப் பொருட்களின் கதி?"

இதற்கு இந்திராவின் பதில் அவனுக்கு மேலும் வியப்பினைத் தந்தது. அவள் கூறினாள்: "அவர்கள எல்லாவற்றையும் அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். அவ்வளவுதான்."

சில சமயங்களில் மாலை நேரங்களில் 'சைனா டவுனி'லுள்ள 'கனால்' வீதியிலும் நடைபாதைகளில் நடுத்தெரு நாராயணன் இவ்விதம் தந்திரமாகப் பொருட்களை விற்பதுண்டு. அத்தகைய சமயங்களில் அவனது மூளை வேறு விதமாக வேலை செய்யும். உதாரணமாக அவ்வீதியிலுள்ள பிரபலமான வர்த்தக நிலையமொன்று மாலை ஆறு மணிக்கு மூடி விடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வர்த்தக நிலையம் இழுத்து இரும்பும் கம்பிகளுடன் கூடிய கதவுகளால் மூடப்பட்டபின்னர்தான் நடுத்தெரு நாராயணன் தன் கடையினை விரிப்பான். எப்படியென்றால்... அந்த வர்த்தக நிலையத்தின் படிக்கட்டுகளில் பொருட்களைப் பரப்பி வைத்து விறபான். யாராவது கேட்டால் அந்த வர்த்தக நிலையத்துக்கும் தனக்கும் இவ்விதம் விற்பதற்குத் தனிப்பட்டரீதியிலான ஒப்பந்தமிருப்பதாகக் கூறிச் சமாளிப்பான். சில சமயங்களில் அவனது இந்தத் தந்திரம் வேலை செய்வதுமுண்டு. அவ்விதம் வேலை செய்யாமல் போய் விடும் சந்தர்ப்பங்களில் முதலை இழக்க வேண்டியதுதான்.

இளங்கோவுக்கு இவ்விதம் வியாபாரம் செய்து கொண்டு எவ்விதம் இலாபம் சம்பாதிக்கிறானிந்த நடுத்தெரு நாராயணன் என்றிருக்கும். அந்தச் சந்தேகம் குரலில் தொனிக்க அவளிடம் பின்வரும் கேள்வியினைக் கேட்டுவைத்தான் இளங்கோ:

"எப்படி இவரால் இவ்விதம் விற்பனையைச் செய்து கொண்டு, முதலையும் அவ்வப்போது இழந்து கொண்டு, தொடர்ந்தும் வியாபாரத்தைச் செய்ய முடிகிறது?"

"அதனால்தான் என்னை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தபோது கடையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த மனுசன் இன்று நடைபாதையிலை வந்து செய்கிற அளவுக்கு மாறியிருக்கிறார்" இவ்விதம் கூறியபொழுது இந்திராவின் குரலில் ஒருவித சோகம் கலந்த தொனி பரவிக்கிடந்ததாகப் பட்டது.

"உங்களுக்கு இவரை முன்பே தெரியுமா?"

அன்று இந்திராவுடன் இளங்கோ அதிக அளவு நேரம் செலவழித்ததன் காரணமாக இருவருக்குமிடையில் சகஜமான உரையாடல் நடைபெறுமளவுக்குரிய சூழல் ஏற்பட்டிருந்தது. இவ்விதமாக அவனுடன் மனந்திறந்து உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவள் கூறினாள்: "உன்னை என் சகோதரனாகக் கருதி கூறுகிறேன். உண்மையில் உன்னுடன் இவ்விதம் கதைப்பது சரியில்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால் கதைக்காமலும் இருக்க முடியவில்லை. இங்கு நான் தனித்துப் போனேன். எனக்கென்று கதைப்பதற்கு யாருமே இல்லை. உறவினரோ, நண்பர்களோ யாருமேயில்லை. அமெரிக்காவில் தானொரு பிசினஸ்காரனென்று ஊர்ப் பத்திரிகையில் இவரது மணமகளுக்கான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து அகப்பட்டு விட்டேன். என் ஆசைக்குக் கிடைத்த பரிசு. எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். வந்தபிறகுதானே எல்லாமே விளங்குது. எனக்கு உண்மையிலேயே ஒரு சந்தேகமும் இவர் விடயத்திலிருக்கு."

