Wednesday, October 23, 2019

வாசிப்பும், யோசிப்பும் : கிடைத்தது சாண்டில்யனின் ஜீவபூமி (ராணிமுத்து) - வ.ந.கிரிதரன் -


என் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது நானென் குடும்பத்தவருடன் வசித்து வந்த வவுனியாவில்; என் பால்ய பருவத்தில். வாசிப்பு என்பது அக்கினிக் குஞ்சு போன்றது. விரைவாகவே பெருஞ்சுவாலையுடன் பற்றியெரியத்தொடங்கிவிடும். அதனால்தான் அக்காலகட்டத்தில் வாசித்த பல்வகை வெகுசன இதழ்களில் வெளியான புனைகதைகளெல்லாம் இன்றும் அழியாத் கோலங்களாக நினைவில் நிலைத்து நிற்கின்றன. அவ்விதம் அவை இன்றும் இனிமை தருவதற்கும் , நினைவில் நிலைத்து நிற்பதற்கும் மிகவும் முக்கியமான காரணம் அவை மானுட வாழ்வின் இனிமையான ஒரு பருவத்தை மீண்டும் நினைவில் கொண்டுவருவதால்தான்.

என் பால்ய பருவத்தில் எவ்விதம் வாசிப்பு என்னை ஆட்கொண்டது என்பது பற்றி அவ்வப்போது முகநூலில் எழுதியிருக்கின்றேன். அம்புலிமாமா, ராணி, ராணிமுத்து, கல்கி, விகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கண்டு, பொம்மை, பேசும்படம், பொன்மலர் (காமிக்ஸ்), பால்கன் (காமிக்ஸ்), வேதாள மயாத்மா பற்றிய இந்திரஜால் காமிக்ஸ் , குமுதம், ஈழநாடு (யாழ்ப்பாணம்), வீரகேசரி, மித்திரன், தினகரன், தினமணி.. இவ்விதம் சஞ்சிகைகளை, நூல்களை வாங்கி வீடெல்லாம் குவித்து வைத்தார் அப்பா. இவற்றுடன் தனக்கு மேலதிகமாக பென்குவின் பதிப்பக நூல்களை, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளையெல்லாம் வாங்கினார் அப்பா. இதனால் என் ஒன்பதாவது வயதிலேயே பெரும்பாலான தமிழகத்தின் வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை, முழுநாவல்களையெல்லாம் தீவிரமாக வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன். இவ்விதம் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதற்காக வீட்டில் எப்போதும் குழந்தைகள் எமக்கிடையில் போட்டி நிலவும். அவ்வப்போது எல்லோரும் சுற்றிவர இருந்து சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை அத்தியாயம், அத்தியாயமாகச் சேகரித்து 'டுவைன்' நூல் கொண்டு , கட்டி வைப்போம்.
இவ்விதமாக 'பைண்டு' செய்யப்பட்ட என்னிடமிருந்த முக்கியமான படைப்புகளாகப் பின்வருவனற்றைக் கூறுவேன்:

1. பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்) ஓவியர் வினுவின் கைவண்ணத்தில் வெளியான தொடர்.
2. கல்கியில் வெளியான கோமகளின் 'இனிக்கும் நினைவுகள்'
3. கல்கியில் வெளியான கொத்தமங்கலம் சுப்புவின் 'பொன்னி வனத்துப் பூங்குயில்;.
4. கல்கியில் வெளியான எஸ்.ரங்கநாயகியின் 'குடை ராட்டினம்'.
5. ஜெகசிற்பியனின் 'கிளிஞ்சல் கோபுரம்' (கல்கி)
6. ஜெகசிற்பியனின் 'காணக்கிடைக்காத தங்கம்' (கல்கி)
7.யாரோ இவர் யாரோ - சோ (கல்கி)
8. ஓநாய்க்கோட்டை (சித்திரக்கதை) - வாண்டுமாமா (கல்கி)
9. சிறுவர் விருந்து (கல்கியில் வெளியான சிறுவர் பகுதியின் தொகுப்பு) - வாண்டுமாமா
10. தீராத விளையாட்டு - கு.அழகிரிசாமி - தொடர்நாவல் - கல்கி
11. கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள் - தொடர் நாவல் - (கல்கி)
12. சாருலதா - கி.ராஜேந்திரன் - தொடர் நாவல் - (கல்கி)
13. வேங்கையின் மைந்தன் _ அகிலன் (பைண்டு செய்யப்பட்ட தொடர்நாவலை அண்மையில் கனடாவில் மறைந்த மாமா வவுனியா வருகையில் கொண்டு தந்திருந்தார்)
14. முழுநிலா - உமாசந்திரன் - தொடர்நாவல் - விகடன்
15. ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் - ஜெயகாந்தன் -தொடர்நாவல் - விகடன்
16. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் - தொடர்நாவல் - விகடன்
17.மணக்கோலம் - பி.வி.ஆர் - தொடர்நாவல் - கல்கி
18.மிஸ்.ராதா -கலைமணி (கொத்தமங்கலம் சுப்பு) - தொடர்நாவல் - விகடன்
19.மணியனின் நெஞ்சோடு நெஞ்சம், உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், பிரேமலதா என்னும் பெயரில் எழுதிய லவ் பேர்ட்ஸ் -

தொடர் நாவல்கள் - விகடன்
20. எத்தனை கோடி இன்பம் - குமாரி ரேவதி - தொடர் நாவல் - விகடன்
21. பேசும் பொற் சித்திரமே - சேவற்கொடியோன் - தொடர்நாவல் - விகடன்
22. .நித்திலவல்லி - சரித்திர நாவல் - நா.பார்த்தசாரதி - விகடன்
23. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - தொடர்நாவல் - தினமணிக்கதிர்
24.. விந்தனின் 'விக்கிரமாதித்தன் கதைகள்' - தினமணிக்கதிர்
25. விந்தனின் பாகவதர் கதை - தினமணிக்கதிர்
26. நீ. நான். நிலா - ஶ்ரீ வேணுகோபாலன் - தொடர்நாவல் - தினமணிக்கதிர்
27. ஜெயகாந்தன் கதைகள் - தினமணிக்கதிர்
28. நில்.கவனி. தாக்கு - சுஜாதா - நாவல் - தினமணிக்கதிர்
29. சுஜாதா கதைகள் - தினமணிக்கதிர்
30. ரிஷி மூலம் - ஜெயகாந்தன் - தினமணிக்கதிர்
31. கூந்தலிலே ஒரு மலர் -பி.வி.ஆர் - குமுதம்
32. ராஜமுத்திரை - சரித்திர நாவல் -சாண்டில்யன் - குமுதம் (பாகம்2)
33. அனைக்க! அணைக்க! - புனிதன் - சிறு நாவல் -குமுதம்
34. மூவிரண்டு ஏழு -ரா.கி.ரங்கராஜன் - குமுதம்
35. அடிமையின் காதல் -சரித்திர நாவல் - மோகினி (ரா.கி.ரங்கராஜன்) -குமுதம்
36. சென்ரல் - பி.வி.ஆர் - தொடர் நாவல் - கல்கி
37. கதம்பாவின் எதிரி - ஐ.ரா.சுந்தரேசன் - குமுதம் (தொடர் நாவல்)
38. புரொபஷர் மித்ரா - கிருஷ்ணகுமார் - தொடர்நாவல் - குமுதம்
39. சித்திரப்பாவை - அகிலன் - தொடர்நாவல் - விகடன்
40. பேசும் சிலை (சிறுவர் நாவல்) - ராணி
41. சிவப்புச் சேலை - நாஞ்சில் பி.டி.சாமி - மர்ம நாவல் (ராணி)
42. டில்லியில் சுயம்வரம் - சாவி _ எதிர்ப்புக் காரணமாக இடை நடுவில் நிறுத்தப்பட்ட நகைச்சுவைத்தொடர் - தினமணிக்கதிர்
43. கடலும், மலையும் - பாவை பார்வதி - கலைமகள் - நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற தொடர் நாவல்
44. யுகசந்தி - தொடர்நாவல் - கல்பனா - கலைமகள்
45. மூடுபனி - தொடர்நாவல் - மாயாவி - கலைமகள்
46. போராட்டங்கள் - ர.சு.நல்லபெருமாள் - தொடர்நாவல் - கல்கி
47. எண்ணங்கள். எண்ணங்கள் - ர.சு.நல்லபெருமாள் - தொடர்நாவல் - கலைமகள்
48. ஜலதீபம் - சரித்திர நாவல் - சாண்டில்யன் - குமுதம்
49. சுழிக்காற்று - தொடர் நாவல் - கெளசிகன் (வாண்டுமாமா) - கல்கி
50. எங்கே போகின்றோம் - தொடர் நாவல் - அகிலன் - கலைமகள்
51. வேஷங்கள் - இந்திரா பார்த்தசாரதி
52. கடற்கன்னி (சித்திரக்கதை) - குமுதம்
53. சங்கரனும் , கிங்கரனும் (சித்திரக்கதை) - விகடன்
54. ஹெலிகொப்டர்கள் கீழே இறங்கி விட்டன - இந்திரா பார்த்தசாரதி (கல்கி)
55. எதற்காக - சிவசங்கரி (விகடன்)
56. கீதமடி நீ எனக்கு - இந்துமதி (விகடன்)
57. மலர்களிலே அவள் மல்லிகை - இந்துமதி (விகடன்)
58. சத்திய வெள்ளம் - நா.பார்த்தசாரதி
59. ஜே.எம்.சாலி -கனாக் கண்டேன் தோழி
60. தரையில் இறங்கும் விமானனங்கள் - இந்துமதி - விகடன்

