Tuesday, March 17, 2026

எழுத்தாளர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!


'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர்  வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள்.  தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் தனிப்பட்ட ஆளுமை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டது.  குறிப்பாகக் கலையுலகச் சார்ந்த பெண்கள் அவர் மேல் வைத்துள்ள குற்றச்சாட்டுகள். அவற்றை தேர்வுக் குழுவினர் கவனத்தில் எடுத்திருந்தால் கவிஞருக்கு விருது கிடைத்திருக்காது.

எழுத்தாளர் ஜெயமோகன் உட்படப் பலரும் பல்வேறு அமைப்புகளூடு விருதுகள் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தம் பார்வையில் விருதுகுரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மாநில அரசுகள் இதுபோல் விருதுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் ஞானப்பீட விருது குடும்பமொன்றினால் வழங்கப்படும் விருது.

நான் கவிஞர் வைரமுத்துவின் திரைப்படப்பாடல்களை அவ்வப்போது கேட்டிருக்கின்றேன். பல பாடல்கள் அவரது மொழிக்காக என்னைக்கவர்ந்தவை. அவரது புனைகதைகளை முழுமையாக நான் வாசித்தவனல்லன். ஆனால் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'  வாசித்திருக்கின்றேன். நிச்சயம் விருதுக்குரிய நாவல். மண் வாசனை மிக்க நாவல் மட்டுமல்ல அரசு ,அதிகாரம், புதிய அணைக்கட்டுமானம் மூலம் கள்ளிப்பட்டுக் கிராமத்து மக்களையே சொந்த மண்ணில் அகதிகளாக்கும் அவலம், அதனால் ஏற்படும் வேதனை  என்பவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தும் நாவல்.  நாவலாசிரியர் மண்ணை, மக்களை, இயற்கையை எவ்வளவு  உன்னிப்பாகக் அவதானித்திருக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் நாவல். உரையாடல்களை உயிர்த்துடிப்புடன் எழுதியிருக்கின்றார்.  

இன்று அவரை ,அவரது எள்ளி நகையாடுபவர்களில் பலர் அவரது எழுத்துகளை வாசித்திருக்க  மாட்டார்கள். அவரது கட்சி அரசியல், அவர் மீதான் பெண்களின் குற்றச்சாட்டுகள், அவரது  சில ஆளுமைக் குறைபாடுகள் காரணமாக அவற்றினூடு அவர் பற்றிய கருத்துகளை முன் வைக்கின்றார்கள் போல்தான் தெரிகின்றது.  கம்யூனிஸ்ட்டான மிகையில் ஷொலகாவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது. மதவாதிகளான டால்ஸ்டாய், ஃபியதோர் த்யயேவ்ஸ்கி போன்றோர் உலகின் உன்னத இலக்கியப் படைப்புகளைத் தந்திருக்கின்றார்கள். கவிஞர் வைரமுத்துவின் படைப்புகளைப் படைப்புகளூடு அணுகினால் அவை இலக்கியமா இல்லையா என்பது தெரியும். 

கூட்டங்களில் அவரின் தனித்துவமான உரைகளைச் சுவைத்திருக்கின்றேன். செவிநுகர் கனிகள் அவை.அவரது எழுத்துகளை இரசிக்கும் இலட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றார்கள். அவர் கவிதை, கட்டுரை, நாவல் எனப் பல நூல்களை எழுதியிருக்கின்றார். ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கின்றார். அவற்றின் அடிப்படையில் இவ்விருதை அவருக்கு அக்குடும்பத்தினரின் இலக்கிய அமைப்பு வழங்கியிருக்கின்றது.

அவர் திரைப்படக் கவிஞரும் கூட. அதனால் திரைப்படப் பாடல்கள் எல்லாவற்றையுமே உன்னத இலக்கியப் படைப்புகளாகக் கருத முடியாதுதான். சில தொழிலுக்காக எழுதப்பட்டவையாக இருக்கும்.  உண்மையில் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' 'போன்றதொரு நாவலை , அது போன்ற மண் வாசனைமிக்கதாக, உயிர்த்துடிப்பு மிக்க உரையாடல்களுடன் , இயற்கையை உள் வாங்கி எழுதுவது இலேசானது அல்ல. 

ஒரு குடும்பத்தின் இலக்கிய விருது ஒருவருக்குக் கிடைத்திருக்கின்றது. அதற்காக விருது வழங்கிய குடும்பத்தைப் பாராட்டலாம். விருது வாங்கியவரையும் பாராட்டலாம். வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்துவுக்கு.

