Friday, May 3, 2019

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் மற்றும் நடாத்தப்பட்ட ஆய்வுகள்..... - வ.ந.கிரிதரன் --

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

1. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட, நடத்துகின்ற இணைய சஞ்சிகைகளான திண்ணை, ஆறாந்திணை, அம்பலம், இசங்கமம், கூடல் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2. எழுத்தாளர் பென்னேஸ்வரனால் வெளியிடப்படும் 'வடக்கு வாசல்' சஞ்சிகை சார்பில் வெளியான 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை: இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன்
3. ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை: 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'
4. தமிழகத்திலிருந்து வெளியாகும் 'துளிர்' இதழுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் அறிவியல் கட்டுரை கேட்டிருந்தார்கள். அனுப்பியிருந்தேன். இதழில் வெளிவந்ததாகக் கூறியிருந்தார்கள். ஆனால், அந்த இதழ் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. எனவே என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
5. கணையாழியில் வெளியான எனது படைப்புகள்:
அ. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
ஆ. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
இ. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
ஈ. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
உ. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க் (கணையாழி மே 2012)

இன்று புதிதாய்ப் பிறந்தேன்.















இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
இருப்பினை
நம்பிக்கையுடனும், கனவுகளுடனும்,
வியப்புடனும், வினாக்களுடனும்
எதிர்கொள்ளும் உணர்வுகள் பொங்கிட
இன்று புதிதாய்ப் பிறந்தேன். இனி
என்றும் புதியாய்ப் பிறப்பேன்.
'இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து' வாழ்வேன்”
இனி என்றும் புதியாய்ப் பிறப்பேன்.

எழுத்தாளர் கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்றொன்றும் , அதற்கான எதிர்வினையொன்றும்...

எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :

" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ”  ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )

மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:

இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று  அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதைன் அம்சங்களைப்போல்  வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். ஆனால் கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை.

உங்களை நாம் மறக்க மாட்டோம்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள்  மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்று
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்கள் இருந்தீர்கள்.
நடக்கப்போவதை அறியாமல்
நீங்களிருந்ததைப்போல்
உங்கள் குழந்தைகளும் இருந்தார்கள்.
உங்கள் பிரார்த்தனைகளிலிர்ருந்த கனவுகளெத்தனையோ?
உங்கள் பிரார்த்தனைகள்
உங்கள் குடும்பத்தைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் உறவுகளைப்பற்றி இருந்திருக்கக் கூடும்.
உங்கள் பிறந்த மண்ணைப்பற்றியதாக இருந்திருக்கக் கூடும்.
இருந்தும்
உங்களைப்பற்றி, உங்களை இழந்தவர்தம் வலி பற்றி
ஊடகங்களேன் எழுதவில்லை?
ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட
மறைக்கப்பட்ட வலிதனை
உள்ளதுள்ளபடி எடுத்துரைப்போம்.
உங்கள் கனவுகளை
உங்கள் குழந்தைகள் பற்றி, அவர்தம்
உள்ளத்துக் கனவுகளை, உணர்வுகளை நாம்
உலகிற்கெடுத்துரைப்போம். உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.
உதிர்ந்தவர்களே! உங்களை நாம்
உள்ளவரை மறந்துவிட மாட்டோம்.

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!



இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலிலிருந்து....

மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது:

"அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்."

இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான 'நானா'வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் 'நானா' தொடராக வெளியான சமயம் எழுதிய 'எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா' என்னும் கட்டுரையும் முக்கியமானது.

எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். 'இயற்கை வாதம்' (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்."

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.


இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...