இவை என் நினைவில் நிற்கும் படைப்புகள். இவற்றை நான் படித்த காலகட்டம் ஒன்பதாவது வயதிலிருந்து பதின்மூன்றாவது வயது வரை என்று நினைவு.

ஏனைய தொடர்கள் நான் பின்னர் சேகரித்தவை. இவற்றில் பல என் வாசிப்பின் ஆரம்பத்துக்கு முன்னர் வெளியானவை:

61. ஜீவகீதம் - ஜெகசிற்பியன் - கல்கி
62. பாவை விளக்கு - அகிலன் - கல்கி
63. கடல் கொண்ட கனவு - மீ.ப.சீமு - கல்கி
64. சொர்க்கத்தின் நீழல் - ஜெகசிற்பியன் - கல்கி
65. போர்முனை - கி.ராஜேந்திரன் - கல்கி
66. பொன்விலங்கு - நா.பார்த்தசாரதி - கல்கி
67. நெஞ்சில் நிறைந்தவள் - கி.ராஜேந்திரன் - கல்கி
68. பொங்கி வரும் பெரு நிலவு - கி.ராஜேந்திரன்
69. மணி மொழி நீ என்னை மறந்து விடு - தமிழ் வாணன் - விகடன்
70. ஆந்தை விழிகள் - தமிழ்வாணன் - விகடன் அல்லது கல்கண்டு
71. தமிழ்வாணன் துப்பறியும் பி.டி.109 - கல்கண்டு
72. புது வெள்ளம் - அகிலன் - கல்கி

இவை தவர ஏராளமான புத்தகங்களாக வெளியான பல்வகைப்பட்ட நாவல்கள் (மர்ம நாவல்கள், வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள்) என்னிடமிருந்தன. அவற்றில் நினைவில் நிற்பவை:

