Friday, October 11, 2019

ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி! - வ.ந.கிரிதரன் -



புகலிடத் தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக நிச்சயம் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' படைப்பினைக் கூறுவேன்.

ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும்.

முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.

லெனின் சின்னத்தம்பி பணிபுரியும் உணவகத்தின் முதலாளி சப்கோஸ்கி, அவனது மனைவி, அவனுக்குக்கீழ் தொழிலாளிகளைக் கண்காணித்து வேலை வாங்கும் இடைநிலைத்தொழிலாளர்களான சண்டைக்காரன் (திருவாளர் ஸ்ரைற்ரர்) , அக்சல் குறுப்ப இவர்களை மையமாக வைத்து. உணவகம் திவாலாகப் போகும்வரையிலான நிலையினை விபரிப்பதுதான் இந்த நாவலின் முக்கிய நோக்கம்.

எழுத்தாளர் ஜீவமுரளி திறமையான கதைசொல்லிகளிலொருவர் என்பதற்கு நல்லதோர் அத்தாட்சி 'லெனின் சின்னத்தம்பி'.
'கெவ்ரர் பார்ட்டி சேவீஸ்' என்ற உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவி வயிறு வளர்க்கும் கோப்பை கழுவுமொரு தொழிலாளியான 'லெனின் சின்னத்தம்பி'யின் வாழ்வினை அவர் வேலை பார்க்கும் உணவகம் 'திவாலா'கப் போகும் வரையில் விபரிக்கும் நாவல் அவரது வேலை அனுபவங்களை, அவருடன் வேலை பார்க்கும் சக மனிதர்களின் உளவியலை, நிறுவனத்தின் வர்த்தக நிலையினை, அது எதிர்நோக்கும் சவால்களை, அது பணி புரியும் தொழிலாளர்கள் மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சுவையாக, சிறப்பான மொழி நடையில் வெளிப்படுத்துகின்றது. .

சிறந்த படைப்பாளியொருவர் மானுட வாழ்வை ஊன்றிக் கவனித்து அதனை உயிர்த்துடிப்புடன் தன் படைப்பில் வழங்குவார். அம்மானுட அவதானிப்பு ஜீவமுரளிக்கு நிறையவே உண்டு. அவ்வித அவதானிப்பினை லெனின் சின்னத்தம்பி நாவலின் பாத்திரங்களை பற்றிய விபரிப்பில் நன்கு அறியலாம். ஒவ்வொரு பாத்திரத்தின் தனித்துவ இயல்பினையும், அவர்தம் உளவியலையும் அவர் தன் எழுத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார் இந்நாவலில்.

சிறந்த படைப்பாளியொருவரின் படைப்பொன்றில் மானுட வாழ்வுடன், மானுடர் வாழும் சமூக, அரசியற் பொருளாதார சூழலுடன், அவர் வாழும் இயற்கையும் நன்கு அவதானிக்கப்பட்டு விபரிக்கப்பட்டிருக்கும்.. இப்படைப்பிலும் அவ்வகையான விபரிப்புகளைக் காண முடியும்.
நாவல் பின்வருமாறு ஆரம்பமாகின்றது: " :லெனின் சின்னத்தம்பி அழுக்குப் பாத்திரங்களை கழுவும் வேலையொன்றில் சேர்ந்தார். அவரைச்சுற்றி சிதறியும், பரவியும், குவிந்தும் கிடக்கும் அழுக்குப் பாத்திரங்களைக் கழுவியபடியே அடிக்கடி மனம் வருந்தினார்."

நல்லதோர் ஆரம்ப வரிகள். முழு நாவலின் போக்கையும் இந்த வரிகள் கூறிவிடுகின்றன.

இந் நாவல் ஜேர்மானிய அல்லது ஆங்கில மொழியில் அல்லது ஐரோப்பிய மொழிகளிலொன்றில் வெளி வெளிவந்தால் நிச்சயமாகச் சர்வதேசத்தின் கவனத்தைக் கவர்ந்து விடுமென்றே எனக்குப்படுகின்றது. அவ்வளவுக்கு லெனின் சின்னத்தம்பி என்னும் இலங்கைத்தமிழ் அகதியொருவரின் வாழ்க்கை, அவருடன் பணி புரியும் பல்லின மக்களின் ஆளுமைகள் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கின்றன இந்த நாவலில்.

