Tuesday, January 16, 2024

'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்!


இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத்  தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

அண்மையில் அவரைப்பற்றி எழுதிய எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை பற்றி, 'அக்கினிக்குஞ்சு' பாஸ்கர்,  அமரர் எஸ்.பொ, ஓவியர் செள, ஓவியர் மூர்த்தி, ஓவியர் கனகலிங்கம் , கவிஞர் மஹாகவி, 'மஹாகவி'யின் குறும்பா, சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, செம்பியன் செல்வன், செங்கை  ஆழியான், மு.தளையசிங்கம், அவரது 'புது யுகம் பிறக்கிறது' (அரசு வெளியீடாக வெளியான சிறுகதைத்தொகுப்பு), யாழ் தேவன், சொக்கன், பத்மநாப ஐயர் என அவரது உரையாடல் பல்வேறு இலக்கிய ஆளுமைகளைத் தொட்டுச் சென்ற நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.

அக்காலத்தில் மலையகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பத்மநாப ஐயர், மு.தளையசிங்கம் ஆகியோர் வந்து சந்திப்பதை நினைவு கூர்ந்த அவர் தற்போது முதுமை காரணமாகச் சிறிது தளர்ந்திருக்கும் கவிஞர் கந்தவனம் பற்றியும் நினைவு  கூர்ந்தார். கவிஞர் கந்தவனத்துடனான தனது நீண்ட காலத்தொடர்பு பற்றியும், அண்மையில் அவருடன் உரையாடியது பற்றியும் நினைவு கூர்ந்த அவர் கவிஞரின் தற்போதைய நிலை குறித்து வருந்தவும் செய்தார்.

'இளம்பிறை'ரஹ்மான் அவர்களின் 'இளம்பிறை' சஞ்சிகையும், 'அரசு' பதிப்பகமும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை.


தனது உரையாடலில் அவர் 'இளம்பிறை' சஞ்சிகையை நடத்தியபோது எதிர்கொண்ட சவால்களை, சிரமங்களைப்பற்றியும் நினைவு கூர்ந்தார். சஞ்சிகைக்குக் கிடைத்த விளம்பரங்கள் மிகவும் உதவியாகவிருந்த விடயத்தைக் குறிப்பிட்ட அவர் சஞ்சிகை விற்பனை மூலம் தான் பெரிதும் வருமானத்தை எதிர்பார்த்திருக்கவில்லையென்றும், ஆனால் விளம்பரங்கள் சஞ்சிகை வெளிவர உதவியதாகவும், சஞ்சிகையை நாடு தழுவிய வாசகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பிப்பதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதுபோல் ஒரு முறை அரசு பதிப்பக வெளியோடொன்றின் வெளியீட்டு விழாவை மூதூரில் நடத்தியதாகவும், மூதூருக்குத் திருமலையிலிருந்து  படகு மூலம் சென்றது பற்றியும் நினைவு கூர்ந்தார். அக்காலத்தில் புகழ்பெற்ற ஓவியர்களுக்குப் பணம் கொடுத்து வரைவது சாத்தியமில்லாத சூழலில் , எஸ்.பொ அறிமுகப்படுத்திய மாணவனே செளந்தரராஜன் என்னும் ஓவியர் செள என்றும் ,அவரது ஓவியங்களைக் கவிஞர் மஹாகவியின் 'குறும்பா'வுக்குப் பாவித்ததாகவும், அதன் மூலம் தங்களுக்கும் பயன் ஏற்பட்டதாகவும், ஓவியர் 'செள'வுக்கும் நல்ல அறிமுகம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.  ஓவியர் செள பின்னாளில் சிரித்திரனில் தொடராக வெளியான செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்' நகைச்சுவை நாவலுக்கு ஓவியங்கள் வரைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'ஆச்சி பயணம் போகின்றாள்' தொடர் சிரித்திரனில் வெளியாவதற்கு முன்னர் செம்பியன் செல்வனின் 'விவேகி'யிலும் தொடராக வெளிவந்து நின்றதாக நினைவு.

'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் உரையாடச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித்தந்த முகநூலுக்கு என் நன்றி. அவரைப்பற்றிய முருகபூபதியின் 'பதிவுகள்' கட்டுரையினை என் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதனைப் பார்த்துவிட்டே ரஹ்மான் என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்