73. தாய் - மார்க்சிம் கார்க்கி -தமிழில் ரகுநாதன்
74.பார்த்திபன் கனவு - கல்கி
75. காண்டேகரின் நாவல்கள் சில: இருமனம், கருகிய மொட்டு
76. வியாசர் விருந்து - ராஜாஜி
77. சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி
78. பாரதியார் கவிதைகள்
79. சிலப்பதிகாரம் - புலியூர்க் கேசிகன்
80. மணிமேகலை - புலியூர்க் கேசிகன்
81. உலகத்தமிழ் மாநாட்டு மலர் _1968)
82. ஏ தாழ்ந்த தமிழகமே -அறிஞர் அண்ணா
83. ரோமாபுரி ராணிகள் -அறிஞர் அண்ணா
84. மாயச் சமாதியில் மர்மப்புதையல் -மேதாவி
85. கரித்துண்டு - மு.வரதராசன்
86. கள்ளோ காவியமோ - மு.வரதராசன்
87. நெஞ்சில் ஒரு முள் - மு.வரதராசன்
88. பெற்ற மனம் - மு.வரதராசன்
89. கி.பி. 2000 - மு.வரதராசன்
90. வீரகேசரி பிரசுர நாவல்கள் பல.
91. மித்திரனில் வெளியாகி வீரகேசரி பிரசுரங்களாக வெளியான ரஜனி (கே.வி..எஸ். வாஸ்) எழுதிய நாவல்கள் சில.
92. வெற்றியின் இரகசியங்கள் - அ.ந.கந்தசாமி
93. கண்மணியாள் காதை - மகாகவி
94. குறும்பா - மகாகவி
95. ரோமாபுரி பாண்டியன் (பைண்டு செய்யப்பட்ட தொடர்) - கலைஞர் கருணாநிதி - குமுதம்
96. நந்திக்கடல் - செங்கை ஆழியான்
97. பதினாலு நாட்கள் - சுஜாதா (தொடர்) - குமுதம்
98. அனிதா இளம் மனைவி - சுஜாதா - தொடர் - குமுதம்
99. திப்புசுல்தான் (நாவல்) பல நூறு பக்கங்களைக்கொண்டது. யார் எழுதியது நினைவிலில்லை.
100. நாகநாட்டரசி குமுதவல்லி - மறைமலையடிகள்.

ராணிமுத்து வெளியான காலகட்டத்தில் முதலாவது பிரசுரமான அகிலனின் பொன்மலர் தவிர ஏனைய முதலிரண்டு வருடப் பிரசுரங்கள் என்னிடமிருந்தன. அவற்றில் நினைவில் நிற்பவை: அகிலனின் சிநேகிதி, நாரண துரைக்கண்ணனின் உயிரோவியம், அறிஞர் அண்ணாவின் பார்வதி பி,.ஏ, ரங்கோன் ராதா, பானுமதி ராமகிருஷ்ணாவின் மாமியார் கதைகள், அநுத்தம்மாவின் கேட்டவரம், சாண்டில்யனின் ஜீவபூமி, ஜெகசிற்பியனின் நந்திவர்மன் காதலி, சாண்டியல்யனின் உதயபானு, இளையராணி, மு.வரதராஜனின் அந்த நாள், மாயாவியின் வாடா மலர் & விந்தனின் பாலும் பாவையும், ஜெயகாந்தனின் காவல் தெய்வம், கலைஞரின் வெள்ளிக்கிழமை, காண்டேகரின் மனோரஞ்சிதம், ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது போன்றவைதாம்.,