ஒரு கேள்வி: எதற்காக நாவலின் பிரதான பாத்திரத்தின் பெயர் லெனின் சின்னத்தம்பி. பொதுவாக இவ்விதம் பெயர் வைக்கப்படுவதில்லை. இவ்விதம் அழைக்கப்படுவதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்க வேண்டும். நாவலில் அதற்கான காரணம் எங்கும் விபரிக்கப்பட்டிருக்கவில்லையென்றே படுகின்றது. அல்லது விபரிக்கப்பட்டு அதனை நான் தவற விட்டேனோ தெரியவில்லை. இன்னுமொருமுறை வாசிக்கையில் ஊன்றிக் கவனிக்க வேண்டும். அவ்விதம் விபரிக்கப்படாவிட்டால் இதற்கான காரணங்களிலொன்றாக ஒன்றுதானெனக்குத் தோன்றுகின்றது. அது முதலாளித்துவச் சமுதாயமொன்றில் தொழிலாளியொருவனின் இருப்பை, அவன் ,மீது நடைபெறும் சுரண்டலை வெளிப்படுத்தும் குறியீடாக லெனின் சின்னத்தம்பி படைக்கப்பட்டிருக்கின்றார். முதலாளித்துவச் சுரண்டலினை எதிர்க்கும் தொழிலாளர்களின் நிலைக்கான தீர்வுக்காகக் போராடியவர் லெனின். இவ்விதமானதொரு தொடர்பினை வெளிப்படுத்துவதற்காக, ஒரு விதக் குறியீடாக இப்பெயர் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
சுருக்கமாகக் கூறுவதானால் புகலிடத் தமிழிலக்கியத்துக்கு, உலகத்தமிழிலக்கியத்துக்கு, உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த நல்லதொரு படைப்பு ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி.'

முகநூல் எதிர்வினைகள்:

  • Vadakovay Varatha Rajan வாசிக்கத்தூண்டும் அறிமுகம் . நன்றி

    • Giritharan Navaratnam அண்மையில் மீண்டுமொருமுறை வாசித்தேன். அறிமுகம் அவசியமென்று தோன்றியது. சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்துப்பார்க்கவும்.

  • Balan Chandran ஆம். நானும் வாசித்தேன். நல்ல நாவல். சிறந்த எழுத்தாளராக வரவேண்டியவர். ஏனோ தெரியவில்லை இப்போது அவர் எழுதுவதை குறைத்து விட்டார்.

    • Giritharan Navaratnam //சிறந்த எழுத்தாளராக வரவேண்டியவர். ஏனோ தெரியவில்லை இப்போது அவர் எழுதுவதை குறைத்து விட்டார்.// ஏற்கனவே அவர் சிறந்த எழுத்தாளர்தானே. படைப்புகளின் எண்ணிக்கை ஒருவரின் இலக்கியத்தரத்தை நிர்ணயிப்பதில்லையே. ப.சிங்காரம் அதிகமாக எழுதியவரல்லர். இருந்தாலும் அவரது படைப்புகள் மூலம் தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்தியவரல்லவா. ஓரிரு படைப்புகள் மூலம் இலக்கியத்தில் தம்மை நிலை நிறுத்தியவர்கள் பலர் உள்ளனரே.