இளங்கோவுக்கு அவளது நிலை அனுதாபத்தைத் தந்தது. வியாபாரத்தில் நொடிந்துபோன நிலையிலிருந்த ஹரிபாபு உண்மையிலேயே மிகவும் வயதில் இளமையான இவளைச் சீதனத்திற்காகத் திட்டமிட்டே ஏமாற்றி விட்டானா அல்லது உண்மையிலேயே இவளை அழைத்துவந்ததன்பின்னர் அவனது வியாபாரம் எதிர்பாராத காரணிகளால் நொடிந்து போய் விட்டதா?

"என்ன சந்தேகமா.... பார்த்தால் அவர் சந்தேகபடக்கூடியவராகத் தெரியவில்லையே!"

இதற்குச் சிறிது நேரம் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்தவள் பின் கூறினாள்: "சகோதரனே! நீ மட்டும் இதை யாரிடமும் கூற மாட்டேனென்று சத்தியம் செய்து தந்தாயானால் ஒரு சில வியங்களை நான் உன்னிடம் கூறலாம். ஏனோ தெரியவில்லை. உன்னை நம்ப முடியுமென்று படுகிறது. உன்னுடன் சிறிது மனந்திறந்து கதைப்பதன் மூலம் என் மனப்பாரமாவது சிறிதளவு குறையலாம்போல் படுகிறது."

இதற்கு அவன் கூறினான்: "நீங்கள் நிச்சயம் என்னை நம்பலாம். என்னை நீங்கள் உங்களது உண்மையான சகோதரர்களிலொருவனாக எண்ணிக் கொள்ளலாம். அந்த நம்பிகையினை நான் நிச்சயம் காப்பாறுவேன்."

இதற்கும் சிறிது நேரம் அமைதியாக இருந்த இந்திரா "இவரது நடத்தையினைப் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே இவரது மனம் சாதாரணமாகத்தானிருக்கிறதா என்ற சந்தேகம்தான் அதிகமாகிறது. இல்லாவிட்டால் எந்தவிதப் பொறுப்புமில்லாமல் எவ்விதம் இவரால் இவ்வளவு எளிதாகக் கள்ளத்தனமாக வேலைகளையெல்லாம் அநாயாசமாகச் செய்யமுடிகிறது? இவரது மனம் உண்மையிலேயே சரியாகத்தானிருக்கிறதா?" என்று அவனை அதிர்ச்சியடையக் கூடியதொரு குண்டினைத் தூக்கிப் போட்டபொழுது நடுத்தெரு நாராயணான ஹரிபாபு அன்றைய தன் சோலிகளை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான். இந்திராவோ இளங்கோவை நோக்கி 'என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே' எனறொரு பார்வையை வீசிவிட்டு இயல்பாக நிற்பதற்கு முயன்றுகொண்டிருந்தாள்.

அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்...

"என்ன பையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்" என்று வந்ததும் வராததுமாக இளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன் மனைவியின் பக்கம் திரும்பி "கொஞ்சநேரம் தனியாக வியாபாரத்தைக் கவனித்துக் கொள். கொஞ்சநேரம் நான் இளங்கோவுடன் நமது வியாபாரம் பற்றிய முக்கியமான விடயம் பேச வேண்டும்." என்றான்.  இளங்கோவுக்குச் சிறிது ஆச்சரியமாகப் போய்விட்டது. வந்ததும் வராததுமாகக் ஹரிபாபு இவ்விதம் கூறியது அவன் எதிர்பார்க்காததொன்று. ஹரிபாபுவின் உளவியல் பற்றிச் சற்று நேரத்துக்கு முன்னர் அவன் மனைவி கூறியவை நினைவுக்கு வரவே இலேசாகப் புன்னைகையொன்றும் மலர்ந்தது. அதனை அவதானித்த ஹரிபாபு "என்ன சிரிக்கிறாய். நான் வேடிக்கையாகக் கூறுகிறேனென்று நினைத்து விட்டாயா? இல்லை. மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிக் கதைக்கத்தான் அழைக்கிறேன். கடந்த சில நாட்களாகவே இது பற்றி உன்னுடன் கதைக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் முடிவெடுத்தேன். வா.அங்குள்ள உணவகத்துக்குச் சென்று சிறிது நேரம் தேநீர் அருந்தி, கதைத்து வருவோம்" என்று கூறவும் இளங்கோ அவன் கூறப்போகும் அந்த முக்கியமான விடயம் என்னவாகவிருக்குமெனத் தனக்குள் எண்ணியவனாகக் ஹரிபாபுவைப் பின் தொடர்ந்தான்.

