நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல் மிகுல் டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra) எழுதிய் புகழ் பெற்ற ஸ்பானிஸ் மொழி நாவலான 'டொன் கியூடே அல்லது டொன் கியூடி' (Don Quixote) பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இரு பாகங்களை உள்ளடக்கிய நாவல் தமிழில் 'டான் குயிக்ஸாட்' என்னும் பெயரில் நற்றிணைப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார் பேராசிரியர் சிவ முருகேசன்.
இந்நாவலைப் பற்றிய என் குறிப்பினை வாசிக்கையில் , குறிப்பாக நீங்கள் இலங்கைத் தமிழராக இருக்கும் பட்சத்தில் , நிச்சயம் உங்களுக்கு ஒருவரின் நினைவு தோன்றலாம். அப்படித்தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.
டொன் கியூடே நாவல் இலக்கியத்தில் சுவையான, மறக்க முடியாத கதா நாயகர்களில் ஒருவன். இந்நாவல் அவனது சாகசப்பயண அனுபவங்களை விபரிப்பது.
நாவலின் கதை இதுதான்: டொன் கியூடே வாசிப்பதில் ஆர்வம் மிகுந்தவன். அவன் வீர தீரச் செயல்கள் மிகுந்த சாகசக் கதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவன். அவனது வாசிப்பின் விளைவாக அவன் தன்னை ஒரு சாகச வீரனாகக் கற்பனை செய்து கொள்கின்றான். உலகைக் காக்க வந்த ஒரு வீரனாக எண்ணிக்கொள்கின்றான். அந்த கற்பனை உலகையே அவன் உண்மையான உலகாக எண்ணி, நிசத்துக்கும் , நிழலுகுமிடையில் நிலவும் வேறுபாட்டினை உணராது செயற்படுகின்றான்.