Thursday, June 25, 2020

வரலாற்றுச் சுவடுகள்: 'வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ்' (ஜனவரி 1982) - வ.ந.கிரிதரன் -


'வானம்பாடி' சஞ்சிகையின் இருபத்தோராவது இதழ் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. கவிதைகளைத் தொகுத்திருப்பவர்கள்: சேரன், நுஃமான் & அ.யேசுராசா,

ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் என்றுள்ளது, ஆனால் இச்சிறப்பிதழில் சேரன், மஹாகவி, நுஃமான், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், ஜெயபாலன், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் எனப் பலரின் கவிதைகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கின்றன. எதற்காக இந்தப்பாரபட்சம்?

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த வேறு கவிஞர்கள் எவருமேயில்லையா? கவீந்திரன் (அ.ந.கந்தசாமி), அம்பி, பிரமிள், ஜீவா ஜீவரத்தினம், சத்தியசீலன், ஏ.இக்பால், இ.இரத்தினம், சில்லையூர் செல்வராசன், மருதூர்க்கொத்தன், சாரதா, நாவற்குழியூர் நடராசன், .. என்று என்னால் மேலும் கவிஞர்கள் பலரின் சிறந்த கவிதைகளை எடுத்துக்காட்ட முடியும். கவிஞர் ஒருவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தொகுப்பில் சேர்ப்பதற்குப் பதில் சிறந்த கவிஞர்கள் பலரின் கவிதைகளை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும். ஒரு கவிஞரின் ஒரு கவிதை தொகுப்புக்குப் போதுமானது. ஏனென்றால் தொகுப்பானது ஈழத்துத் தமிழ்க்கவிதையின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவிருக்க வேண்டுமே தவிர கவிஞர்கள் சிலரைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது. அதிலும் தொகுப்பாளர்களைத் தூக்கிப்பிடிப்பதாக இருக்கக் கூடாது.
தொகுப்புகள் பலவற்றில் காணும் குறைபாட்டினையே இங்கும் காண்கின்றேன். தொகுப்பாளர்கள் தம் விருப்பு வெறுப்புக்கேற்ற வகையில் கவிதைகளைத் தெரிவு செய்திருக்கும் அதே சமயம், தம் கவிதைகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெரிவு செய்துள்ளனர். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றும் புகலிடத்தில் தொகுப்புகளைக் கொண்டு வருகையில் இதே வழியைத்தான் கையாள்கின்றனர். ஒரு குழுவாகச் செயற்படுகின்றனர்.

கவிஞர்கள் சிலரின் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளுடன் தேர்வு செய்திருக்க வேண்டிய பிற கவிஞர்களின் கவிதைகளையும் தேர்வு செய்திருந்தால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளாலாம்.ஆனால் தகுதியான, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த கவிஞர்களைத் தவிர்த்து விட்டு, தொகுப்பாளர்கள் தம்மையும் , தமக்குப் பிடித்தவர்களையும் முன்னிலைப்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளைச் சிறப்பிதழில் சேர்த்திருப்பதை ஏற்றுக்கொள்வது சிரமமானது.

இவ்விதமாகக் கவிதைகளைத் தேர்வு செய்யும்போது 'எமக்குப்பிடித்த ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்' என்ற தலைப்பிட்டுப் பிரசுரித்தால், சிறப்பிதழுக்கு 'ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ்' என்று பெயரிடாமல், 'கவிஞர்களுக்குப் பிடித்த ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ்' என்று பெயரிட்டிருந்தால் இப்பிரச்சனையே தோன்றியிருக்காது.

மேற்படி வானம்பாடிச் சிறப்பிதழில் வெளியான ஈழத்துக் கவிதைகள் :

சிறு புல் - மஹாகவி

வீசாதீர்! - மஹாகவி

பழங்கதை - முருகையன்

உறவு - நீலாவணன்

வேட்டை - மு.பொன்னம்பலம்

மின்னல்

சுய ஆட்சி - மு.பொன்னம்பலம்

எப்ப விடியும்? - தா.இராமலிங்கம்

சிலை எழுப்பி என்ன பயன்? - தா.இராமலிங்கம்

மென்மையின் தளைகளிலிருந்து... - சண்முகம் சிவலிங்கம்

காலத்தேர் - மஹாகவி

நண்டும் முள் முருக்கும் - சண்முகம் சிவலிங்கம்

நேற்றைய மாலையும் இன்றைய காலையும் - எம்.ஏ.நுஃமான்

கண்ணீர்த் துளித் தீவு - சிற்பி

ஏர் பூட்டு விழா - எம்.ஏ.நுஃமான்

கல்லுகளும் அலைகளும் - அ.யேசுராசா

புதிய சப்பாத்தின் கீழ் - அ.யேசுராசா

இலையுதிர் கால அரசியல் நினைவுகள் - சி.சிவசேகரம்

மக்களைப் பிரிந்த அறிவாளிகள் - சி.சிவசேகரம்

நம்பிக்கை - வ.ஐ.ச.ஜெயபாலன்

வைகறைப் பூக்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

பகல் பொழுதின் மரணம் - கவியரசன்

புதிய கிடுகுகள் பழைய வேலி - கவியரசன்

அகலிப்பு - மு.புஷ்பராஜன்

நிலவுக்கு எழுதல் - சு.வில்வரத்தினம்

உராய்வு - சு.வில்வரத்தினம்

வரும் நேரம் - உமா வரதராஜன்

காலம் - எச்.எம்.பாறூக்

நண்பர்களுக்கு - ஹம்சத்வனி

வேலி - ஊர்வசி

அவர்களுடைய இரவு - ஊர்வசி

வெளியிலிருந்து ஒரு குரல் - ஆதவன்

நெருக்கம் - பாலசூரியன்

காலம் - நா.சபேசன்

வானம்பாடி -21 இதழை வாசிக்க: http://noolaham.net/project/27/2637/2637.pdf

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்! மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில தி...

பிரபலமான பதிவுகள்