  • Abdul Raheem Mullai Rizana சிறப்பு

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan படித்தேன்
    சிறப்பாக எழுதப் பட்ட நாவல்.
    முற்று முழுதாக வெளிநாட்டு மனிதர்களிடையே வாழும் ஈழத் தமிழர் ஒருவரது அனுபவங்கள் என்பது சிறப்பு

  • Sivalingam Sivathasan முன்பு ஒருமுறை ஜீவமுரளியை நானும் சிலாகித்திருந்தேன். எனது சோம்பல் மிகுதியால், விரிவாக முரளியின் எழுத்துநடையை எழுத எண்ணியிருந்தும், விடுபட்டுபோய்விட்டது. அழகான கதைசொல்லி, அபாரமான எழுத்தோட்டம்.
    இங்குள்ளோரால் மிகவும்
    பேசப்படவேண்டியவர். இன்னும் கவனிக்கப்பட வில்லை என்பது எனது மனக்குறையே.

    • Giritharan Navaratnam //அழகான கதைசொல்லி, அபாரமான எழுத்தோட்டம்.
      இங்குள்ளோரால் மிகவும்// உண்மை. //இன்னும் கவனிக்கப்பட வில்லை என்பது எனது மனக்குறையே.// கவலைப்படத்தேவையில்லை. ஒருவரின் படைப்பே அவரை நிலை நிறுத்தும்.

  • Sri Rangan Vijayaratnam ஷோபாசக்தி போன்று ஜீவமுரளியும் சிறந்த கதை சொல்லி;இருவரும் ஒரு எழுத்துப்பட்டறையைச் சேர்ந்தவர்கள்;தலித் இலக்கியம் இவர்களது வருகைக்குப் பின் சர்வதேச மயப்பட்டது;தமிழர் தேசியவிடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்திய இவர்களது படைப்புகள் ,முக்கிய தாக்கத்தைச் சர்வதேசிய அரசுகளுக்குள்ளும் ஏற்படுத்தியது! அந்த வகையில் தலித் இலக்கியத்துக்கு ஜீவமுரளியும் ,ஷோபா சக்தியும் ஆற்றிய பங்கு முக்கியமானது!

    • Giritharan Navaratnam ஆனால் இந்நாவல் ஒரு தலித் இலக்கியப் படைப்பு அல்ல. முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளி ஒருவரின் இருப்பினைச் சித்திரிக்கும் நாவல் என்று இதனைக் கூறலாம். மேலும் ஜீவமுரளியின் மொழி, பாத்திர வார்ப்பு இவை என்னைப்பொறுத்தவரையில் ஷோபாசக்தியை விடச் சிறப்பானவை என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்நாவலே அதற்கு முக்கிய சான்று. ஷோபாசக்தியின் எழுத்து விகடன் போன்ற வெகுசன இதழ்களின் வாசகர்களைக் கவரும் பரபரப்பினை, சுவையினைத் தரும் எழுத்து . அவற்றை மையமாக வைத்தே அவரது மொழி, கதைப்பின்னல் ஆகியவை அமைந்திருக்கும். பேச்சுத்தமிழ் சரளமாகப் பாவிக்கப்பட்டுக் கதை கூறப்பட்டிருக்கும். அந்நடையிலிருந்து ஜீவமுரளியின் மொழி நடை வித்தியாசப்படுகின்றது. இந்த நாவலின் மொழி அதற்கு நல்லதொரு சான்று. //தமிழர் தேசியவிடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்திய இவர்களது படைப்புகள்// ஜீவமுரளியின் எப்படைப்புகளைக் கூறுகின்றீர்கள்? எவ்விதம் சர்வதேசிய அரசுகளுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறுகின்றீர்கள்?

