நாற்பதுகளில் (1940) சுவாமி ஞானப்பிரகாசர் முதல் முறையாகக் கோப்பாய்க் கோட்டை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டுரையொன்றினை ஆங்கில ஆய்விதழொன்றில் எழுதியிருந்தார். எண்பதுகளில் நான் கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் காட்டினார். அந்த ஆய்விதழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கக்கூடும். அதனடிப்படையில் நான் அக்கோட்டையிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றேன். என்னுடன் நண்பர் ஆனந்தகுமார் வந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். என்னுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அவருடனே சென்றிருந்தேன். கோப்பாய்க் கோட்டைக்குச் செல்கையிலும் அவர்தான் வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. பின்னர் அக்கோப்பாய்க் கோட்டை பற்றி எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன். வீரகேசரி 15.3.1981 வாரவெளியீட்டில் அதனைப் பிரசுரித்ததுடன் சன்மானமும் (ரூபா 35) அனுப்பியிருந்தார்கள்.
சுவாமி ஞானைப்பிரகாசர் சென்றபோது அக்கோட்டையானது Old Castle என்று அழைக்கப்பட்டது. திருமதி வூட்ஸ்வேர்த் என்னும் பெண்ணுக்குச் சொந்தமாக அக்காணியிருந்தது. வீட்டின் முன் மதில் வாசலில் Old Castle என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதனையே அவர் கோப்பாய்ப் பழைய கோட்டையென்று அழைத்தார். அதனருகேயிருந்த வீதி கோட்டைவாய்க்கால் என்று அழைக்கப்பட்டது. அதனையே சுவாமி ஞானப்பிரகாசர் கோட்டையின் அகழியாகக் கருதினார்.
நான் எண்பதுகளில் ஞானப்பிரகாசர் சென்று சுமார் நாற்பது வருடங்கள் கழித்துச் சென்றபோது அக்காணி பல துண்டுகளாகி விட்டன. திருமதி வூட்ஸ்வேர்த்துக்குச் சொந்தமாக ஒரு பகுதி எஞ்சியிருந்தது. வீரகேசரியிலெழுதிய என் கட்டுரையில் பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி அறிவுறுத்தியிருந்தேன்.
கடைசியாக நான் சென்று நாற்பது ஆண்டுகளாகி விட்டன. மீண்டுமொரு முறை சென்று பார்க்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் தற்போதுதான் கொரொனாக் காலமாயிறே. எப்படிப் போவது? இதற்குத்தான் இன்றைய தொழில் நுட்பம் உதவிக்கு வந்தது. கூகுள் வீதிக்காட்சி தொழில் நுட்பத்துடன் கோப்பாய்க்குப் பயணமானேன். ஆனால் அங்கு என்னால் கோட்டையிருக்கக் கூடிய பகுதியில் மதிலெதையும் Old Castle என்னும் எழுத்துகளுடன் கூடிய வாசலுடன் காண முடியவில்லை. இந்நிலையில்தான் எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் உதவிக்கு வந்தார். அவர் கோப்பாயின் மைந்தர்களிலொருவர். பெயரிலேயே ஊர்ப்பெயரை வைத்திருப்பவவர்.
கூகுளின் வீதிக்காட்சி (Goole Street View) மூலம் யாழ்- பருத்தித்துறை வீதி வழியே பயணிக்கத் தொடங்கினேன். அவருடன் முகநூலின் உட்பெட்டியில் உரையாடியவாறே பயணித்தேன். கடைசியில் கோப்பாய்க்கோட்டையின் இன்றைய நிலையினைப்பார்த்தேன். அப்பொழுது நான் பின்வருமாறு எண்ணிக்கொண்டேன்.
நாற்பதுகளில் சுவாமி ஞானப்பிரகாசர் இக்கோட்டையை அடையாளம் கண்டு கட்டுரை எழுதியிருந்தார். அதன் அடுத்த நாற்பது ஆண்டுகளில் எம் அரசியல்வாதிகள் ஆண்ட பெருமையைப்பற்றி ஆவேசமாக முழங்கிகொண்டிருந்தார்கள். நாற்பது ஆண்டுகள் கழிந்து நான் அங்கு பயணித்துக் கட்டுரையெழுதியிருந்தேன். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பல்கலைகழகமொன்றுமிருந்தது. ஆய்வாளர்கள் , புத்திச்சீவிகள் பலரிருந்தனர். அரசியல்வாதிகள் , விடுதலை அமைப்புகள் என்று காலம் கழிந்தது. வரலாற்றுச் சின்னங்களைப்பேணுவதில் யாருமே அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. இப்பொழுது மீண்டும் அங்கு சென்று அக்கோட்டையின் இன்றைய நிலை கண்டு எழுதுகின்றேன். இப்பொழுது அக்கோட்டை இருந்ததற்கான அடையாளமே அங்கில்லை. Old Castle என்னும் எழுத்துகளுடன் கூடிய மதில் இல்லை. அப்பகுதியியில் புதுக் குடியிருப்புகள் நிறைந்து விட்டன.
