எனது (வ.ந.கிரிதரன்) நாவலான 'குடிவரவாளன்' நாவல் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதியொருவனின் நியூயார்க் மாநகரத்து வாழ்க்கையை விபரிப்பது. சட்டவிரோதக் குடியாகச் சுமார் ஒருவருடன் வரையில் அம்மாநகரில் தப்பிப்பிழைத்தலுக்காக அலைந்து திரிந்த வாழ்வை விபரிக்கும் நாவல். புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளியான , புகலிட வாழ்வை விபரிக்கும் நாவல்களில் 'குடிவரவாளன்' நாவலுமொன்று. தமிழகத்தில் ஓவியா பதிப்பாக வெளியான நாவலிது.
இந்நாவல் ஏற்கனவே வெளியான எனது சிறுநாவலான 'அமெரிக்கா' வின் தொடர்ச்சி. 'அமெரிக்கா' அமெரிக்காவில் புகலிடம் தேடி அரசியல் அடைக்கலம் நாடிய இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் சுமார் மூன்று மாதம் வரையியிலான நியூயார்க் மாநகரத்தின் ஒரு பகுதியான புரூக்லின் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாம் வாழ்வை விபரிப்பது. 'அமெரிக்கா' தடுப்பு முகாம் சட்டவிரோதக் குடிவரவாளன் ஒருவனின் தடுப்பு முகாம் வாழ்வை விபரித்தால், 'குடிவரவாளன்' நாவல் நியூயார்க் மாநகரின் அச்சட்டவிரோதக் குடிவரவாளனின் தப்பிப்பிழைத்தலுக்கான அலைதலை விபரிக்கும்.
இரு நாவல்களுமே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்களால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 'குடிவரவாளன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' மீனாட்சி சுந்தரனார் பல்கலைகழகத்தினரின் ஆங்கிலத்துறையில், முனைவர் பட்டப்படிப்புக்கான புகலிடக் கற்கை நெறியில் புனைவுக்கான பிரிவில் பாவிக்கப்படும் நாவல்களிலொன்றாகும். அடுத்த நாவல் மேரி ஆன் மோகன்ராஜின் (Mary Anne Mohanraj) 'The Stars Change' நாவலாகும்.
'குடிவரவாளன்' நாவல் பதிவுகள் இணைய இதழிலும், திண்ணை இணைய இதழிலும் தொடராக வெளியான நாவலாகும், வெளிவந்தபோது 'அமெரிக்கா - 2' என்று ஆரம்பத்தில் வெளியாகிப் பின்னர் 'குடிவரவாளன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாவலாகும்.
பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியான நாவலின் அத்தியாயங்களை அவ்விணைய இதழிலிலுள்ள 'வ.ந.கிரிதரனின் பக்கம்' பகுதியில் நீங்கள் வாசிக்கலாம். அதற்கான இணைய முகவரி: https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=30&Itemid=54
'குடிவரவாளன்' நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளைக் கீழுள்ள இணைப்புகளில் நீங்கள் வாசிக்கலாம்:
1. குடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை. - முனைவர் ர.தாரணி
குடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத் தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும். முழுமையாக வாசிக்க: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3619:2016-10-21-04-24-39&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19
2. படித்தோம் சொல்கின்றோம்: வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கதை. அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்த தன்வரலாற்று நாவல். - முருகபூபதி
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதல் நாள் மாலை வேலைக்குச்சென்று, அன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை, இந்த நேரத்தில் யார் வந்து கதவு தட்டி எழுப்புகிறார்கள்...? எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார். சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று, மீண்டும் வருகிறாரோ...? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ...? அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத் தட்டுகிறார்கள். போர்த்தியிருந்த போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள். தயக்கத்துடன் கதவைத்திறந்தேன். நன்றி சொன்னார்கள். " என்ன விடயம் ? " எனக்கேட்கிறேன். வந்தவர்கள் எனது கேள்விக்கு உடனடியாக பதில் தராமல் வீட்டின் ஹோல், அதனோடிணைந்த சமையல்கட்டு , நான் உறங்கிய அந்த ஒற்றைப்படுக்கையறை யாவற்றையும் கழுகுப்பார்வை பார்த்துவிட்டு, சீராக இருந்த மற்ற கட்டிலைப்பார்த்து, " இதில் படுத்திருந்தவர் எங்கே...?" எனக்கேட்டார்கள். முழுமையாக வாசிக்க:
3. எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!
மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.
எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு.
இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் 'நாவல்' தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.
No comments:
Post a Comment