என் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது நானென் குடும்பத்தவருடன் வசித்து வந்த வவுனியாவில்; என் பால்ய பருவத்தில். வாசிப்பு என்பது அக்கினிக் குஞ்சு போன்றது. விரைவாகவே பெருஞ்சுவாலையுடன் பற்றியெரியத்தொடங்கிவிடும். அதனால்தான் அக்காலகட்டத்தில் வாசித்த பல்வகை வெகுசன இதழ்களில் வெளியான புனைகதைகளெல்லாம் இன்றும் அழியாத் கோலங்களாக நினைவில் நிலைத்து நிற்கின்றன. அவ்விதம் அவை இன்றும் இனிமை தருவதற்கும் , நினைவில் நிலைத்து நிற்பதற்கும் மிகவும் முக்கியமான காரணம் அவை மானுட வாழ்வின் இனிமையான ஒரு பருவத்தை மீண்டும் நினைவில் கொண்டுவருவதால்தான்.
என் பால்ய பருவத்தில் எவ்விதம் வாசிப்பு என்னை ஆட்கொண்டது என்பது பற்றி அவ்வப்போது முகநூலில் எழுதியிருக்கின்றேன். அம்புலிமாமா, ராணி, ராணிமுத்து, கல்கி, விகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கண்டு, பொம்மை, பேசும்படம், பொன்மலர் (காமிக்ஸ்), பால்கன் (காமிக்ஸ்), வேதாள மயாத்மா பற்றிய இந்திரஜால் காமிக்ஸ் , குமுதம், ஈழநாடு (யாழ்ப்பாணம்), வீரகேசரி, மித்திரன், தினகரன், தினமணி.. இவ்விதம் சஞ்சிகைகளை, நூல்களை வாங்கி வீடெல்லாம் குவித்து வைத்தார் அப்பா. இவற்றுடன் தனக்கு மேலதிகமாக பென்குவின் பதிப்பக நூல்களை, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளையெல்லாம் வாங்கினார் அப்பா. இதனால் என் ஒன்பதாவது வயதிலேயே பெரும்பாலான தமிழகத்தின் வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை, முழுநாவல்களையெல்லாம் தீவிரமாக வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன். இவ்விதம் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதற்காக வீட்டில் எப்போதும் குழந்தைகள் எமக்கிடையில் போட்டி நிலவும். அவ்வப்போது எல்லோரும் சுற்றிவர இருந்து சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை அத்தியாயம், அத்தியாயமாகச் சேகரித்து 'டுவைன்' நூல் கொண்டு , கட்டி வைப்போம்.