Monday, January 15, 2024

வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!


கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள்  குறித்த ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன்  அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.  வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை  என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.  


திண்ணை இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதிவரும் இவரது அறிவியல் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் பதிவுகள்  இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அணுப் பொறியியலாளர், தமிழ் அறிவியல் எழுத்தாளர். அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார்,  இவை பற்றி இவர் பல அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். பெர்னாட்ஷாவின் நாடகமொன்றினையும் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.ஜெயபாரனை வாழ்த்துகினறோம். மேலும் இவரது இலக்கியப்பணி தொடரட்டும்; சிறக்கட்டும்.

இவர் தன்னைப்பற்றித் தனது வலைப்பதிவில் இவ்விதமாகத் தன்னை விபரித்திருக்கின்றார்:

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.

இதுவரை பன்னிரெண்டு நூல்கள் வெளிவந்துள்ளன : ஆக்க வினைகளுக்கு அணுசக்தி [சென்னை பல்கலைக் கழக முதற் பரிசு பெற்றது], அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், தாகூரின் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, முக்கோணக் கிளிகள் படக்கதை, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க். இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : அண்டவெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.


 

No comments:

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி -   *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்