இவற்றையெல்லாம் போர்ச்சூழலில் இழந்தபோது என் வாழ்வின் முக்கிய பருவத்தை நினைவூட்டும் அரிய நூல்களை இழந்ததாக மனம் வலித்தது. ஆனால் இணையத்தின் வருகையின் மூலம் அவற்றில் பலவற்றை மீளப்பெற முடிந்தது. குறிப்பாகக் கல்கியின் இணையத்தளத்தில் கல்கி உருவான காலத்திலிருந்து இன்று வரையிலான இதழ்கள் அனைத்தையும் ஆண்டுச் சந்தா கட்டி வாசிக்கும் வசதி உண்டு. அதன் மூலம் நான் வாசித்த் நாவல்களையெல்லாம் அவற்றின் ஓவியங்களுடன் மீண்டுமொருமுறை பார்க்க முடிந்தது. வாசிக்க முடிந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம் நாவலை வெளியிட்டபோது தொடர் வெளியானபோது பிரசுரமான கோபுலுவின் ஓவியங்களுடன் நூலாக வெளியிட்டது. வாங்கிக்கொண்டேன். ஜெகசிற்பியனின் நந்திவர்மன் காதலி (ராணிமுத்து) நூலை பழைய புத்தகக் கடையொன்றில் தேடியெடுத்து , தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய கால நண்பர் வவுனியா விக்கி அனுப்பி வைத்தார். அட்டையற்ற ராணிமுத்தே அவருக்குக் கிடைத்தது. ஆனால் முகநூலில் எழுத்தாளர் ஜவாத் மரைக்காருடனான தொடர்பு மூலம் அவரிடமிருந்த ராணிமுத்து அட்டைக்கான புகைப்படம் கிடைத்தது. அதனை அட்டையற்ற நந்திவர்மன் காதலிக்குப் பொருத்தி அழகாக்கி அனுப்பினார் விக்கி. இருந்தாலும் ஒரு குறை இருந்தது. எனக்கு அக்காலகட்டத்தில் மிகவும் பிடித்த சாண்டியல்யனின் ஜீவபூமி நாவலை (ராணிமுத்து பிரசுரமாக வெளிவந்த) எப்படியாவது மீண்டுமொருமுறை பார்க்கவேண்டுமென்னும் ஆசை நிறைவேறாததுதான் அக்குறைக்கான காரணம். ஜீவபூமி சாண்டியல்யனின் முதலாவது சரித்திர நாவல். அமுதசுரபி சஞ்சிகையில் தொடராக வெளியானது. வானதி பதிப்பக வெளியீடான ஜீவபூமி என்னிடமுள்ளது. ஆனால் அதனைப் பார்க்கும்போது என் பால்யகால வாசிப்பனுவம் தந்த நினைவுகள் எழுவதில்லை. அதற்கு ராணிமுத்து பிரசுரமாக வெளியானபோது வெளியான அட்டைப்பட ஓவியம் இல்லாததே காரணம். ஆனால் அந்தக் குறையும் இப்போது தீர்ந்து விட்டது. அண்மையில் நடிகர் திலகத்தின் திரைப்பட விளம்பரங்கள் பற்றிய யு டியூப் காணொளியொன்று பார்க்கக் கிடைத்தது. அதற்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/watch?v=38fuo_roECk இக்காணொளியின் இடையில் ராணிமுத்து பிரசுரமாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமிக்கான அட்டைப்படம் கிடைத்தது. இதன் மூலம் என் நீண்ட காலத்து நிறைவேறாமலிருந்த ஆசையொன்று நிறைவேறியது . :-) அவ்வட்டையினையே இங்கு காண்கின்றீர்கள்.

அட்டையில் இருப்பவர்கள் சிவாஜி, சரோஜாதேவி போலுள்ளதா. அவர்களேதாம். அக்காலகட்டத்தில் சிவாஜி, சரோஜாதேவியை வைத்து ஜீவபூமியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்; விளம்பரங்களும் வெளியாகின. என்ன காரணமோ தெரியவில்லை படம் முடியவில்லை; வெளியாகவில்லை. அத்திரைப்படக் காட்சியினையே ராணிமுத்து அட்டையிலும் பாவித்துள்ளார்கள்.

- ராணிமுத்து பிரசுரமாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமி நாவலின் அட்டை . ஜீவபூமி சாண்டியல்யனின் முதலாவது சரித்திர நாவல். அமுதசுரபி சஞ்சிகையில் தொடராக வெளியானது. -

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்