இருவருக்கும் ஹரிபாபுவே தேநீர் வாங்கி வந்தான். இளங்கோவுக்கு அருகில் அமர்ந்தவனாக அவனே முதலில் உரையாடலை ஆரம்பித்தான்: "இளங்கோ. உனக்கும் அருள்ராசாவுக்கும் நான் மிகவும் நன்றி கூறவேண்டும். இதுவரையில் நீங்கள் செய்த உதவியை ஒருபோதுமே மறக்க மாட்டேன்"

இளங்கோ ஹரிபாபுவையே மெளனமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தான். ஹரிபாபு தொடர்ந்தான்: "என்னுடைய வியாபாரம் மீண்டும் மந்தமடைய ஆரம்பித்து விட்டது. இனி விற்பதுக்கும் அதிகமாகப் பொருட்கள் எதுவுமில்லை. உங்கள் புண்ணியத்தில் தேங்கிக் கிடந்த பித்தளைச் சிலைகள், ஆபரணங்கள் போன்றவற்றிலும் கணிசமான அளவுக்கு விற்று விட்டோம். இந்த நிலையில் என்னிடமுள்ளவற்றை விற்பதற்கு என்னையும் என் மனைவியையும் தவிர மேலதிகமாக ஆட்கள் தேவையில்லையென நினைக்கிறேன். மேலும் என் மனைவியும் இன்னுமொரு வாரங்களில் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யப் போகிறா. அதன் பிறகு நான் மட்டுமே இதனைக் கவனிக்கப் போகிறேன். ஹென்றியும் அதுமுதல் தன் வியாபாரத்தை மீண்டும் தொடங்க இருக்கிறான்."

இளங்கோவுக்கு விடயம் விளங்கி விட்டது. இங்கும் அவனது வேலை வழக்கம்போல் தொடரப் போவதில்லை. அடுத்த வேலைக்கு மீண்டும் முழு மூச்சுடன், வீச்சுடன் முயன்று பார்க்க வேண்டியதுதான். உறுதியான கைகளும், கால்களும், உள்ளமும், மேலே விரிந்திருக்கும் ஆகாயமும், கீழே பரந்திருக்கும் பூமியுமிருக்கையில் அச்சப்படுவதற்கென்னவிருக்கிறத. இருப்புக்கான இந்தப் போராட்டத்தில் முடிந்தவரை போராடிப் பார்க்க வேண்டியதுதான்.

ஹரிபாபு இறுதியில் இவ்விதம் கூறினான்: "நாளைக்கு நீ மட்டும் வேலைக்கு வந்தால் போதுமானது. உன் நண்பன் வரத் தேவையில்லை. நாளையிலிருந்து நீயும் வரவேண்டிய தேவையில்லை. ஆனால் அதற்காகத் தொடர்புகளை விட்டுவிடாதே. மீண்டும் எனக்கு உங்களது உதவி தேவைப்பட்டால் அழைப்பேன். அச்சமயம் உங்களுக்கும் தற்போதுள்ளதைப்போல் நேரமிருந்தால் வந்து உதவலாம்"

