இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.
இன்று தற்செயலாக நண்பர் வரதீஸ்ரவன் 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் வரும் 'தந்தையைப் போல் உலகில் தெய்வம் உண்டோ' என்னும் பாடலுக்கான யு டியூப் இணைப்பினை அனுப்பியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகளைக் கேட்டபோது,
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
உண்ணாமல் உறங்காமல்"
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா"
குறிப்பாகக் 'காரிருள் போலே பாழான சிதையில்வ் கனலானார் விதி தானா' என்னும் வரிகளைக் கேட்டபோது அவர் சிதையில் தனித்து எரிந்த காட்சி படமாக விரிகின்றது.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, November 30, 2022
இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -
Tuesday, November 29, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 13 - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிப் பிரபஞ்சம் பற்றிய கண்ணம்மாவுடனான எனது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இயற்கையை இரசிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. இருப்பு பற்றிய அறிவியல் பூர்வமான உரையாடல்களிலும் எனக்கு நேரம் தெரிவதில்லை. கண்ணம்மாவுடன் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் உரையாடலும் இத்தகையதொன்றுதான். இந்த விடயத்தில் அவளும் என் அலைவரிசையில் இருந்தாள். அது எனக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இவை போன்ற உரையாடல்கள் இல்லையென்றால் இருப்பில் என்ன அர்த்தமிருக்க முடியுமென்றும் சிந்திப்பதுண்டு. அதனால் இவற்றை எப்பொழுதும் வரவேற்பவன். பங்குகொள்பவன்.
கண்ணம்மாவே மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கேள்வியினைக் கேட்டாள்:
"கண்ணா, காலவெளிச் சட்டங்களால் ஆன இப்பிரபஞ்சம் பல படத்துண்டுகளால் ஆன திரைச்சித்திரம் போன்ற காலவெளிச் சித்திரம் என்று கூறினாய் அல்லவா?"
"ஓம். கூறினேன் கண்ணம்மா. அதற்கென்ன?'
'கண்ணா, திரைப்படச் சுருளை நாம் முன்னோக்கி இயக்கலாம். அல்லது பின்னோக்கி இயக்கலாம். இல்லையா என் செல்லக்கண்ணா?"
"உண்மைதான் கண்ணம்மா. நீ சொல்வது முற்றிலும் சரியானதுதான் கண்ணம்மா."
Friday, November 25, 2022
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (12) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 12 - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்!
"கண்ணம்மா நீ ஓர் அலையடி"
"கண்ணா நான் அலையா?"
"கண்ணம்மா நீ ஒரு துகளடி"
"நான் துகளா கண்ணா?"
'கண்ணம்மா நீ ஓர் அலை. நீ ஒரு துகள். அலை-துகள் நீ கண்ணம்மா."
"கண்ணா, ஓரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். நான், நீ, நாம் காணும் இந்த வான், இந்த கடல், இப்பிரபஞ்சம் எல்லாமே அலை-துகள்தான். சக்தி-பொருள்தான். இல்லையா கண்ணா?"
"கண்ணம்மா, சரியாச் சொன்னாய். நீ சரியாகவே இருப்பைப் புரிந்து வைத்திருக்கிறாயடி."
"உண்மைதான் கண்ணா. உன்னுடன் சேர்ந்து என் கவனமும் அறிவியலின் பக்கம் திரும்பி விட்டது. "
"பெரிய இப்பெருவெளிப்பிரபஞ்சமும் சரி, நுண்ணிய குவாண்ட உலகும் சரி கண்ணா பொருள்-சக்தியின் பிரதிபலிப்புத்தான். சக்தியின் நடனம்தான் நாம் காணும் இந்தபொருட் பிரபஞ்சம் கண்ணா."
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (11) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் பதினொன்று - இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று.
"கண்ணம்மா, இயற்கை எவ்வளவு அழகானது. படைப்புத்திறன் மிக்கது." என்றேன்.
அதற்கு அவள் இவ்விதம் பதிலிறுத்தாள்:
"கண்ணா, நீ கூறுவது மிகவும் சரியான கூற்று. உண்மையில் நானும் இவ்விதம் அடிக்கடி எண்ணுவதுண்டு. உண்மையில் இயற்கையின் அழகு, நேர்த்தி, படைப்புத்திறன் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. இவை பற்றி அறிய, புரிய என் இருப்பு முழுவதையும் அர்ப்பணித்தாலும் நான் மகிழ்வேன் கண்ணா."
