- (வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/) என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.) -
1. உங்கள் பெயரின் முதல் எழுத்துக்களான வ.ந என்பவை எதனைக் குறிக்கின்றன?
உண்மையைக் கூற வேண்டுமானால் நான் பால்யப் பருவத்தை வவுனியாவில் கழித்தேன். எனது ஆரம்பக் கல்வியை , ஏழாம் வகுப்பு வரை, வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டேன். எனது அம்மா , நவரத்தினம் டீச்சர், அங்கு ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் வீடு முழுவதும் தமிழகத்தில் வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளால் குவிந்து கிடந்தது. ஈழத்துப்பத்திரிகைகளான ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளும் அவற்றில் அடங்கும். அப்பாவே என் பால்யகாலத்து வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கிய காரணம். எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதனாலேயே ஆரம்பமானது. வவுனியா குளங்கள் மலிந்த , இயற்கை வளம் மிக்க மண். நாங்கள் அப்பொழுது வசித்து வந்த குருமண்காடு பகுதி ஒற்றையடி பாதையுடன் கூடிய , வனப்பிரதேசம். பட்சிகளும், வானரங்களும் இன்னும் பல்வகைக் கானுயிர்களும் நிறைந்த பகுதி. அதன் காரணமாகவே ந.கிரிதரன், கிரிதரன் என்று மாணவப்பருவத்தில் எழுத்துலகில் காலடியெடுத்து வைத்த எனக்கு வன்னி மண்ணான வவுனியாவின் முதலெழுத்தை என் பெயருடன் சேர்க்க வேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. அதன் விளைவாகவே அக்காலகட்டத்தில் வ என்னும் எழுத்தை என் பெயரின் முன்னால் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். ந.என்பது என் தந்தையாரான நவரத்தினத்தைக் குறிக்கும். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் நான் பிறந்த இடம், என் தந்தையார் பிறந்த இடம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை. அதன் முதல் எழுத்தும் வ. அந்த வகையிலும் வ.ந. என்பது பொருந்திப் போகின்றது. இருந்தாலும் வ என்னும் எழுத்தை நான் தேர்வு செய்ததற்குக் காரணம் வவுனியாவும் இயற்கை வளம் மலிந்த வன்னி மண்ணுமே. அப்பொழுது நான் நான் பிறந்த இடம் வண்ணார்பண்ணை என்பதற்காகத் தெரிவு செய்யவில்லை. ஏனென்றால் அப்பெயரில் எழுதத்தொடங்கியபோது நான் பதின்ம வயதினைக்கூட அடைந்திருக்கவில்லை. நான் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த , எனக்கு மிகவும் பிடித்த வன்னி மண்ணான வவுனியா என்பதால், அதன் முதல் எழுத்தினை என் பெயரில் முன் சேர்க்க வேணடுமென்ற எண்ணமே எனக்கு அப்போதிருந்தது. ஆனால் அவ்விதம் தேர்வு செய்த வ நான் பிறந்த, என் தந்தையார் பிறந்த ஊரின் பெயரின் முதலெழுத்துடன் இணைந்து போனது தற்செயலானது.