இதற்கு இளங்கோவின் பதிலிவ்விதமாகவிருந்தது: "நிச்சயமாக உங்களுக்கு உதவத் தயாராகவேயிருக்கிறோம். எங்கள் வாழ்வின் சோதனையானதொரு காலகட்டத்தில் நீங்கள் செய்த உதவியை நிச்சயம் நாங்கள் மறக்கவே மாட்டோம். குறுகியகாலமே உங்களுடன் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்ததென்றாலும் எங்கள் நேரமறிந்து நீங்கள் செயத இந்த உதவி இந்த உலகைவிட மிகப்பெரியது. எங்கள் இலக்கியத்தில் இதுபற்றிய அழகானதொரு கவிதையேயுண்டு. 'காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது' என்று இரு அடிகளில் ஒரு கவிஞன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிச் சென்றிருக்கிறான்"

இவ்விதம் இளங்கோ மிகவும் விரிவாக நன்றி கூறிப் பதிலளித்தவிதம் ஹரிபாபுவைச் சிறிது நெகிழவைத்தது. அத்துடன் அவன் "உங்களது நிலை என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. உங்கள் நாட்டு நிலை விரைவில் சீரடைந்து நீங்கள் உங்கள் குடும்பத்தவர்களுடன் சேர நான் எப்பொழுதுமே பிரார்த்திப்பேன். நீ மிகவும் பெருந்தன்மையாக எனக்கு நன்றி கூறினாலும் உண்மையில் உங்களது கவிஞன் கூறியது எங்களுக்கு நீங்கள் செய்த உதவிக்குத் தான்மிகவும் பொருந்தும். காலமறிந்து நீங்களளிருவரும் செய்த இந்த உதவியினை நாங்களும் நிச்சயம் மறக்க மாட்டோம். மற்றது..." என்று கூறிச் சிறிது நிறுத்தினான்.

"மேலே கூறுங்கள் ஹரிபாபு" என்றுவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திருந்தான் இளங்கோ. ஹரிபாபு தொடர்ந்தான்: "நீங்கள் விரும்பினால எனது கடையில் இலவசமாக , உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் மட்டும், தங்கலாம். எனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. அங்கு விற்பதற்குரிய பொருட்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால்..."

"ஆனால்..."

"ஆனால்... குளிப்பதற்குரிய வசதிகளில்லை. கழிவறை மட்டும்தானுள்ளது. முகம் கழுவலாம். குளிப்பதற்கு வேண்டுமானால் என்னிருப்பிடத்தில் வந்து குளிக்கலாம். என்ன சொல்லுகிறாய்?"

இளங்கோவுக்கு ஹரிபாபுவின் யோசனை பிடித்திருந்தது. "தற்போது எங்களுக்கு இருப்பிடப் பிரச்சினையேதுமில்லை. ஆனால் எல்லாம் எங்களுக்கு வேலை கிடைப்பதைப் பொறுத்திருக்கிறது. எதற்கும் அருள்ராசாவுடனும் இதுபற்றிக் கதைத்துவிட்டு என் பதிலைக் கூறுகிறேன். நீங்கள் இவ்விதம் கேட்டது உங்களது நல்ல உள்ளத்தைத்தான் காட்டுகிறது. நன்றி ஹரிபாபு. குளிப்பது பிரச்சினையென்றாலும் அவ்வப்போது உங்களிருப்பிடத்தில் வந்து குளிப்பதுவும் அவ்வளவு சிரமானதல்ல எங்களது தற்போதைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது."

அன்று மாலை ஹரிபாபுவுக்கும், அவனது மனைவி இந்திராவுக்கும் நன்றி கூறிவிட்டுத் தன்னிருப்பிடம் நோக்கித் திரும்புவதற்காக இளங்கோ திரும்பிக் கொண்டிருந்தபொழுது அவனது கவனத்தைக் கிறிஸ்தோபர் வீதியிலிருந்த தோலாடைகளை விற்பனை செய்யுமொரு இத்தாலியனின் ஜவுளிக்கடை கவர்ந்தது. கடையின் கண்ணாடி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரம்தான் உண்மையில் அவனது கவனத்தைக் கவர்ந்ததென்று கூறவேண்டும். அதில் 'எங்களது விளம்பரங்களை மாலை நேரத்தில் இச்சுற்றாடலில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது விநியோகம் செய்வதற்குப் பணியாட்கள் தேவை. ஆர்வமுள்ளவர்கள் உள்ளே வந்து விண்ணப்பிக்கவும்' என்று எழுதப்பட்டிருந்தது. இளங்கோவுக்கு அவ்விளம்பரம் எத்தகைய மகிழ்ச்சியினைத் தந்ததென்று கூறத் தேவையில்லை. உடனடியாகவே உள்ளே நுழைந்தான். அவன் ஜன்னலிருந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஏற்கனவே அவதானித்துக் கொண்டிருந்த அக்கடையின் சொந்தக்காரனான இத்தாலியன் "நண்பனே! நான் உதவி உனக்குச் செய்யலாமா?" என்று கூறியவாறே அருகில் வந்தான்.