அண்மைக்கால வரலாற்றுச் சின்னங்களையே எம்மால் பாதுகாக்க முடியவில்லை. அண்மைக்கால வரலாற்றையே (கடந்த ஐந்நூறு வருட) முறையாகப் பதிவு செய்த வரலாற்று நூல்கள் எம்மிடையேயில்லை. இந்நிலையில் ஐயோ ஐயோ எம் அடையாளங்கள் பறி போகின்றன என்று கூக்குரலெடுத்து ஓலமிட மட்டும் தெரிகின்றது. முதலில் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தால், வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் யாராலுமே ஓரினத்தின் அடையாளங்களை அழித்துவிடமுடியாது.
நண்பர் வடகோவையாருடன் முகநூல் உட்பெட்டியில் நடத்திய உரையாடலும் முக்கியமானதென்பதால் அது இப்பதிவில் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும்.அதனைக் கீழே பதிவு செய்கின்றேன். நண்பர்களே! இப்பதிவினைப் பகிர்ந்து கொள்வதானால் அதற்கு முழு அனுமதியுண்டு. ஆனால் மூலம் குறிப்பிடாமல் வெட்டி ஒட்டுவதற்கு அனுமதியில்லை.
இதுவரை கோப்பாய்ப் பழைய கோட்டை பற்றி எழுதியவர்கள்:
1. நாற்பதுகளில் சுவாமி ஞானப்பிரகாசர். ஆங்கில ஆய்விதழில் வெளியானது.
2. கோப்பாய்ப் பழைய கோட்டையின் பழைய கோலம் - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 1980)
3. முனைவர் பொ.ரகுபதியின் கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரை (1987)
4. இன்று இப்பதிவு முகநூல் & பதிவுகள் இணைய இதழ் - 2020
* மேலும் சில கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரைகளை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் எழுதியுள்ளேன்.
கோப்பாய்ச் சந்தைக்கு முன்பு, யாழ் - பருத்தித்துறை வீதியிக்குக் கிழக்காகச் செல்லும் ஒழுங்கைதான் பழைய கோட்டை ஒழுங்கை என்று அழைக்கப்படுமொழுங்கை. அதற்கு வடக்குப்புறமாக, வேலியுடன் , ஓட்டு வீடுள்ள காணிதான் முன்பு பழைய கோட்டை என்று அழைக்கப்படும் காணி. எண்பதுகளில் நான் சென்றபோது அதன் மதில் வாசலில் Old Castleஎ என்ற எழுத்துகள் காணப்பட்டிருந்தன. தற்போது அந்த மதிலுமில்லை. அப்பகுதியே முற்றாக மாறி விட்டது. அடையாளமே தெரியாது.
பழைய கோட்டை வீதியைத்தான் ஞானப்பிரகாசர் கோட்டை வாய்க்கால் என்று அழைத்தார். அவர் அங்கு சென்றபோது அக்காணி திருமதி வூட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமாகவிருந்தது. நான் எண்பதுகளில் சென்றபோது அது பல பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு ஒரு பகுதி மட்டுமே அவருக்குச் சொந்தமாகவிருந்தது, தற்போது அதுவுமில்லை. அக்காணி பல பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு அடையாளமே காணமுடியாமல் போய்விட்டது.
*** *** ***
வடகோவையாருடனான உரையாடலும், கோப்பாய்ப் பழைய கோட்டையை அடையாளம் காணலும்!
