Wednesday, March 25, 2026

' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' 'யு டியூப் சானல்': மகாகவி பாரதியார் பாடல்கள் நான்கு!


'வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' (V.N.Giritharan Songs & Views) என்னும் 'யு டியூப் சான'லில்  செயற்கை அறிவின் (AI)  துணை மூலம் இசையமைக்கப்பட்ட , குரல் கொடுக்கப்பட்ட  என் பாடல்களைக் கேட்டு மகிழலாம். பல்வேறு விடயங்களைப் பற்றியஎன் பார்வைகளையும் கேட்டறிந்து கொள்ளலாம்.

அவ்வப்போது காப்புரிமைப் பிரச்சனை அற்ற , எனக்குப் பிடித்த மகாகவி பாரதியார் போன்றோரின் கவிதைகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்து, பாட வைத்துப் பகிர்ந்து  கொள்வேன்.

பாடல்களும்,  பார்வைகளும் பிடித்திருந்தால் என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.   எனது மின்னஞ்சல் முகவரி  girinav@gmail.com  

1


மகாகவி பாரதியார்  பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!

இசை & குரல்: SUNO AI  ஓவியம்:  சாட் ஜிபிடி   வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்  
பாடலைக்  கேட்க 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - 


2


மகாகவி பாரதியார்  பாடல் - நல்லதோர் வீணை செய்தே!

இசை & குரல்: SUNO AI  ஓவியம்:  கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 
பாடலைக் கேட்க 

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?



3


மகாகவி பாரதியார்  பாடல் - கண்ணன் என் காதலன்!

இசை & குரல்: SUNO AI  ஓவியம்: கூகுள் நனோ பனானா  வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 
பாடலைக் கேட்க 


ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி



4

மகாகவி பாரதியார்  பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!

இசை & குரல்: SUNO AI  ஓவியம்:  சாட் ஜிபிடி   வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்  
பாடலைக் கேட்க 


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்



No comments:

மகாகவி பாரதியார் பாடல் - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ! இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்

மகாகவி பாரதியார்  பாடல் - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ! இசை & குரல்: SUNO AI  ஓவியம்:  சாட் ஜிபிடி   வழி வநகி ஆக்க...