கவிஞர் வைரமுத்துவுக்குக் கிடைத்த விருது மூலம் தமிழ் எழுத்தாளர்களுக்கு நன்மையொன்று கிடைத்துள்ளது. அதுதான் ஜெயமோகன் அறிவித்துள்ள ஒரு கோடி ரூபா விருது.  உண்மையில் , அது நடைமுறைக்கு வந்தால், அதற்காக ஜெயமோகனைப் பாராட்டலாம்.  தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தால் வாழ முடியாத நிலையில் இருப்பவர்கள். சிலருக்காவது இவ்விதமான செல்வச்செழிப்புள்ள விருது கிடைப்பது நிச்சயம் விருது பெறுபவரின் வாழ்க்கைக்கு உதவும். இதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் வாழ்த்துகள்.

************************

கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல் பற்றி  'நானொரு Dreamer' வலைப்பதிவில் வந்த எண்ணப்பதிவு என்னைக் கவர்ந்தது. அதனை இங்கு கீழே தந்திருக்கின்றேன்:

கள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை

உண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. 'இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள் இந்த இதிகாசம் நடக்கும் காலத்துக்குள் நம்மை அழைத்து செல்கிறார்.

பசுமையாய் இல்லையென்றாலும் பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட ஒரு வெயில்காட்டு பிரதேசம் - கள்ளிப்பட்டி, இந்த ஊர், அரசாங்க அதிகாரத்தாலும், அணைக்கட்டு அலைகளாலும் ஆட்கொள்ளப்படவிருக்க, அங்கு வசிக்கும் மக்கள் சொந்த ஊரை விட்டு தாய்நாட்டிலேயே அகதிகளாய் அலைந்து திரியப்போகும் கொடுமையை எண்ணியபடி வெளியேறும்போது, அந்த  மண்ணை விட்டுப்பிரிய மனமில்லாத ஒரு 70வயது விவசாயிக்குள் நடக்கும் எண்ணப்போராட்டமே இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.

கடைசிப் பக்கத்தை படித்து முடித்த, ஒரு கனத்தமனத்தோடு, இந்த புத்தகத்தை இன்னும் பலர் படிக்கவேண்டும் என்று பரிந்துரைசெய்ய ஆவல் எழுப்பியது இந்த நூலின் சிறப்பேயன்றி வேறென்ன சொல்ல... வைரமுத்து அவர்களின் முத்தான வரிகளைப்பற்றி நான் சொல்லித்தான் இனி யாரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனகிற அவசியமில்லை என்பதால் இந்த நூலின் சில சிறப்பம்சங்களை மட்டும் கூறிச்செல்கிறேன்.

இதுவரை சினிமாவில் நாம் பார்த்த பசுமையான கிராமங்களைப் போலில்லாமல், கத்தாழைச்செடிகளும், மொட்டைப்பாறைகளும், ஓணான்களும் மட்டுமே அடையாளங்களாக இருக்கும் கள்ளிப்பட்டி என்ற ஊரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

70 வயது 'பேயத்தேவர்' - இந்த கதையின் நாயகன். கள்ளிக்காட்டு வெயில்வரப்பில், உழுதுண்டு வாழும் விவசாயி. இவரது காதல், உழைப்பு, அனுபவம், சோகம், நேர்த்தி, நிபுணத்துவம் இப்படி எல்லாவற்றையும் பற்றி கூற, ஒரு விவசாயியின் வாழ்க்கையை நாம் உடனிருந்து வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை நமக்கு இந்த நூல் கொடுக்கிறது.

சாராயம் காய்ச்சுவது, முகச்சவரம் பண்ணுவது, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பது, கிணறு வெட்டுவது, அணை கட்டுவது, கோழிச்சாறு சமைப்பது இப்படி பல தகவல்களை அனாசயமாக அள்ளித்தெளிக்கிறார் கவிப்பேரரசு. இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை முன்னுரையில் தெளிவாய் விளக்கியுள்ளார்.

நூலில் ஒரு அத்தியாயத்தில், வெளியூரில் இருக்கும் ஒரு கணவன், தன் மனைவியின் இறந்த செய்தியை தெரிந்துக் கொண்டு, வீட்டை நோக்கி பயணிப்பான். அப்படி அவன் பயணப்படும்போது அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு கிலோமீட்டரிலும் எண்ணி எண்ணி அழுதபடி தனது நண்பனிடம் புலம்பிக்கொண்டு போவது மிகவும் கனமான ஒரு பகுதியாக இருந்தது.

