Saturday, December 29, 2018

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலிருந்து..

மிலான் குந்தெராவின் 'நாவலின் கலை' என்னும் நூலிலுள்ள கட்டுரைகளைப் புரட்டிக்கொண்டிருக்கின்றேன். நூலிலுள்ள முதலாவது கட்டுரை "The Depreciated Legacy of Cervantes".. அதில் நாவல் பற்றி, இருத்தல் பற்றி, மனிதர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில கருத்துகளை என் மொழியில் சுருக்கமாகத் தருகின்றேன்.

எட்மண்ட் ஹஸ்ஸேர்ல் வியன்னாவிலும், பிராக்கிலும் ஆற்றிய ஐரோப்பிய மனிதத்துவம் பற்றிய புகழ்பெற்ற உரையில் ஐரோப்பிய விஞ்ஞானம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு பக்கத் தன்மை மிக்கதான ஐரோப்பிய விஞ்ஞானமானது உலகை கணித மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்குரியதொன்றாக மட்டுமே ஆக்கிவிட்டது. மானுட வாழ்க்கையை அதன் கவனத்துக்கப்பால், அதன் எல்லைக்கப்பால் வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியானது மனிதரை விஞ்ஞானத்தின் சிறப்பு விதிகளுக்குள் உந்தித்தள்ளி விட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மனிதர் அறிவில் முன்னேறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு வாழ்வை முழுமையாகவோ அல்லது தம்மைப்பற்றி முழுமையாகவோ அறிந்துகொள்வதில் பின்னேறினார்கள். எட்மண்ட ஹஸ்ஸேட்லின் மாணவரான ஹைடெகரின் புகழ்பெற்ற சொற்றொடரான 'இருத்தலை மறத்தல்' (the forgetting of being) என்னும் சூழலுக்குள் மனிதர் தள்ளப்பட்டுவிட்டார். ரெனெ தெக்கார்தே (Rene Descartes) குறிப்பிட்டதுபோல் மனிதர் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வரலாறு ஆகிய விசைகளால் புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு பொருளாக ஆகி விட்டார். இவ்விசைகளுக்கு மனிதரோ அவர்தம் வாழ்வு பெறுமதியற்றதொன்று. முக்கியத்துவமற்றதொன்று. ஆரம்பத்திலிருந்தே மூடி மறைக்கப்பட்டதொன்று.
நூலாசிரியரைப்பொறுத்தவரையில் நவீன யுகத்தின் பிதாமகர்கள் தெக்கார்தேயும் சேர்வாண்டேசுமே. விஞ்ஞானமும், தத்துவமும் மனிதரின் இருப்பினை மறந்துவிட்டது உண்மையானால், சேர்வாண்டேசின் மூலம் ஐரோப்பியக் கலையானது மறக்கப்பட்டிருந்த மானுட இருப்பு பற்றிய விசாரணையினை மேற்கொண்டது. உண்மையில் ஹைடெகரால் அவரது 'இருப்பும் நேரமும்' நூலின் ஆய்வுக்குள்ளாகியிருந்த இருப்பியல் பற்றிய,அதுவரை ஐரோப்பியத் தத்துவங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்துக்கருதுகோள்களையும் ஐரோப்பிய நாவலானது வெளிப்படுத்தியது. தனக்குரிய வழியில், தனக்குரிய தர்க்கத்தில், ஐரோப்பிய நாவலானது இருப்பின் பல்வகைப்பரிமாணங்களையும் ஒவ்வொன்றாகக் கண்டு பிடித்தது: சேர்வாண்டேஸ் மற்றும் அவரது காலத்துப் படைப்பாளிகள் மூலம் மானுடர்தம் சாகசங்களின் தன்மை பற்றி ஆராய்ந்தது. ரிச்சார்ட்சன் மூலம் மானுட உணர்வுகளின் இரகசிய வாழ்க்கையினை வெளிப்படுத்தும்பொருட்டு மனிதர்தம் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை ஆராய்ந்தது. பால்சாக்கின் மூலம் வரலாற்றில் மானுடரின் காலூன்றல் பற்றி ஆராய்ந்தது. பிளாபர்ட் மூலம் மூடி மறைக்கப்பட்ட மானிடரின் அன்றாட வாழ்வினை ஆராய்ந்தது. டால்ஸ்டாயின் மூலம் மானுடர்தம் நடத்தை மற்றும் தீர்மானங்களில் பகுத்தறிவற்ற போக்கின் தலையீடு பற்றிக் கவனத்தைத் திருப்பியது. மானுடர் இருப்புப்பற்றி இவ்விதம் தன் கவனத்தைத் திருப்பிய ஐரோப்பிய நாவலானது நேரம் பற்றியும் ஆராய்ந்தது: பிரவுஸ்ட் (Proust) மூலம் நழுவிச்செல்லும் கடந்த காலம் பற்றிய அது ஆராய்ந்தது. ஜாய்ஸ் (Joyce) மூலம் நழுவும் நிகழ்காலத்தைப்பற்றிச் சிந்தித்தது. தாமஸ் மான் மூலம் நம் நிகழ்காலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் கடந்த காலத்தொன்மங்கள் பற்றி ஆராய்ந்தது

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்