Monday, March 30, 2026

மகாகவி பாரதியார் பாடல் - 'புதுமைப்பெண்'


எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் 'புதுமைப்பெண்' பாடலின் சில பகுதிகளை எடுத்து, தொகுத்திருக்கின்றேன். . எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5 . இங்கு என்னுடன் இணைந்து பாடும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் - செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5

மகாகவி பாரதியார்  பாடல் - 'புதுமைப்பெண்' 
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

No comments:

மகாகவி பாரதியார் பாடல் - 'புதுமைப்பெண்'

எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் 'புதுமைப்பெண்' பாடலின் சில பகுதிகளை எடுத்து, தொகுத்திருக்கின்றேன். . எனது குரலைப் பாவித்து , இச...