அதற்கு இளங்கோ "நிச்சயமாக" என்றவன் தொடர்ந்து "நீங்கள்தான் இக்கடையின் சொந்தக்காரரா" என்றான். அதற்கு அந்த இத்தாலியன் "சரியாகச் சொன்னாய் நண்பனே! நானேதான் இக்கடையின் உரிமையாளன். கார்லோ இந்தக் கடையின் சொந்தக்காரன்தான். என்ன விழி பிதுங்குகிறாய். கார்லோ என்பது எனபெயர்தான். அதுசரி உன் பெயரென்ன?" என்றான்.

இளங்கோவுக்கு கார்லோவென்னும் அந்த இத்தாலியனின் உரையாடற்போக்கு சிறிது ஆச்சரியத்தைத் தந்தது. ஏனோ தெரியவில்லை அச்சமயத்தில் அவன் ஹரிபாபுவை ஒருகணம் நினைத்துக் கொண்டான்.

"என் பெயர் இளங்கோ.. நானும் இச்சமயத்தில் வேலை பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்..."

இத்தாலிய உரிமையாளன் கார்லா: "நாங்களா.... மற்றது யார்?"

இளங்கோ: "அவன் என் நண்பன். இருவரும்தான் வேலை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் விளம்பரங்களை விநியோகம் செய்யப் பணியாட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் அறிவித்திருக்கிறீர்கள். அந்த வேலை பற்றித்தான் மேலதிகமாக அறிய விரும்புகிறேன்."

கார்லா: "நீ முன்பு இதுபோல் ஏதாவது விளம்பர விநியோகம் செய்திருக்கிறாயா?"

இளங்கோ: "இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரையில் கடுமையாக வேலை செய்வேன்"

அவனது பதிலும் அதில் கலந்திருந்த உண்மையான உணர்வும், ஆர்வமும், உற்சாகமும் அந்த இத்தாலிய உரிமையாளனைக் கவர்ந்தது. அதன் விளைவாக அவனது அடுத்து வந்த சொற்களிருந்தன: "உண்மையில் உன்னைப் போன்ற ஆர்வமும், உற்சாகமும் மிக்க உண்மையான பணியாட்களே எமக்குத் தேவை. குறைந்தது மூன்று வாரங்களாவது எமக்கு உனது உதவி இந்த விடயத்தில் தேவைப்படும். நீயும் , உனது நண்பன் விரும்பினால் அவனும் எமக்கு இந்த விடயத்தில் உதவலாம். நாங்கள் குறிப்பிடும் இரு சந்திகளில் நீ ஒரு சந்தியிலும், உனது நண்பன் அடுத்த சந்தியிலும் எங்கள் விளம்பரங்களை விநியோகிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆறு நாட்களும் திங்கள் முதல் சனி வரை , குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் இவ்விதம் விநியோகிக்க வேண்டும். மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் தருவோம். பகுதி நேரமாக எழுபத்தி இரண்டு டாலர்கள் வாரத்திற்கு உழைக்கலாம். விரும்பினால் நாளைக்கே நீயும் உனது நண்பனும் வேலையை ஆரம்பிக்கலாம். இப்பொழுதே நீ உன் பதிலைக் கூறத்தேவையில்லை. வீடு சென்று உனது நண்பனுடனும் இதுபற்றி ஆறுதலாகக் கதை. இருவரும் விரும்பினால் நாளை மாலை உன் நண்பனையும் அழைத்துக் கொண்டு வந்து வேலையை ஆரம்பி"

ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்குமென்று கூறுவது இதனைத்தானென்று பட்டது இளங்கோவுக்கு. மனதில் இலேசானதொரு உணர்வு படர்ந்தது. ஒரு வாரத்துக்கு 72 டாலர்கள். வீட்டு வாடகைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உணவுக்கும் போதுமானது. இத்தாலியத் துணிக்கடைக்காரன் கார்லோவின் புண்ணியத்தில் ஒருவாறு இன்னும் சிறிது காலம் வண்டியோட்டலாமென்று பட்டது.


அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!

இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்" என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் "ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்" என்றான்.

"அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?"

"கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை 'இமிகிரேசன்' அலுவலைப் பார்க்கலாம் இல்லையா..."

அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. "ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு... எல்லாமே நல்லதுக்குத்தான். பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?"

"நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.."

"இல்லாவிட்டால்... கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது... இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக் கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் 'பார்ட்டி'யோடை எல்லாமே சரி..."

"என்ன செய்யிறதடா இளங்கோ... எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே... அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டைத் தந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்.."

அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும் இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார் கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும். பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள் சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது. குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:

'நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ண விளையாட்டை..  இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!

வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பிடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் வீட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். 'பொடியன் அமெரிக்காவிலை' என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் 'பொடியன் இங்கு படுகிற பாட்டை' நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.' இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.

'சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.

விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாக வேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?

நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ

சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே! ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும், ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை? என்னைப் பொறுத்தவரையில் இந்த மண்ணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!'

இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ. இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன. இறுதியாக இவ்விதம் எழுதினான்: -  சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். 'எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!' என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! -

இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.......
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.'

அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக நினைத்துக் கொண்டான்: 'இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.' இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..

அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மானின் அலுவலகத்தை நோக்கி!

கார்லோவிற்காக மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கினான். அருள்ராசா கிறிஸ்தோபர் வீதி, ஏழாவது அவென்யு மற்றும் நான்காவது தெரு மேற்கும் சந்திக்குமிடத்தில் அவற்றை விநியோகிக்கத் தொடங்கினான். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிப்பது பெரிதும் சிரமமானதாகவிருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்த கூச்சமெல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே மறைந்து விட்டது. 'ஒன்றுக்கு இரண்டு. ஒன்று வாங்கினால் இன்னுமொன்று இலவசம். (Two for one!)' இதுதான் கார்லோவின் மலிவு விற்பனை விளம்ப்ர வாசகங்கள். ஒன்றுக்கு இரண்டு என்று கூவிக் கூவி விளம்பரங்களை விநியோகிப்பதும் சிறிது இலகுவாகவிருந்தது. ஒன்றுக்கு இரண்டு என்றதும் நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் நின்று அதுபற்றி விசாரித்தார்கள். அதன்பின் விளம்பரங்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆளுக்கு ஆயிரம் விளம்பரங்களையாவது விநியோகிக்க வேண்டும். அவ்விதம் ஆயிரம் விளம்பரங்களை ஒருவர் விநியோகித்தால் அவற்றை வாங்கிய ஆயிரம் பேரில் குறைந்தது நூறு பேர்களாவது கார்லோவின் கடைக்கு விஜயம் செய்வார்கள். அவர்களில் குறைந்தது பத்துப் பதினைந்து பேராவது ஏதாவது வாங்கிச செல்வார்கள். இவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கும்போது பெரும்பாலும் நடைபாதைவாசிகள் நின்று விசாரித்து வாங்கிச் சென்றதால் வேலை மிகவும் இலகுவானதாகப் பட்டது. அதேசமயம் பல்வேறு வயதினராக, நிறத்தினராக, மொழியினராக, மதத்தினராக, நாட்டினராக நடைபாதைவாசிகளிருந்தார்கள். பலர் அவர்களுடன் சிறிது நேரமாவது நின்று நிதானித்து சிறியதொரு சம்பாசணையினை நிகழ்த்தினார்கள். ஒரு சிலர் அவர்களது பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரித்தார்கள். இன்னும் சிலர் அவர்களது தாய்நாடு பற்றிய தங்களது பூகோளவியல் சம்பந்தமான தமது அறிவினை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுத்தார்கள் அல்லது பகிர்ந்து கொண்டார்கள்.

