Saturday, May 18, 2019

ஆவணப்பதிவு- எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்

நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( 'டொரோண்டோ', கனடா)


எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த  வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:
1. விடிவெள்ளி (தாயகம்- கனடா)
2. இயற்கைத்தாயே (தாயகம்- கனடா)
3. தாய்மகால்
4. சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம். (தாயகம்- கனடா)
5. எங்கு போனார் என்னவர்?
6. விழி! எழு! உடைத்தெறி! (தாயகம்- கனடா)
7. நியதியை உணர்ந்தவர்கள்.
8. எழுக அதிமானுடா! (தாயகம்- கனடா)
9. தை பிறக்க
10. விளங்கிச்செல்வோம்
11.பாரதி என் தலைவன்.
12. மும்மூர்த்திகள் (வீரகேசரி 1980)
13. எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...(தாயகம்- கனடா)
14. தமிழா!
15. எதிர்பார்ப்பு (தினகரன் 1980)
16. ஆசை (தாயகம்- கனடா)
17. எழுக மானிடா!
18. ஐன்ஸ்டைன்
19. என்ன நியாயம்?
20. அழிவு (நுட்பம் 1980)
21. அ.ந.கந்தசாமி
22. மார்க்ஸ்
23. மேப்பின் மண்ணின் மைந்தர்களே 1
24. மேப்பின் மண்ணின் மைந்தர்களே 2
25. மேப்பின் மண்ணின் மைந்தர்களே 3
26. துருவத்தை நோக்கி (வீரகேசரி 1980)
27. காடு (வீரகேசரி 1980)
28. பெண்கள் (வீரகேசரி 1980)
29. இழந்து போன பொழுதுகள்
30. பிறப்பின் பயன் (குரல்)


இத்தொகுப்பின் சமர்ப்பணம் வருமாறு:

அடக்கு ஒடுக்குமுறைகளிற்கிடையில் அகப்பட்டு , உலகின் நானா பக்கங்களிலுமே பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு, புத்துலகைப்படைப்பதற்காய் புரட்சித்தீயிலே புகுந்துவிட்ட விடுதலைச்சக்திகளுக்கு

இத்தொகுப்புக்கான எனது முன்னுரை ' என்னுரை' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அது வருமாறு:

இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தவை. சில 87- 88 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட 'குரல்' கையெழுத்துப் பிரதியில் வெளிவந்தவை. வேறு சில வீரகேசரி, தினகரன், நுட்பம் (மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடு) போன்றவற்றில் வந்த எனது ஆரம்பகாலக் கவிதைத்துளிகள். இன்னும் சில இதுவரையில் எவற்றிலும் வெலிவராதவை.  சில பாடல்களுடன் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  இவை வாசகர்களுக்குப் பயனுள்ளவையாகவிருக்குமென்பது என் எண்ணம். இது கனடாவில் வெளிவரும் எனது இரண்டாவது தொகுப்பு. முதலாவது தொகுப்பு 'மண்ணின் குரல்' 1987இல் வெளிவந்தது.

'மண்ணின் குரல்' விடுதலைப்போர் பேரார்வத்துடன் கிளர்ந்தெழுந்த காலகட்டத்தில் வெளிவந்ததால் ஒரு விதத்தில் அதிக அரசியல் பிரச்சாரவாடை அதிலிருந்தது. இத்தொகுப்பிலும் அரசியல் விடுபடவில்லை.  அதே சமயம் சமகால அரசியலோடு அகதிகள் வாழ்வின் அவலத்தோடு, தொலைநோக்குடன் மனித விடுதலையும் அணுகப்பட்டிருப்பதை இத்தொகுப்பு உங்களுக்குப் புலப்படுத்தும்.