உதாரணம் :

"அவ சொன்ன பக்குவம் கேட்டுக் கோழிக்கொழம்பு வச்சிர்லாம்... ஆனா மீன்குழம்பு அவதான்ய்யா வக்கணும். மீன் வாங்கியாந்து குடுத்தா உடனே ஒரசிட மாட்டா. மீனக் கவுளத்தூக்கிப்பாப்பா. உள்ள ரத்தப்பச இருந்தாத்தான் நல்லமீனும்பா... இல்லாட்டி செத்த கழுதைக்குச் சிங்காரம் எதுக்குன்னு தூக்கிப் போட்டுருவா. ஒத்தமீன்ல கொழம்பு வச்சாலும் வந்தது போனதெல்லாம் தின்னதுபோக யாருக்குந் தெரியாம ஒருகை சாறெடுத்து உறியில வச்சிருவா. மறுநா காலையில 'இந்தா ஆம்பள... ஒனக்குத்தான்'னு சொல்லி உறிக்கொழம்பெடுத்து ஊத்துவா. அதுல பாருங்க... அவ ஒளிச்சுவச்ச குழம்புலயும் ஒரு துண்டு கெடக்கும். குழம்புவச்ச பெறகுங்கூட மீனு குட்டிகிட்டி போடுமா..? இப்படி வீட்டுக்கு வேலைக்காரியா வந்த தெய்வம் செத்துக் கிடக்குது... இதோ... இன்னும்... அரைமைல் தூரத்தில்.."  இதுபோல் தன் மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது.

இந்த புத்தகத்தைப் பற்றி திரு.வைரமுத்து அவர்கள் கூறியுள்ளது:

"1958இல் வைகை அணை கட்டி முடிக்கப்பட்டு, அதன் நீர்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்திலிருந்து துடைக்கப்பட்டபோது அழுது கொண்டே ஊரைவிட்டு வெளியேறும் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் கையைப் பற்றிக்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் நனைந்த கால் சட்டேயோடு தானும் அழுது வெளியேறுகிறார் ஓர் ஐந்து வயதுச் சிறுவன்.

இடம் பெயர்த்து நடப்பட்டதில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்கிறது.

அவன் வளர வளர தண்ணீர்ச் சமாதியில் புதைந்துபோன தனது ஊரை, பாறைகளில் அமர்ந்து பெருமூச்சோடு பார்த்துவிட்டு வருகிறான்.

வறண்ட கோடைகளில் தண்ணீர் வற்ற வற்ற புதைக்கப்பட்ட ஊர் லேசாய்க் கை, கால், முகம் காட்டும்; அப்போதெல்லாம் அந்தச் சுவடுகளைத் தடவித் தடவிப் பார்த்து ஆசைதீர அழுதுவிட்டு வந்திருக்கிறான்.

நிறைபெருக்காக நீர் நிறைந்திருக்கும் கால்ங்களில் வைகை அணையின் தமகுமேடுகளில் ஏறி நின்று கொண்டு, ' அதே! அங்கே கொக்கோ குருவியோ பறக்கிறதே! அதற்குக் கீழ்தான் எங்கள் ஊர்' என்று நண்பர்களுக்கு ஆசையோடும் துயரத்தோடும் அடையாளம் காட்டியிருக்கிறான்.

42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனின் பவளவிழாவில் இறக்கி வைக்குமாறு காலம் அவனுக்கு கட்டளையிட்டது.

எழுதினான்; அவன் பெயர் வைரமுத்து.
எழுதப்பட்டது; அதன் பெயர் - 'கள்ளிக்காட்டு இதிகாசம்' "

இப்படியாக முன்னுரைப் பகுதியில் திரு.வைரமுத்து அவர்கள், இந்த புத்தகம் எழுதிய மனநிலையை சொல்கிறார்.

இதைப் படிப்பவரின் கண்ணீர்துளியின் உப்புச்சுவையை புத்தகத்தின் ஒருசில பக்கங்களாவது கண்டிப்பாக சுவை பார்க்கும்.  புத்தகம் படித்து முடிக்கும்போது, அணைக்கட்டில் புரண்டோடும் வெள்ளத்தில் நம் உணர்வும் புரண்டோடும். நம மனமும் கள்ளிக்காட்டு தடயங்களை தேடும்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள்!

இந்த நூலை சிறப்பிக்கும் வகையில், 2003ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

No comments:

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!

[ "THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and...