இளங்கோவைப் பொறுத்தவறையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கையில் மேலும் சிலரின் நட்பினைச் சம்பாதித்துக் கொண்டான். அவர்களிலொருத்தி 'ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா' அமைப்பினச் சேர்ந்த இங்கிரிட். இங்கிரிட் சேலை உடுத்தித் தொலைவிலிருந்து பார்க்கையில் ஓரிந்தியப் பெண்ணாகவே காட்சி தந்தாள். ஆரம்பத்தில் அவளுடனான சந்திப்பு பின்வருமாறு அமைந்திருந்தது.

இளங்கோவை முதன்முதலாக அவ்விடத்தில் விளம்பரங்களுடன் கண்டதும் அந்நடைபாதையிலிருந்து 'ஹரே கிருஷ்ணா! ஹரே ! ராமா!'  அமைப்பினரின் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இங்கிரிட் தானே வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். "ஹாய்! என்பெயர் இங்கிரிட். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா! அமைப்புக்காகத் தொண்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நீ யாருக்காக வேலை செய்கின்றாய். அது என்ன? எவற்றை நீ விநியோகித்துக் கொண்டிருக்கிறாய்?"

அதற்கு அவன் "கார்லோவின் ஆடைக்கடைக்காக விளம்பரங்கள் விநியோகிக்கின்றோம். தற்போது அங்கு ஒன்றுக்கு இரண்டு என்று மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பினால் நீங்களும் ஒருமுறை சென்று பாருங்களேன்." என்று கூறிவிட்டு அவளுக்கும் இரண்டு மேலதிக விளம்பரங்களை கொடுத்தான். அதைச் சிறிது நேரம் வாசித்துவிட்டு அவள் 'பிரயோசனமான மலிவு விற்பனைதான். வேலை முடிந்து செல்லும்போது ஒருமுறை சென்று பார்க்க வேண்டியதுதான்." என்று பதிலுரைத்தாள். அத்துடன் அவள் அவனின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களையும் அனுதாபத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவனதும், அவனது நண்பனினதும் நிலையையெண்ணி அனுதாபம் கொண்ட இங்கிரிட் அவர்களுக்குப் பலனளிக்கக் கூடியதோர் ஆலோசனையினையும் வழங்கினாள். அது வருமாறு: "எங்களது ஆலயத்திற்கு வந்தால் உங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவ்வப்போது வரப்பாருங்கள். உணவுக்கு உணவு. இந்த நகர அலைச்சலிலிருந்து கொஞ்சநேரமாவது நிம்மதியான ஓய்வு". அத்துடன் ஒருநாள் அவர்களிருவரையும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆலயத்துக்கும் அழைத்தும் சென்றாள்.

இவ்விதமாகக் காலம் ஓடிக்கொண்டிருந்த சமயம் திடீரென ஒருநாள் அவர்களது நியுயார்க் சட்டத்தரணி அனிஸ்மானிடமிருந்து அழைப்பொன்று வந்தது. அனிஸ்மானின் சட்ட அலுவலகம் மான்ஹட்டனில் அமைந்ததிருந்த 'அந்நாள்' புகழ் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில், முப்பத்துநான்காவது மாடியில் அமைந்திருந்தது. விரைவில் தன்னை வந்து சந்திக்கும்படி தனது செய்தியினைப் பதிவு செய்திருந்தான். அத்துடன் அவர்களது அகதிக்கோரிக்கை பற்றிய வழக்குகள் மற்றும் வேலை செய்வதற்கான தற்காலிக வேலை அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்பது சம்பந்தமான விடயங்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடத் தான் விரும்புவதாக அந்தச் செய்தியில் அவன் மேலும் தெரிவித்திருந்தான்.