  • Sri Rangan Vijayaratnam Giritharan Navaratnam கிரி,இத்தகைய சில எழுத்துக்களின் வழி அறிமுகமான ஷோபா சக்தி,சுகன்,ஜீவமுரளி,தேவதாசன்,அசுரா,ஞானம் போன்றவர்கள் 2000’இன் ஆரம்பத்திலிருந்து 2010 ஆம் ஆண்டுவரைச் சர்வதேச அரசுகளுக்குள் தலித்துவ விடுதலை குறித்த நியாயத்தை முன் வைத்தார்கள்,தலித்துக்கள் தமிழ்த் தேசிய இனம் இல்லை ;தலித்துக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்று சர்வதேச அரசுகளுக்கு எடுத்துக்கூறிப் புலிப் பாசிசத்தை தோற்கடித்தவர்கள் இவர்கள்.இவர்களது அன்றைய அறைகூவலான “தலித்துக்கள் தமிழ்த் தேசிய இனமல்ல,தனியான தலித் தேசிய இனம்” என்பது பலமாக மேற்குலக மற்றும் இந்திய அரசுகளுக்குள் நியாயமாகப் பார்க்கப்பட்டது.இந்த வெற்றி தலித்துக்களின் வெற்றி;யாழ்ப்பாண மையவாதத்தின் தமிழ்த் தேசிய விடுதலையின் தோல்விக்கு வித்திட்ட இவர்கள் தலித்துவ இலக்கியத்தின் அரசியல் ஆயுதம்!இது,சர்வதேச மட்டத்தில் தலித்துவ மேம்பாட்டு முன்னணியை உருவாக்கியது;இது,நமது வரலாற்றில் வெற்றி இல்லையா?

  • Tharuman Tharmakulasingam சிறப்பு மிகு அறிமுகம்

  • Rajaji Rajagopalan இந்த நூல் நூலகம் இணயத்தில் இருக்கிறதாவென அறிய விரும்புகிறேன்.

    • Jeyaruban Mike Philip Rajaji Rajagopalan இணையத்தில் இல்லை அண்ணர். ஜீவமுரளி அல்லது கறுப்பு நீலகண்டன் உங்களது நட்புவட்டத்தில் இருந்தால், எழுதிக்கேட்கவும். அனுப்பிவைப்பார்கள்
  • Sivalingam Ahrooran I'd read the book which introduced Jeevamuraly to me.

  • Raveendran Nadesan அருமையான பதிவு. இந்த நாவல் பற்றி அடுத்து எழுதவுள்ள இலக்கிய விவகார நூலொன்றில் அலச இருக்கிறேன். பரவலாகப் படிக்கப்பட வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியுள்ளீர்கள்.

    புலம் பெயர் இலக்கியம்/ தலித் இலக்கியம் என்பதெல்லாம் தவிர்க்க இயலாது ஏற்படும் வகைப்பாடுகள் தாம். இந்நாவல் இருவகைப்பாட்டுக்குள்ளும் பேசப்பட இயலும் என விமரிசகர்களால் விவாதிக்க இயலும். இலக்கியத்தை மட்டுமன்றி எமது சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் அந்த முயற்சி உதவும்!

    Giritharan Navaratnam இந்நாவலை என்னால் தலித் இலக்கியத்தில் வைக்க முடியாது. இதன் கதைக்களத்தின் சமூகநிலை அத்தகையது. இது என் கருத்து.

  • Raveendran Nadesan Giritharan Navaratnam தலித் என நாம் கொள்ளும் வரையறை சார்ந்த விடயம் அது. ஒருவகையில் அந்த வரையறையில் மட்டுமானதாக கொள்வதே சரியானது. எமக்கான சாதிய ஒடுக்குமுறைகளை பேசும் இலக்கியமாக பார்ப்பன!

    ஒடுக்கப்படும் மனநிலை - வடிவங்கள் தலித் இலக்கியம் எனில் இந்த நாவல் அந்த வகைப்பாட்டுக்கு உரியதல்லவா?

  • Giritharan Navaratnam Raveendran Nadesan //தலித் என நாம் கொள்ளும் வரையறை சார்ந்த விடயம் அது. ஒருவகையில் அந்த வரையறையில் மட்டுமானதாக கொள்வதே சரியானது. எமக்கான சாதிய ஒடுக்குமுறைகளை பேசும் இலக்கியமாக பார்ப்பன// இந்நாவல் சாதிய ஒடுக்குமுறைகளைப்பற்றிப் பேசவில்லை.

