Friday, May 3, 2019

இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!



இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை,  நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ்  இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.

அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:

“  பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய  ஈழத்து  எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும்  தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்”
இக்கூற்றிலுள்ள "பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும்"  என்று பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறுவதொன்றே போதும் அ.ந.க.வின் திறனாய்வுப்புலமையினை எடுத்தியம்புதற்கு.

தினகரன் (இலங்கை) பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய கட்டுரைத்தொடரினை எழுதிய எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பினைக் குறிப்பிடுகையில் பினவ்ருமாறு குறிப்பிடுவார்:

"இலக்கிய விமர்சனத் துறையில் 'தேசிய இலக்கியம்' என்ற கருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்துடன் 'சிலப்பதிகாரம்', 'திருக்குறள்', 'எமிலிஸோலா' போன்ற பரபரப்பான கட்டுரைகள் எழுதினார். அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமை நோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரி வரை பெரும்பாலோரிடையே பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது. தகவல்பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார். வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சனங்கள் தினகரனில் தொடராக வெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது.  வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது. அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச் சாமியார் யார் என்பதை ஆராய்ந்து பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல தேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு 'பாரதி' பட்டம் கொடுத்த இலங்கையர் யார் என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகி கிளியோபறாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை 'ராதா' வார இதழில் வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போது பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார். மேல்நாட்டு எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்திகளையும், திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்று அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார்.  எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர் பயன் அடைய வேண்டும் என்று விரும்பும் அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தத்துவ நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இஃது எல்லா வகையிலும் சிறந்து வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும்."

'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் அரியதோர் ஆய்வு நூலை முனைவர்களான சி. மௌனகுருன் மௌ. சித்திரலேகான் & எம். ஏ. நுஃமான் ஆகியோர் எழுதியுள்ளனர். அதில் 'விமர்சனம்' என்னும் பகுதியில் அ.ந.க.வின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடுகையில்,

"இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 60 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திரிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமொிக்க இலக்கியத்துக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையே அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ.ந.கந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.

'ஒரு மொழிக்கு ஒரு இலக்கியம் என்பது மொழிகள் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமொிக்க இலக்கியத்தையோ ஆஸ்திரேலிய இலக்கியத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது. தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சர்வதேசியத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கியத்துக்கு தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்விதப் பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலையும் தாண்டி சர்வ தேசங்களையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்.'

இக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத்துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங்களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக்ஞை பூர்வமான இலக்கிய சித்தாந்த வெளிப்பாடாகவே இத்தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது. தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட்டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள்ளடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும். ஆனால் அதற்குள்ளே வர்க்க முரண்பாடுகள் உள்ளன. வர்க்க முரண்பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும்போது, தேசிய இலக்கியத்தின் அடியாக பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதமாகும். பரந்துபட்ட வெகுஜனங்களின் நலனையும், அவர்களின் பிரச்சினைகளையும், அவர்களது விமோசனத்துக்கான வேட்கையையும் இலக்கியத்திற் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். காலத்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உரிய பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற்போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்ஸீய சித்தாந்தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது. ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணியில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்ஸீய அணுகுமுறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ.ந. கந்தசாமி, கே.கணேஷ் இளங்கீரன், ஏ.ஜே. கனகரத்தினா, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முகையதீன் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர்."

இவையெல்லாம் அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கான விமர்சனப்பங்களிப்பினை எடுத்தியம்புவன. அ.ந.க.வின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் சிதறுண்டு கிடக்கின்றன. தினகரனில் வெளியான 'நான் விரும்பும் நாவலாசிரியர்' தொடரில் எழுத்தாளர் எமிலி சோலா பற்றி எழுதிய கட்டுரை, தினகரனில் தொடராக வெளிவந்த  மேனாட்டு நாடக ஆசிரியர்களைப்பற்றிய விமர்சனங்கள் (இவை அ.ந.க.வின் வானொலி விமர்சனங்கள். பின்னர் இவை தினகரனில் தொடராக வெளிவந்ததாக எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் குறிப்பிட்டுள்ளர்.)  வானொலியில் இப்ஸனின் 'பொம்மை வீடு' நாடகம் பற்றி ஆற்றிய விமர்சன உரை ('வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது.' என எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் கூறியிருக்கின்றார்).

'வசந்தம்' நவம்பர் 1965 இதழில் வெளியான அ.ந.க.வின் 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்!' அ.ந.க.வின் முக்கியமான விமர்சனக் கட்டுரைகளிலொன்று. இது பின்னர் 'தேசாபிமானி' (ஜூலை 1970)  'பதிவுகள்' இணைய இதழ் (மார்ச் 2004; இதழ் 51) ஆகியவற்றிலும் மீள்பிரசுமாகியுள்ளது. இளங்கீரன் தொகுத்து வெளியான 'தேசிய இலக்கியமும், மரபுப் போராட்டமும்' கட்டுரைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள அ.ந.க.வின் 'தேசிய இலக்கியம்' (மரகதம்& 'ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு  குழிதோண்டும் முயற்சி' (தினகரன் 2.1.1962) ஆகிய கட்டுரைகளும் முக்கியத்துப் பெற்றவை.

