Friday, May 3, 2019

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.


இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

Friday, January 4, 2019

வ.ந.கிரிதரனின் பதினான்கு கவிதைகள்!

1. சுடரும் இரகசியங்கள்!.
இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? 'அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?'
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.

2. மின் பின்னியதொரு பின்னலா ?

நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.
தனியாக எப்பொழுதுமே இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
உனக்கும் எனக்குமிடையில் எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதும் ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.
நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட நான் அறிவதற்கும்
புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு நேரமுண்டு. தூரமுமுண்டு
கண்ணே!
காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா1
காலத்தினொரு கூறாய் உன்னை நான் காண்பதெல்லாம்
இங்கு உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!

Tuesday, January 1, 2019

இணையத்தில் கூகுள் அட்சென்ஸ் (AdSense)மூலம் வருமானம் பெற ஆர்வமுள்ளவர்களுக்கான தகவல்!

இணையத்தில் கூகுள் 'அட்சென்ஸ்' பாவித்து யு டியூப் மற்றும் உங்களது வலைப்பதிவு மூலம் எவ்விதம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை மிகவும் எளிமையாக, தன் சொந்த அனுபவங்களைச் சான்றுகளாக வைத்து இக்காணொளி இளைஞர் விளங்கப்படுத்துகின்றார். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் சொந்தமாக , நியாயமான வருமானத்தை கூகுள் அட்சென்ஸ் மூலம் பெறலாம். ஏனைய  நாடுகளில் உள்ளவர்களும் கடுமையாக முயற்சி செய்தால் நியாயமான வருமானத்தைப்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள காணொளியைப்பார்க்கவும்.  முழுமையாகப் பார்க்கவும். பயன் பெறவும்.

இணையத்தில் வருமானம்

Sunday, December 30, 2018

தொடர் நாவல்: குடிவரவாளன் (15 -19) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!

நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாற்பத்திரண்டாவது வீத்யில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து 'பிராட்வே' சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியெம்ன்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்தததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுகுமிடையில் நடைபெற்ற உரையாடலும் பினவருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது:

அருள்ராசாவின் ஆவணப் பிரதிகளைப் பார்த்தபடியே குடிவரவுத் திணைக்கள அதிகாரி கிளாட் மன்சினி " உனக்கு என்னவிதத்தில் உதவ முடியும்?" என்று ஆரம்ப வினாவினைத் தொடுத்தான்.

அதற்கு அருள்ராசா " சமூகக் காப்புறுதி இலக்க அட்டை எடுப்பது பற்றியே விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.." என்றான்.

அதற்கு கிளாட் மன்சினி " உனது விடயம் சம்பந்தமாக எங்களிடமிருந்து உனக்குரிய பதில் வரும் வரையில் எதுவும் செய்வதற்கில்லை. அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்." என்று பதிலிறுத்தான். அதற்கு மேல் அவனுடன் கதைப்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்ராசா பதிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (27) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

1.


நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் காலம் ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று... இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாக அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று... இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். 'அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே' என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.

வவுனியா நண்பன் ஜெயரட்ணத்தின் உணவகத்திலும் சிறிது காலம் நண்பகற் பொழுதில் உணவு விநியோகிக்கும் பணியாளாகப் பணி புரிநது பார்த்து விட்டான். அதற்குப் பின் சிறிது காலம் வங்க நண்பன் கோஷின் தொழிற்சாலையிலும்  தொழிலாளியாக வேலை பார்த்தான். அதுவும் ஓரிரு மாதங்களே நீடித்தது. அதன் பின் வழக்கம்போல் மீண்டும் இருப்புடனான போராட்டம் தொடங்கி விட்டது. ஏற்கனவே முடிவு செய்திருந்ததன்படி மேலும் இந்த மண்ணில் தொடர்ந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாததாகவிருந்தது. எந்தவிதச் சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி , பொருளியல்ரீதியில் ஒருவித உறுதியான நிலையினை அடைந்து, ஆழமாக வேரூன்றுவதற்கு முடியாமலிருந்தது. இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நாளை மறுநாள் இந்த மண்ணில் காலடிவைத்துச் சரியாக ஒருவருடமாகிறது. அடுத்த வருடத்தின் முதல் நாளன்று அவனால் இந்த மண்ணில் ஒரு கணம்கூட இருக்க முடியாது. நாளை மறுநாளிரவு அவனது வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமாகவேண்டும். மீண்டும் முதலிலிருந்து, அடிமட்டத்திலிருந்து, நம்பிக்கைகளுடன், கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், உற்சாகத்துடன் அவனது இருதத்லுக்கான பயணம் தொடங்க வேண்டும். இதற்கு ஒரே வழி.. எந்த மண்ணை நோக்கிக் கடந்த ஆவணி மாதத்தில், ஈழதில் வெடித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து அவன் புறப்பட்டானோ, எந்த மண்ணை நோக்கிய அவனது பயணம் இடையில் இந்த மண்ணில் தடைபட்டதோ, அந்த மண்ணை நோக்கி, கனடாவை நோக்கி, அவனது பயணம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கையிலுள்ள இருநூறு டாலர்களுடன், அவன் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விதமாக இறுதித் தீர்மானமெடுத்தவுடன் அன்றிரவு அவன் தன் அறை நண்பர்களுக்குத் தன் எதிர்காலத்திட்டங்களை எடுத்துரைத்துப் பிரிவதற்கு முன்னர் அவர்களுடன் இறுதிப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். இவ்விதமாக உறுதியானதொரு முடிவினைத் தன் எதிர்காலம் பற்றியெடுத்ததும், அவனது நெஞ்சின் பாரம் சிறிதளவு குறைந்தது. அந்தவிடத்தை களியுடன் கூடியதொரு உற்சாகம் கலந்த உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அன்றிரவு அறை நண்பர்களுடன் ஆனந்தமாகக் கூடிக் கதைத்தான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (26) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.


அதற்கு ஜெயரட்ணம் "வேலையொன்றும் பெரிதாகக் கஷ்ட்டமான வேலையில்லை. மத்தியான நேரத்தில் பதினொரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலை எங்கட ரெஸ்ட்ராண்டிறிற்கு வருகிற ஓர்டர்களுக்குரிய சாப்பாட்டைக் கொண்டு சென்று குடுப்பதுதான். 'டெலிவரி' வேலை. சில் நேரத்திலை கிட்டடியிலையும் இருக்கும். சில நேரத்திலை ஹை ரைஸ் பில்டிங்கிலை ஐம்பது அறுபது புளோரென்று ஏறி இறங்கவேண்டியும் வரும். பெரிதாகச் சம்பளமெதுவும் தரமாட்டான்கள். மினிமத்திற்கும் குறைச்சுத்தான் தருவான்கள். ஆனா சாப்பாட்டை ஓரடர் பண்ணுறவங்கள் நல்லா டிபஸ் தருவாங்கள். அதெல்லாம் உனக்குத்தான். மற்றது..."

"மற்றது.. என்ன " என்றான் இளங்கோ.

அதற்கு ஜெயரடணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: "மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்."

தொடர் நாவல்: குடிவரவாளன் (25) -வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........

வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு.  இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.

 இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: "இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...