இவ்விதமானதொரு காலகட்டத்தில் ஒருநாள் இளங்கோவும் அருள்ராசாவும் அவர்களது வழக்கறிஞரான அனஸ்மானைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். உலகப் புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்'கில் காலடி வைத்தபொழுது அருள்ராசா கூறினான்:" ஒரு பத்து வருசத்துக்கு முந்தி இதைப்போலை இந்தக் கட்டடத்திலை காலடி வைக்கிறதைப் போலை கனவு கண்டிருப்பியா அல்லது நினைச்சுத்தானிருந்திருப்பியா?"

அருள்ராசாவின் கேள்விக்கு இயலுமானவரையில் நியாயமாக, உண்மையாகப் பதிலளிக்க விரும்பிய இளங்கோ "நீ சொல்லுறது ஒருவிதத்திலை சரிதான். கனவிலை கூட இப்பிடி கண்டிருக்கவில்லைதான்"

இவ்விதமாகக் கதைத்தபடி சென்று கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல் இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானுடனான சந்திப்பு பற்றியே மீண்டும் மீண்டும் வந்து வந்து நின்றது. அனிஸ்மானின் நினைவுடன் இளங்கோ அருள்ராசாவுக்குப் பின்வருமாறு ஞாபகப்படுத்தினான்: "எதுக்காக அனிஸ்மான் இப்படித் திடீரென்று விரைவாக அழைத்திருக்கிறானோ தெரியவில்லை. எதுக்கும் இந்த முறை கட்டாயம் அவனிட்டை வேலைக்கான அனுமதிப்பத்திரம் பெறுவது பற்றியும், அகதிக் கோரிக்கை பற்றிய வழக்கு பற்றிய விபரங்கள்பற்றியும் நிறையக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இவன் ஏன் இருந்தாற்போலை திடீரென்று கூப்பிட்டிருக்கிறானோ?  எனக்கென்றால் ஆச்சரியமாகததானிருக்குது."

அருள்ராசா சிரித்தபடியே "இளங்கோ! இன்னும் கொஞ்ச நேரத்திலை அவனைச் சந்திக்கப் போகிறோம். அவனிடமே கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுறதுதானே! அதுக்குள்ளை என்ன அவசரம்?" என்றான்.

அருள்ராசா இவ்விதம் சிறிது சிரிப்புடன் கூறவும் இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவிருந்தது. அந்த வெட்கத்தை இயலுமானவரையில் மறைததவனாக "இந்த நியூயோர்க் குடிவரவுத் திணைக்களத்தில் ஒரு விடயத்தை எதிர்பார்ப்பதென்பது கல்லிலை நார் உரிப்பது மாதிரி. பார்ப்பம் இந்தக் கல்லிலை நார் உரிப்பதிலை அனிஸ்மான் எந்த அளவுக்குத் திறமைசாலியென்று."

இதற்கு அருள்ராசா " சும்மா சொல்லக் கூடாது. இந்த யூதர்கள் வலு கெட்டிக்காரங்கள். கார்ல் மார்க்சைப் பார்! ஐன்ஸ்டனைப் பார்!  சிக்மண்ட் பிராய்ட்டைப் பார். இன்றைய நோம் சாம்ஸ்கியைப் பார். இப்பிடி எந்தத் துறையிலும் பிரகாசிக்கிறது அவங்கதான். பிசின்சிலை இறங்கி நல்லாக் காசைச் சேமித்து வைக்கிறதும் அவங்கள்தான். இந்தத் தனியுடமையை ஒழிச்சுப் பொதுவுடமையைப் பரப்ப வேண்டுமென்ற புரட்சித் தத்துவததை உலகுக்குப் போதித்ததும் அவங்கள்தான். ஆச்சரியமாயில்லை?". இளங்கோ அதுவரையில் அவ்விதமானதொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்ததில்லை. அருள்ராசா கூறியதும்தான் அவ்விதம் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தான். ஆச்சரியமாகத்தானிருந்தது. இவ்விதமாக உரையாடியபடி நண்பர்களிருவரும் அவர்களது நியுயார்க் சட்டத்தரணியான அனிஸ்மானின் அலுவலகமிருந்த திக்கை நோக்கி நடையைக் கட்டினார்கள்.


[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்