நாங்கள் பிரம்மாண்டமான விரியும் இந்தப்பிரபஞ்சத்தின் சிறியதோர் கோளின்,  சிறியதொரு தீவின் மக்கள் கூட்டத்தில் சிறுபான்மையினர். எங்களுக்கு எம் மக்கள் (தமிழர்கள்) விடுதலையும் வேண்டும். எம் நாட்டு மக்களின் விடுதலையும் வேண்டும் (தமிழ், சிங்கள் , முஸ்லீம் மக்கள்). இவ்வுலக மக்கள் விடுதலையும் வேண்டும். இந்த விடயத்தில் நான் பாரதி பக்தன். அகப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி புறப்பிரச்சினையை புறக்கணிப்பதோ, அல்லது புறப்பிரச்சினையை முதன்மைப்படுத்தி அகப்பிரச்சினையை புறக்கணிப்பதோ எனக்கு உடன்பாடானதல்ல. இரு பிரச்சினைகளையும் விளங்கிக்கொண்டு அதே சமயம் புறவிடுதலையே அகவிடுதலையின் முதற்படி என்பது என் நம்பிக்கை. இதனால்தான் எம் மண்ணிலும் சிங்கள் மக்களின் விடுதலைக்கு ஆதரவு தரும் அதே சமயம் தமிழ் மக்களின் விடுதலையே அதற்கும் முதற்படி என்பது என் நம்பிக்கை.

இதனை மனதில் வைத்துக்கொண்டு இத்தொகுப்பைப்பார்ப்பவர்கள் மனித விடுதலையை, எம்மக்களின் விடுதலையைப்பற்றிக்கூறுவதில் தென்படும் முரண்பாடுகள் உண்மையில் முரண்பாடுகளல்ல என்பதைப்புரிந்துகொள்வார்கள். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி கூறியதுபோல் , 'எழுத்தாளன் என்பவன் வாழ்க்கையை விமர்சிப்பதோடு வாசகனுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அவனது எழுத்து நொந்த உள்ளத்தின் செயல் துணிவு கொண்ட வேகக் குரலாக ஒலிக்க வேண்டும்' என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை; உடன்பாடு.

இக்கவிதைகளில் நீங்கள் நிச்சயம் அத்தகைய நம்பிக்கையைக் காணலாம். அதனால்தான் தமிழ் மக்களின் ஒற்றுமையோ, தமிழ் மக்களின் விடுதலையோ, அதி மானுடன் என்ற கருத்தியலோ எல்லாவற்றிலுமே எனக்குப் பூரண நம்பிக்கை. அவை சாத்தியமே. இதனைத்தான் நீங்கள் எனது எழுத்தில் பெரிதும் காணலாம்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதைகளாக விடிவெள்ளி (தாயகம்- கனடா),  இயற்கைத்தாயே (தாயகம்- கனடா), சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம். (தாயகம்- கனடா),  எங்கு போனார் என்னவர்?, . விழி! எழு! உடைத்தெறி! (தாயகம்- கனடா), எழுக அதிமானுடா! (தாயகம்- கனடா), எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...(தாயகம்- கனடா), ஆசை (தாயகம்- கனடா), மற்றும் என்ன நியாயம்? ஆகியவற்றைக்கூறுவேன். நூலிலுள்ள 18 கவிதைகளைக்கீழே தந்திருக்கின்றேன் உங்களது சுவைத்தலுக்காக,

1. இயற்கைத்தாயே!

போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே! உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.

விதியென்று வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு விதியறியும் மனத்திடத்தை
மலர்த்திவிடு.

கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.

தாயே! இயற்கத்தாயே! உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...


2. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்அடியேனின் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும்
நள்ளிரவில் சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.



3.  எழுக அதிமானுடா!

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட்' சுவர்கள்!
கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில்
மயங்கிக் கிடக்கும்
இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.

இடையில் சுழன்று வீசும் வாயுத்தேவன்.
செயற்கையின் தாக்கங்கள் செறிந்திட்ட
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகள்,
கனவுகளில், நீலப்படுதாவின் கீழ்
நிலமடந்தை குளிர்ந்து கிடப்பாள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியரின்
இளநகைகள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
இலங்கிட்ட  வட்டங்களில்
மயங்கிக் கிடந்த வாழ்க்கைச்
சக்கரங்கள்.

இனிய
அதிகாலைப் பொழுதுகள் அவை.
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

விஞ்ஞானத்தின் இறுமாப்பில்
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக்கிடக்கும் மானுடத்தின்
நெஞ்சினிலோ.......

ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்! போர்! போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!

எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?