"கண்ணம்மா, உண்மையில் இயற்கையின் படைப்புத்திறனே என்னைப் பெரிதும் வியக்க வைக்கின்றது."
"கண்ணா, வெளியில் விரிந்திருக்கும் இப்பிரமாண்டமான பிரபஞ்சம் மட்டுமல்ல, கண்ணுக்கே புலப்படாத குவாண்டம் உலகிலும்தான் எவ்வளவு நேர்த்தியாக எல்லாமே படைக்கப்பட்டுள்ளன. உள்ளும் , வெளியும் காணும் அனைத்திலுமே படைப்புத்திறன் வெளிப்பட்டு என்னை வியக்க வைக்கின்றது."
அருகிலமர்ந்து
என் தோளுடன் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் மனோரஞ்சிதத்தை, என்
கண்ணம்மாவை, ஒரு கணம் நோக்குகின்றேன். பொட்டும் , இரட்டைப்பின்னலுமாக
பதின்ம வயதுப்பிராயத்தில் காட்சி தந்ததுபோலவே இன்றுமிருக்கின்றாள். நான்
அவளையே வைத்த கண் வாங்காது உற்றுப்பார்க்கவே அப்பார்வையின் வீச்சு
தாங்காமல் ஒரு கணம் வெட்கம் கவிழ முகம் தாழ்த்தினாள். மறுகணமே தன்னைச்
சுதாரித்துகொண்டாள். அத்துடன் கேட்டாள்:
"என்ன பார்க்கிறாய் கண்ணா?"
"இல்லை,
இந்த அழகு, இந்தச் சிரிப்பு, இந்தக் குறும்பு இவையெல்லாம் உண்மையா? இங்கு
நான் படைப்புத்திறனை , இயற்கையின் படைப்புத்திறனை வியக்கின்றேன் கண்ணம்மா.
கண்ணம்மா, நான் இயற்கையை, இந்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கித்தான்
கூறுகின்றேனடி, அனைத்தையும் படைத்ததாகக் காண்கின்றேன். நாம் எம் புலன்களைக்
கொண்டு இயற்கையை நூறு வீதம் அறிய முடியாது. இல்லையா? அதுவரை ,
அவ்விதமானதொரு அறியும் நிலை வரும்வரை , இயற்கையே என் கடவுள். நாம்
அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள். இதுதான் என் நிலைப்பாடு."
Tuesday, November 22, 2022
- எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியம் சிறந்த கலை, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது.
**********************************************************
(பதிவுகள்.காம்) ஆய்வு: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' நாவல்கள் - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன் அவர்களது எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால் இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ; சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.
கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.

எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் பின் ஆரம்பமாகும் இவ்விரு நாவல்களும் பிரதான கதாபாத்திரமான இளங்கோ என்ற இளைஞனின் பார்வையில் கூறப்பட்டுள்ளன. படித்தவர்களும் உயர் பதவியில் இருந்தவர்களும் உயிர்ப்பாதுகாப்பு கருதி புலம் பெயரத் துணியும் ஒரு சூழ்நிலை. பொதுநலவாய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்து கனடாவிற்குச் செல்வதற்கு விசா எடுக்கத் தேவையில்லை என்ற அனுகூலத்தைப் பாவித்து, பாரிஸ் நகருக்கும் அங்கிருந்து பொஸ்டன் ஊடாக கனடாவின் மான்ரியாலுக்கும் செல்ல உத்தேசித்திருக்கும் இளங்கோ உட்பட்ட ஐவரை, பொஸ்டனில் இருந்து கனடாவின் மன்றியேல் நகருக்கு ஏற்றிச் செல்ல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விடுகிறது. இதனால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக பொஸ்டனில் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கு ஐவரும் தள்ளப்படுகின்றனர். பொஸ்டனில் இருந்து நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கூடத்தில் தடுப்புக் கைதிகள் ஆக்கப்படுகின்றனர்.
Wednesday, November 16, 2022
தொடர்நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (10) - ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன் -
எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.
"என்ன கண்ணா யோசனை?"
எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.
"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"
"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."
"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப் பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில் பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."
தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (9) - மின்காந்தமணி என்னுமென் சகி! - வ.ந.கிரிதரன் -
வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன். இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.
"என்ன எவளைப்பற்றி யோசனை?"
எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.
"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான் கண்ணம்மா"
"கண்ணா, இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"
"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும் வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."
'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (8) - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்! - வ.ந.கிரிதரன் -
அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.
அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.
பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி - *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...