    //ஒடுக்கப்படும் மனநிலை - வடிவங்கள் தலித் இலக்கியம் எனில் இந்த நாவல் அந்த வகைப்பாட்டுக்கு உரியதல்லவா?// ஒடுக்கப்படும் மக்களின் மனநிலை என்னும் பொதுவானதொரு சொல்லைத் தலித் மக்களின் பிரச்சினைக்குப் பாவித்து அம்மக்களின் பிரச்சினையின் உண்மைத்தன்மையை எளிமைப்படுத்தி விட முடியாது. இந்தியாவில் பாவித்த ஒரு சொல்லை எல்லா நாடுகளிலும் ஒடுக்கப்படும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தப்பாவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் தலித் மக்கள் ஒடுக்கப்படுதல் போன்றதொரு நிலை முன்னர் மேற்கு நாடுகளில் கறுப்பின மக்களுக்கு இருந்தது. ஆனால் இன்று அவர்களும், ஏனைய இனத்தவர்களும் பல்வேறு வகைகளில் நிறம், இனம் , மொழி எனறு பாதிப்புகளை எதிர்கொண்டாலும் சட்டரீதியாகப் பல மேற்கு நாடுகளில் அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. யாரும் அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்குவதில்லை. இலங்கைத் தமிழர்களைப்போன்ற பல நாட்டவர்கள் உணவகங்கள் , எரிபொருள் நிலையங்கள் என்று பலவகையான துறைகளில் பணியாற்றுகின்றார்கள். அவர்கள்: பரிமாறுகின்ற, சமைத்த உணவு வகைகளை உண்ணுவதற்கு யாரும் மறுப்பதில்லை. ஒடுக்கப்படுகின்றார்கள் என்னுமொரு காரணத்துக்காக அவர்களின் மனநிலையினைத் தலித் மனநிலை என்று பொதுமைப்படுத்த முடியாது. இலங்கையில் சிறுபான்மையினங்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பன்மொழி பேசும் பல்லின மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். ஒடுக்கப்படுகின்றார்கள் என்னும் காரணத்துக்காக ஒடுக்கப்படும் அவர்கள் படைக்கும் இலக்கியத்தைத் தலித் இலக்கியம் என்று யாரும் கூறுவதில்லை.
    இந்நிலையில் லெனின் சின்னத்தம்பி நாவலை அவ்வகை நாவலாகக் கருத முடியாது. நாவல் நடக்கும் நிறுவனத்தில் பல்லின மக்களும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றார்கள். அங்கு அவர்கள் அடையும் பிரச்சினைகள் பெரிதும் வர்க்கரீதியானவை. சாதிரீதியானவையல்ல. நாட்டுக்கு நாடு சமூக அமைப்புகள் , அவற்றில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வித்தியாசமானவை. அவற்றின் அடிப்படையில் அவர்கள்தம் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும் என்று கருதுகின்றேன்.

