Friday, June 19, 2020

வரலாற்றுச் சுவடுகள்: நல்லூர் மந்திரிமனை - வ.ந.கிரிதரன் -

    இங்குள்ள 'மந்திரிமனை'  ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் பிருந்தாயினி தீபனா. இதனைக் கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவர்கள் 'யாழ்ப்பாண நகரம் - 400' குழுமத்தில்  பகிர்ந்துகொண்டிருந்தார். அவ்வோவியத்தை இப்பதிவுக்காக நன்றியுடன் பாவிக்கின்றேன்.

'மந்திரிமனை' என்னும் இக்கட்டடம்  பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னங்களிலொன்று.  இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரமும், ஒரு குடும்பத்துக்குரியதென்பதும்  தெரிய வரும். ஆனால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவது பின்வரும் காரணங்களினால்:
    இக்கட்டடத்தின் கட்டடக்கலை அம்சங்கள் திராவிட , ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. பாவிக்கப்பட்ட  கட்டட மூலப்பொருட்கள். கட்டடக்கலை அம்சங்கள், கட்டப்பெற்ற காலகட்டம் எல்லாம் இக்கட்டடம் வரலாற்றுச் சின்னங்களிலொன்றாகக் கருதப்பட்டு பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
    இக்கட்டடம் 'மந்திரிமனை' என அழைக்கப்படுவதானது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இக்கட்டடம் உண்மையில் ஏற்கனவே இப்பகுதியில் தமிழரசர் காலத்திலிருந்து முக்கியத்துவம் பெற்ற கட்டடமொன்றிருந்த இடத்தில் கட்டப்பெற்ற ஒன்றா? அச்சரித்திர  முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தனிப்பட்ட ஒருவரால் வாங்கப்பெற்று பழைய கட்டடமிருந்த இடத்தில் இக்கட்டடம் கட்டப்பெற்றதா?  இவையெல்லாம் நியாயமான கேள்விகள். ஆய்வுகள் பதில்களை அடைய அவசியம்.

இக்கட்டடத்துக்குரிய சுருங்கை வழியொன்று இருந்ததாகவும், அது தற்போது அடைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அது பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

    இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் 'சங்கிலித்தோப்பு', இதனை நான் இப்பகுதிக்குரிய நிலஅளவைத்திணக்கள வரைபடங்களை அவதானித்தபொழுது அவதானித்துள்ளேன். தற்போது அவ்வரைபடங்கள் என்னிடமில்லாததால் அவற்றைப் பெறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன். அவற்றை இலங்கை நில அளவைத் திணைக் களத்திடமிருந்து பெற்றுத்தர முடியுமானால் அவை பற்றிய மேலதிக விபரங்களைத்தர முடியும். இது விடயத்தில் என்னுடன் தொடர்பு கொள்ள ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என்றிருப்பதும், இங்குள்ள கட்டடம் மந்திரிமனை என்றிருப்பதும் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.  இப்பகுதிக்கண்மையில் பண்டாரக்குளம், சங்கிலியன் வீதி, அரசகேசரி வளவு போன்ற பல அரச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதால் இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியானது தமிழரசர் காலத்தில் பின்வரும் வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகின்றது.
முத்திரைச் சந்தையின்  வடகிழக்குப் பகுதியில் தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதால், வடமேற்குப்பகுதியான மந்திரிமனை அமைந்துள்ள பகுதியை உள்ளடக்கிய பிரதேசத்திலேயே அரச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிக அளவில் இருந்திருக்க வேண்டும். இக்கட்டடம் அமைந்துள்ள பகுதிக் காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என்று அழைக்கப்படுவதால் அங்கு தமிழரசர் காலத்தில் அரசருக்குரிய தோப்பு (நந்தவனம்)  இருந்திருக்கக் கூடும். தமிழரசர் காலத்தின் பின்னர் விதேசிகளின் ஆட்சிக்காலத்தில் , அந்நியர் கீழ் அரசர்கள் அடங்கி ஆட்சி புரிந்த காலகட்டத்தில் மந்திரியொருவரின் மனையிருந்திருக்கக் கூடும். பின்னர் அப்பகுதியை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தனிப்பட்ட ஒருவரால் வாங்கப்பட்டிருக்கக்கூடும். இவையெல்லாம் நியாயமான, தர்க்கபூர்வமான ஊகங்கள். எனவே இக்கட்டடமானது மேலும் பல ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கிறது. அதே சமயம் பேணப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்களிலொன்று.

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்