நான்: வணக்கம் வட கோவையாருக்கு, நான் பல வருடங்களுக்கு முன்னர் கோப்பாய்க் கோட்டைப் பகுதிக்குச் சென்றிருந்ததால் சரியான அதன் இருப்பிடம் நினைவிலில்லை. அது சேர்ச்சிலிருந்து செல்கையில் மானிப்பாய்- கைதடி வீதிக்கு அப்பால் , வீதியின் வலது புறமாக இருந்ததாக என் கட்டுரையில் எழுதியிருந்தேன். அதன் படி யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வலது புறமாக இருந்திருக்க வேண்டும். சரியா? அக்காணித்துண்டின் பெயர் Old Castle என்று அப்போது அழைக்கப்பட்டது. அது கைதடி- மானிப்பாய் சந்தியிலிருந்து குறிப்பாக எவ்வளவு தூரம் நினைவுள்ளதா? மேலும் அப்பகுதியில் இப்போது என்ன உள்ளது என்பதையும் அறியத்தர முடியுமா? நன்றி.
வடகோவையார்: கைதடி மானிப்பாய் வீதியில் கோப்பாய் சந்தியில் இருந்து ,ஏறத்தாழ 500 மீற்றர் தூரத்தில் , யாழில் இருந்து வரும்போது வலது பக்கத்தில் உள்ள முதலாவது ஓழுங்கை குதியடி ஒழுங்கை . இவ் ஒழுங்கையில் குதியடிக் குளம் உள்ளது . இரண்டாவது ஒழுங்கை பழைய கோட்டை ஒழுங்கை . இதன் முகப்பிலேயே முன்னர் கோட்டை வாசல் காணப்பட்டது . இப்போது அந்த வாசல் இல்லை . இப்போது அந்த காணிகள் எல்லாம் தனியார் வசமாகி விட்டன . படத்தில் குதியடிக் குளம் காணப்படுகிறது . படத்தை தேடி எடுப்பதில் நாட்கள் கடந்து விட்டன . மன்னிக்கவும் கிரி
வடகோவையார்: யாழ் .பருத்தித்துறை வீதியில் , கோப்பாய் சந்தியில் இருந்து பருத்தித்துறை செல்லும் பாதையில் .யாழில் இருந்து வரும்போது வலப்பக்கம் ,அதாவது கிழக்கு திசையில் 1ம் ஒழுங்கை குதியடி ஒழுங்கை .
இவ் ஒழுங்கைக்கு எதிர்புறம் சரஸ்வதி விலாஸ் என்னும் சாப்பாட்டுக்கடை காணப்படுகிறது . இரண்டாவது ஒழுங்கை பழைய கோட்டை ஒழுங்கை .
நான்: இந்த மதிலுக்குப் பக்கத்தில் போவதா குத்தியடி ஒழுங்கை. மதிலுக்குள் இருப்பதா சரஸ்வதி கபே?
வடகோவையார்: இல்லை இது தவறான படம்
நான்: பெற்றோல் ஷெட் கோப்பாய் சந்தியில் இருந்து யாழ் செல்லும் பாதையில் உள்ளது .
வடகோவையார்: நான் குறிப்பிடும் இடம் , இதற்கு எதிர் புறம் கோப்பாய் சந்தியில் இருந்து பருத்தித்துறை நோக்கிபோகும் பாதையில் .
நான்: நீங்கள் "யாழ் .பதித்துறை வீதியில் , கோப்பாய் சந்தியில் இருந்து பருத்தித்துறை செல்லும் பாதையில் .
யாழில் இருந்து வரும்போது வலப்பக்கம் " என்று எழுதியிருந்தீர்கள். நான் முதலில் மற்றப்பக்கம்தான் தேடினேன். சரி அந்தப்பக்கம் சென்று பார்க்கின்றேன். நீங்கள் கூறுவது சந்தி கடந்து வடக்கு நோக்கிச் செல்கையில் வலது புறமாக சரிதானே..?
வடகோவையார்: ஆமாம்.
நான்: அவ்விதமே என் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தேன். நன்றி.
நான்: இதுதான் முதல் ஒழுங்கை. இதற்கு முன் இலங்கை வங்கிதானுள்ளது?
வடகோவையார்: இதேதான் .உள்ளே போனால் குளம் தெரியும் .
நான்: இந்த ஒழுங்கையா பழைய கோட்டை ஒழுங்கை? கூகுள் படத்தில் சரஸ்வதி கபே சந்திக்குத் தெற்காக யாழ்ப்பாணம் போகும் வழியிலுள்ளது.
வடகோவையார்: இது இரண்டாம் ஒழுங்கையா ? அது நியூ சரஸ்வதி கபே . பழைய சரஸ்வதி விலாஸ் bank கிற்கு பக்கத்தில் உள்ளது .