அ.ந.க தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான அவரது மனக்கண் நாவல் முடிவுக்கு வந்தபோது எழுதிய முடிவுரை நாவல்கள் பற்றி வெளியான சிறப்பான விமர்சனக் கட்டுரைகளிலொன்று. (அதனைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1433:2013-04-03-04-11-21&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47)  உதாரணத்துக்காக அக்கட்டுரையிலிருந்து அதன்  முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகக் கீழுள்ள பகுதியினைத்தருகின்றேன்:

"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)  பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது." ('மனக்கண்' நாவலுக்கான தனது முடிவுரையில் அ.ந.க)

இவை தவிர 'தேசாபிமானி' பத்திரிகையில் எழுதிய 'நான் ஏன் எழுதுகின்றேன்?' போன்ற கட்டுரைகள், 'நாடகத்தமிழ்' (தமிழோசை), 'ஈழத்துத தமிழ்க் கவிதை' பற்றிய கட்டுரைகள், மரகதம் , பாரதி போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், திரைப்படங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள், 'சுதந்திரன்' பத்திரிகையில் அவரது மொழிபெயர்ப்பில் 'நானா' தொடர் நாவலாக வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவர் எழுதிய 'எமிலி சோலா' பற்றிய கட்டுரைகள், 'பண்டிதர் திருமலைராயர்' என்னும் பெயரில் 'சிலப்பதிகாரம்' பற்றிய் எழுதிய கட்டுரைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 'ஆத்ம ஜோதி' நாடகம் பற்றி எழுதிய விமர்சனக்கட்டுரை, திருக்குறள் பற்றி, அர்த்தசாத்திரம் பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. இவ்விதமாக அ.ந.க அவர்கள் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது; விதந்தோடப்படுவது; காலந்தோறும் நினைவு கூரப்படுவட்து.

இந்நிலையில் 'நூலகம்' தளத்திலிருந்து எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்களின் நூலான  "திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்" என்னும் நூலிலிருந்து "தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கு" என்னும் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்ப கிட்டியது.  தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கினை ஆராயும் கட்டுரையின் இறுதிப்பகுதி இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனப்போக்கு பற்றி விரிவாகவே ஆராய்கிறது., இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துள்ளார் மு.பொ இக்கட்டுரையில். அதிலோரிடத்தில் தினகரனில் வெளியான 'நான் விரும்பும் நாவலாசிரியர்'என்னும் தொடரில் எழுதிய காவலூர் ராசதுரை, இளங்கீரன், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரை மறக்காமல் குறிப்பிடும் மு.பொ அத்தொடரில் எமிலி சோலா பற்றி எழுதிய அ.ந.கந்தசாமியின் கட்டுரையினைக்குறிப்பிடாது இருட்டடிப்பு செய்துள்ளார். இக்கட்டுரையைப்பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா "தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது. " என்று கூறியதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அத்தகையதொரு கட்டுரை மு.பொ.வின் கண்களுக்குத் தட்டுப்படாதது  ஆச்சரியமானது.

மேற்படி கட்டுரையில் 'மார்க்சியக் கருத்தியல் நோக்கினால் ஆற்றுப்படுத்தப்பட்டு  நவின தமிழ்  இலக்கிய விமர்சனத்துறைக்குள் புகுந்தவர்களாக க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, முருகையன், வானமாலை ஆகியோர் நிற்கின்றனர். இவர்கள் வழியில் ஆற்றுப்படுத்தப்பட்டவர்களாக இவர்களின் இளந்தலைமுறையினரானகே.எஸ்.சிவகுமாரன், எம்.ஏ.நுஃமான், மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, சிவசேகரம், யோகராசா ஆகியோர் நிற்கின்றனர்."  என்று குறிப்பிடும் மு.பொ. அங்கும் அ.ந.கவை இருட்டடிப்பு செய்துள்ளார். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மார்க்சியப்பார்வையினைப்புகுத்தியவராக அ.ந.க.வையே விமர்சகர்கள் குறிப்பிடுவர். ஆனால் அதனைக்கூட ஏற்க மனமில்லாதவராக மு.பொ. இருப்பதையே அவரது இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. முழுமதியை மேங்களால் நிரந்தரமாக மறைத்துவிடமுடியாது.  இலக்கிய வானில் அ.ந.க.வும் அத்தகைய முழுமதியைப்போன்றவர்.

உசாத்துணைச் சான்றுகள்:

1. அந்தனி ஜீவா 'சாகாத  இலக்கியத்தின் சரித்திர நாயகன்' (தினகரன்)
2.  தேசாபிமானி, சுதந்திரன் மற்றும் பாரதி ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள்.
3. பேராசிரியர் கைலாசபதி 'ஒப்பியல் இலக்கிய'
4. 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' எழுதியவர்கள்: முனைவர்களான சி. மௌனகுருன் மௌ. சித்திரலேகான் & எம். ஏ. நுஃமான்
5. கட்டுரை: 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்" (வசந்தம், நவம்பர் 1995)
6. 'திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்' - மு.பொன்னம்பலம்.

ngiri2704@rogers.com

No comments:

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24. எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்...

பிரபலமான பதிவுகள்