எண்பதுகளில் வீரகேசரியில் நான் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையிது. 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது. நண்பர்களே! கோப்பாய்க் கோட்டை பற்றி நீங்கள் அறிந்த விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இக்கட்டுரைக்கு வீரகேசரி நிறுவனத்தினர் ரூபா 35 அனுப்பியிருந்தார்கள். மறக்க முடியாது.
அக்கட்டுரை கீழே:
அக்கட்டுரை கீழே:
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.