நான்: மீண்டும் பார்க்கிறேன். அது நியு சரஸ்வதி கபே. இது சரஸ்வதி விலாஸ். கண்டு பிடித்து விட்டேன்.
வடகோவையார்: இப்போ அனுப்பிய படத்தின் எதிர்புறத்தை காட்டுங்கள்
வடகோவையார்: சரி .சந்தைக்கு எதிரே உள்ளதுதான் பழைய கோட்டை ஒழுங்கை . You're great
நான்: நன்றி வடகோவையாரே. அந்த ஒழுங்கையைத்தான் ஞானப்பிரகாசர் கோட்டை வாய்க்கால் என்று எழுதினார்.
வடகோவையார்: கோட்டை வாசல் என்று முன்பு அழைக்கப்பட்ட ஞாபகம் . இந்த ஒழுங்கையின் இடது புறத்தத்தில் மேடு பள்ளமான நில அமைப்பில் (கோட்டை சிதைவுகளாக இருக்கலாம் ) பெரிய பனம் கூடல் இருந்தது . அதை எமது பூட்டி கோட்டைப் பனை வளவு என்றே அழைப்பார் .சின்ன வயதில் பூட்டியுடன் அந்தக் கோட்டை பனை வளவிற்கு போன ஞாபகம் . இப்போ அவை வீடுகளாகி விட்டன
நான்: நன்றி வடகோவையாரே! இவ்வுரையாடல் வரலாற்றில் நிற்கப்போகுமோர் உரையாடல். அதில் உங்கள் பங்களிப்பு நன்றிக்குரியது.
******* ********** *************
முகநூல் எதிர்வினைகள்:
Aru Visva: இன்று தான் தெரிந்து கொண்டேன் கோப்பாய் கோட்டை பற்றி... Kopay DS கட்டடத்திற்கு வடக்கே உள்ள சிறிய கோவில் க்கு ஏதும் வரலாறு உள்ளதா...
Sathyaseelan Ponnuthurai: கோப்பாய் சந்தியை அடுத்து பூதர்மடம். தொடரந்து நீர்வேலி.1946ம் ஆண்டளவில் கோப்பாய் சந்திக்கு அருகில் அரசகேசரி என அழைக்கப்பட்ட பரியாரியார் இருந்ததாகவும் நான் சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது அவரிடம் சென்று எனது இடதுகாலை மருந்து தடவி மாற்றியதாக அம்மா கூறிய ஞாபகம் உண்டு.
Arunthavarajah Geneva : சிறப்பான பதிவு. நெஞ்சு பொறுக்குதில்லையே ....
Gajey Pandithurai: உங்கள் தேடல் மட்டுமே சிறு ஆறுதல்.
தியாகராசா ராஜராஜன்: எனக்குத் தெரிந்து அது 'ஓல்ட் காஸ்ரில் ரோட்' என்றே அழைக்கப்பட்டது அதன் முடிவில் ஒரு குளம் இருந்தது. சங்கிலியன் தோப்பில் இருந்து இந்தக் குளத்துக்கு ஓர் சுரங்கப்பாதை இருந்ததாக ஒரு தகவல் உண்டு. சங்கிலி மன்னனின் அந்தப்புரம் இந்தக் கோட்டையில் இருந்ததாகவும் பட்டத்து அரசி நீராடுவதற்காகவே இந்தக் குளம் அமைக்கப்பட்டதாக அறிந்திருக்கின்றேன். அதே நேரம் சங்கிலித்தோப்புக்கு பின்புறம் இருந்த வீதி, பிரதான வீதிகளான பலாலி வீதி பருத்தித்துறை வீதிகளுக்கிடையே ஊடறுத்து செல்கின்றது. அது இன்றும் 'இராசபாதை' என்றே அழைக்கப்படுகின்றது இந்தப்பாதை வடக்கே வல்லிபுரத்தில் இருந்த கோட்டையை இணைத்ததாகவும் அறிந்திருக்கின்றேன். நான் முன்னர் வைத்திருந்த வலைப்பூவில் மன்னர் சங்கிலி தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவு செய்திருக்கின்றேன்
Vadakovay Varatha Rajan: கோப்பாய் கோட்டை பற்றிய தகவல்களை தந்ததிற்கு நன்றி கிரி .