  • Raveendran Nadesan Giritharan Navaratnamஅடிப்படையான விடயங்களில் உடன்படுகிறேன்.
    1. தலித் இலக்கியமாக சொன்ன கருத்து சார்ந்து, அவ்வாறு கூறப்பட இடமுள்ளதைச் சொன்னேன்.
    2. ஆசிரியர் தொடர்ந்து தலித்தியத்தை வாழிடத்தில் வலியுறுத்திவருவதனால் நாவலில் மறைபொருளாக ஊடாட இடமுள்ளது.
    3. களம் வர்க்க நிலைப்பட்டு மட்டுமில்லை. வெள்ளை முதலாளித்துவ நுண்ணரசியலில் இனக்குழு (நிற பேத) செயற்பாடு ஊடாடாமல் இல்லை. கட்டுடைத்து வாசிக்கும் போது தலித் இலக்கியக் கூறு வெளிப்பட இடமுள்ளது.
    4. தலித்தியவாதிகள் வலிந்து கூறுகிற வகையில் இன்றைய சாதி இழிவுபடுத்தல்கள் இல்லை; அதற்காக சாதிப் புறக்கணிப்பு வடிவங்கள் இல்லாமலும் இல்லை- நுட்பத் திறனோடு இப்போது எப்படிக் கையாளப்படுகிறது என்பதை இன்றைய தலித் இலக்கியம் பேசும். தெணியானின்’ஏதனம்’ நாவல் அதன் வெளிப்பாடு.
  • Giritharan Navaratnam Raveendran Nadesan  ஒரு விடயத்தைப்பற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருத்து இருக்க வேண்டுமென்பதில்லை. அது போன்றதே இந்நாவல் பற்றிய எனது அணுகுமுறையும். நாவலாசிரியர் தலித்தியத்தை வலியுறுத்துவதால் அவரது நாவலும் அத்தகையதாக இருக்க வேண்டுமென்று எண்ணி நான் இப்படைப்பை அணுகவில்லை. மேலும் தலித் இலக்கியம் பற்றிப்பலர் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்கள். அவ்வகையான இலக்கியம் எவ்விதம் , யாரால் படைக்கப்படுகின்றது? அவற்றின் மொழி எவ்விதம் அமைந்திருக்கின்றது? என்றெல்லாம் விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். சிலர் நீங்கள் கூறுவதுபோல் ஒடுக்கப்படுவோர் இலக்கியத்திற்குள் ஒன்றாகவும் பொதுமைப்படுத்துவார்கள். இந்நாவலின் மொழி, கூறப்படும் விடயம், இடம் பெறும் களத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப்பின்னணி, இவ்விதமான சமூக, பொருளாதார & அரசியல் அமைப்பில் நாவலின் மாந்தர்கள் அடையும் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் என்னால் இந்நாவலை அவ்விதம் ஒரு பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்நாவல் எல்லைகளைக் கடந்து அனைவராலும் விரும்பிப்படிக்கப்படும். நாவல் மானுடர்களின் இருப்புக்கான போராட்டத்தை, மன உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. எனவே இவ் விடயத்தில் நான் உங்கள் கருத்துடன் வேறுபடுகின்றேன். முரண்பட்ட கருத்துகள் இருப்பது இயல்பே. உங்கள் கருத்துகளை மதிக்கின்றேன்.
  • மல்லியப்புசந்தி திலகர் அருமையான நாவல் பற்றிய அருமையான பதிவு 
  • Vickneaswaran Sk அவசியமான, சிறப்பான பதிவு. எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. புலம்பெயர் தேசத்தின் தொழில்சார் வாழ்வனுபவத்தைப் பேசியதன் காரணமாக முக்கியமான நாவலும் கூட. கனடா வந்த புதிதில் வாசிக்கக் கிடைத்த நூல்களில் ஒன்று இதுவும். இந்தளவு சிறப்பாக ஐரோப்பிய தொழிலக அனுபவத்தைப் பேசிய வேறொரு தமிழ் நாவலை நான் இதுவரை காணவில்லை.

  • Vimal Kulanthaivelu கொண்டாடப்படவேண்டிய நாவல்.

  • Kasi Senthivel இந் நாவல் தனிச் சிறப்பான ஒன்றாகும்.முரளியின் அப்பா ஒரு மாக்சிச லெனினிசவாதி.அதனால்தோழர் லெனினையும் தனது தந்தையையும் இணைத்து நாவலின் பெயரை வைத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.முரளிக்கு வாழ்த்துக்கள்.

    • Raveendran Nadesan Kasi Senthivel நாவலின் பெயர் தான் “லெனின் சின்னத்தம்பி”. தனது தந்தையை மனதிலிருத்தி அந்தப் பாத்திரப் பெயரை முரளி அமைத்திருக்க வேண்டும். தந்தையின் அரசியலுணர்வுப் பெறுமானத்தைச் சிறுவயதில் உணர இயலாது எதிர் மனப்பாங்கு இருந்ததாயும் பின்னர் அதற்காக வருந்துவதாகவும் குறிப்பிடுவார். லெனின் சின்னத்தம்பி அத்தகைய வருத்தமும் கொள்ள இடமற்று வேலை- வாழியல் நெருக்கடிக்குள் உழல்பவர்.

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan Kasi Senthivel சின்னத்தம்பி மாஸ்டர் ஒரு உண்மையான மாக்சியவாதி. எனவே பெயர் மிகவும் பொருத்தமானது தான்.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்