Saturday, December 29, 2018

நாம் இரசித்த காதல் கடிதமொன்று!

புனைகதைகளில் எத்தனையோ காதல் கடிதங்களை வாசித்திருக்கின்றேன். அவையெல்லாம் காலப்போக்கில் நினைவிலிருந்தும் மறைந்து போய்விட்டன, ஒன்றைத்தவிர. அந்த ஒன்று கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' நாவலில் வரும் கடிதம். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளியான நாவல்களிலொன்று.

இக்கதையின் நாயகன் ரங்கராஜன் தன் தாய் ஜானகியைப்போல் மிகவும் அழகு வாய்ந்தவன். அவனும் அவனது அயல் வீட்டுக்குக் குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் விஜயாவுக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவள் வேறொருவரைத்திருமணம் செய்கின்றாள். பின்னர் அவனுக்கும் வேறொரு திருமணம் நடந்து பல துயர நிகழ்வுகளுக்குள்ளாகிய அவனது வாழ்க்கையில் அவனது முன்னாள் காதலியின் தங்கை எதிர்ப்படுகின்றாள். அவளிடம் அவன் அவளது அக்கா பற்றி விசாரிக்கையில் அவள் இன்னும் தன்னுடன் எடுத்த புகைப்படங்களெல்லாவற்றையும் வைத்திருப்பதாகக் கூறுகின்றாள். அதற்கு அவன் இன்னுமொருவர் மனைவியான அவளது அக்கா தன்னிடம் வைத்திருக்கும் தன் ஞாபகத்தை உணர்த்தும் அனைத்தையும் அழித்துவிட வேண்டுமென்று கூறுகின்றான்.. பதிலாக அவள் தனக்கு எழுதிய கடிதத்தைக்கொடுத்து அதை அவளது அக்காவிடம் கொடுத்து அழித்து விடும்படியும், அவளிடமுள்ள தன்னை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் அனைத்தையும் வாங்கிவரும்படியும் கூறுகின்றான்.


அக்கடிதத்தைப் படித்துப்பார்த்த காதலியின் தங்கை அதன் மொழி நடையில், வெளிப்படும் அன்பில் சொக்கி இதனை எப்படிக் கிழிப்பது என்கின்றாள். அதனை வாங்கி அதிலுள்ள் அவளது அக்காவின் பெயரை அழித்துவிட்டு பதிலாக அதில் தன் பெயரை எழுதி அக்கடிதத்தை மீண்டும் அவனிடமே கொடுக்கின்றாள். அத்துடன் நாவல் முடிகின்றது.

அந்தக் காதல் கடிதம் வெகுசனப்படைப்புகளில் வாசித்த காதற் கடிதங்களில் என்னை ஆகர்சித்ததொன்று. அது இதுதான்:

"பால் வடியும் வதனமே! உனக்குக் கோடி நமஸ்காரம். நீ இல்லாமல் என் மனம் மட்டுமல்ல, இந்த ஊரே வறண்டு கிடக்கிறது. நான் எப்படிப் பொறுமையோடு காத்திருக்க முடியும்? என் பாப்பாக்கள் (கண்ணின் கருமணிகள்) பாலில்லாத குழந்தைகளைப்போல் தாங்க முடியாத பசியால் வாடிப்போய்விட்டன. ஒளி இழந்து உயிர்க்களையும் இழந்து கிடக்கின்றன. உன்னை எப்பொழுது திரும்பவும் காண்பேன்? உன் தரிசனம் மட்டும் எனக்குத் தினம் தவறாமல் கிடைத்துக்கொண்டிருக்கும் என்றால் மற்ற எதற்கும் நான் எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்.

கிராமத்து வெயிலில் திரிய வேண்டாம். என் கண்களைப்போல் நீயும் வறண்டுவிடக் கூடாது. வாடிக் கறுத்துப் போய் விடாதே. எனக்காகக் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு உன் (நான் யாரோ ஏழை என்று வைத்துக்கொள்) - விஜயா "

நாவலில் கிராமத்துக்குச் சென்று விடும் நாயகனின் பிரிவைத்தாங்க முடியாத காதலி எழுதிய காதற் கடிதம்.

எழுத்தாளர் அழகிரிசாமியின் வெகுசன இதழொன்றுக்கான படைப்பென்பதால், வெகுசன இதழ் வாசகர்களின் மனநிலையை உள்வாங்கி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்ட படைப்பு. ஆனால் கதையில் அவ்வப்போது வெளிப்படும் மண்வாசனையும் , ஆசிரியரின் எழுத்து நடையும், பாத்திரச் சித்திரிப்பும் என்னை என்னை மிகவும் கவர்ந்தவை.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்

இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI காலவெளிக் குழந்தைகள் நாம் விரிந்து கிடக்கிறது பேர் அண்டம். புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். இரு...

பிரபலமான பதிவுகள்