Vadakovay Varatha Rajan: பகிர்ந்து கொள்கிறேன் கிரி
Maani Nagesh: கோப்பாய் கோட்டை பற்றிய ஆவணப்பதிவும் வட கோவையாருடனான உரையாடலும் பயனுடையதாக இருந்தது. நன்றி.
கோவை ஜயந்தன்: நானும் அந்த பகுதியில் தான் வசித்து வருகின்றேன். இதில் எஞ்சி இருக்கும் ஒன்று குதியடி குளம் என்று நினைக்கிறேன். ஆனால் அதுவும் இன்னும் ஒரிரு வருடங்களில் அழியும் அபாய நிலையில் உள்ளது .அதனை படம் பிடித்து கோப்பாய் பிரதேச செயலகத்தில் காட்சிப் படுத்தி உள்ளனர்.ஆனால் அதனை புனரமைக்க ஒருதடவை நிதி ஒதுக்கி அதனை புனர் நிர்மாணம் செய்யாமல் அவ் நிதியில் தோட்ட கிணறுகள் திருத்தப்பட்டன .எனவே எஞ்சி இருக்கும் அதனையாவது பாதுகாக்க குரல் கொடுப்போம்.
Thambirajah Elangovan : கோப்பாய்க் கிறீஸ்தவ கல்லூரியில் யான் படித்த காலத்தில் வோட்ஸ்வேர்த் என்ற அழகான இளம் ஆசிரியர் அங்கு கடமையாற்றினார். ஆங்கிலம் கற்பித்தார். அவரது வீடு கோட்டை வளவில்தான் இருந்தது. ஒருமுறை அங்கு போயுள்ளேன். அந்த இடத்திற்கும் - கோப்பாய்ச் சந்திக்கும் இடையிலுள்ள வீட்டில்தான் அப்போது தங்கியிருந்தேன்.
Vadakovay Varatha Rajan அதில் வொட்சன் என்ற வைத்தியர் இருந்தார் . அவர்களின் பூர்விகம் மாத்தளையாக இருக்கவேண்டும் . தமிழ் கதைக்க மாட்டார். அவரின் மகன் சின்ன வொட்ஸ்ஸன் நம்ம Terrence Anthonipillai யின் நல்ல சிநேகிதன் .
Terrence Anthonipillai : He was shot dead by the IPKF.
Thambirajah Elangovan : 1966 - 1969 காலத்தில் அங்கு படித்தேன். அங்கு எனது சகோதரர் திருநாவுக்கரசு - நாவேந்தன் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1967 -ல் நீங்கள் முன்னர் குறிப்பிட்ட சற்குணசிங்கம் என்பவர் வீட்டில் இருந்தேன். அவரின் மனைவி கிறேஸ் ரீச்சர் கிறீஸ்தவ கல்லூரியில் கடமையாற்றினார். தற்போது கொழும்பில் உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கிறார். அவர்களின் வீடு கோப்பாய் வடக்கில் மானிப்பாய் வீதியில் இருக்கிறது. அண்மையில் ஊருக்குப் போனபோது கோப்பாய் சென்று அந்த வீட்டையும் பார்த்து வந்தேன். ரீச்சரின் சகோதரர் துரைராசா கல்லூரி வளவிலுள்ள தேவாலயப் போதகராக இருந்தார். அவர்களின் பிள்ளைகள் என்னுடன் படித்தவர்கள். 1968 - 1969 காலப்பகுதியில் சந்திக்கு அருகாமையிலுள்ள வீட்டில் தங்கியிருந்தேன். கோட்டை வளவில் வோட்ஸ்வேர்த் மாஸ்ரர் வீடு இருந்தது எனக்கு நல்ல ஞாபகம். அவர் எங்கள் கல்லூரியில் ஆங்கில ஆசிரியர். அந்த வளவில் நான்கு வீடுகள் இருந்ததாக ஞாபகம். அந்த வீடுகளில் வோட்ஸ்வேர்த் மாஸ்ரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வசிப்பதாகச் சொன்னார்கள். வைத்தியர் வீடு பக்கத்திலுள்ள வளவில் என ஞாபகம். அவருக்கும் கோட்டை வளவுக் குடும்பத்திற்கும் தொடர்பில்லை.
கோவை ஜயந்தன் : அதன் புகைப்படம் எதுவும் இருக்கா யாரிடமும்?
நன்றி: பதிவுகள்.காம்- https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6012:2020-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
No comments:
Post a Comment