4.  விடிவெள்ளி

அதிகாலை மெல்லிருட்போதுகளில்
அடிவானில் நீ மெளனித்துக்கிடப்பாய்.
படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு
ஊடுருவுமுந்தன் நலிந்த ஒளிக்கீற்றில்
ஆதரவற்றதொரு சுடராய் நீ
ஆழ்ந்திருப்பாய்.
விடிவு நாடிப்போர் தொடுக்கும்
என் நாட்டைப்போல்.
விடிவின் சின்னமென்று கவி
வடிப்போர் மயங்கிக்கிடப்பர்.
ஆயின்
சிறுபொழுதில் மங்கலிற்காய்
வாடிநிற்கும் உந்தன் சோகம்
புரிகின்றது.
அதிகாலைப்பொழுதுகளில்
சோகித்த உந்தன் பார்வை
படுகையிலே,
என் நெஞ்சினிலே
கொடுமிருட்காட்டில் தத்தளிக்கும்
என் நாட்டின் , என் மக்களின்
பனித்த பார்வைகளில் படர்ந்திருக்கும்
வேதனைதான் புரிகின்றது.
என்றிவர்கள் சோகங்கள் தீர்ந்திடுமோ?
என்றிவர்கள் வாழ்வினில் விடிவு
பூத்திடுமோ?
விடிவினை வழிமொழியும்
சுடர்ப்பெண்ணே! வழிமொழிந்திடுவாய்.



5. எங்கு போனார் என்னவர்? (அட்டைப்படக்கவிதை)
அன்றொரு நாள் பின்னிரவில்
ஆயுதம்தனை ஏந்திப் போனவர்
என்னவர்தான். போனவர் போனவரே.
போராடிச் சாவதுவே மேலென்று
போனவரை
யாரேனும் பார்த்தீரோ?
பகைவன் தன் போர்க்களத்தே
போனாரோ? அன்றி
'பூசா'வில்தான் புதைந்தாரொ?
உட்பகையால் உதிர்ந்தாரோ?
உடல்படுத்தே மடிந்தாரோ?
போனவரை யாரேனும் பார்த்துவிட்டால்
சொல்வீரா?
அன்னவரை எண்ணியெண்ணி
அகமுடையாள் இருப்பதாக்.
மன்னவரின் நினைவாக
மங்கையிவள் வாழ்வதாக.

6. விழி! எழு! உடைத்தெறி!

தளைகள்! தளைகள்! தளைகள்!
எங்குமே, நானாபக்கமுமே,
சுற்றிப்படர்ந்திருக்கும்
தளைகள்! தளைகள்! தளைகள்!

சுயமாகப் பேசிட, சிந்தித்திட
உன்னையவை விடுவதில்லை.
நெஞ்சு நிமிர்த்தி நடந்திட
அவை சிறிதும் நெகிழ்ந்து
கொடுப்பதில்லை.

உள்ளும் , புறமும் நீ
உருவாக்கிய தளைகள்.
இன்றுனை இறுக்கி, நெருக்கி,
உறிஞ்சிக்கிடக்கையிலே
விழி! எழு!
உடைத்தெறி. உன் கால்களை,
உன் கைகளை, உன் நெஞ்சினைப்
பிணைத்து நிற்கும் தளைகளை,
விலங்குகளை
உடைத்துத்தள்ளு! வேரறுத்துக்
கொல்லு!


7.  நியதியை உணர்ந்தவர்கள்.

அன்று செந்நீரில் சிவந்திருந்தது
எம் கிராமத்தின் செம்மண் தரை.
கண்ணீர்க்கதையெழுதிக்
கவசங்களுருண்டோடக்
கனவுகளை நெஞ்சிலேற்றிக்
கிளர்ந்தெழுத்தோம்.
ஏ காலமே! என்னதான் நடந்தது?
எல்லாமே கனவாக...
கானலாக....
காலத்தின் சுழற்சியிலே
அடித்திடுங்காற்றினிலே
ஞாலத்தில் நிலைமாறல்
நியதியன்றோ.
உணர்ந்ததினால்
சோகத்தினால் நாம்'
உதிரவில்லை.



8. தை பிறக்க...

மூவேந்தர் முன்னாண்டார். முடி கண்டார்.
படை வென்றார்.
நாவெந்தர் நாம் நாவளந்தோம்.
நடந்ததுவோ முடிந்த கதை.
தொடர்ந்ததுவோ சோக வதை.
இருந்தும்
நம்பிக்கை நான் இன்னும்
இழக்கவில்லை.
ஒன்றுபட்டு, படைசமைத்து
வென்றுவிடும் வாழ்வொன்று
அன்றுதானில்லை. ஆயின்'
இன்று வருமெனுங்கனவில்
தையல் நானிருக்கின்றேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்ற பெரும் துணிவினிலே
கோ '
தை யானிருக்கின்றேன். ஒரு
பா

தை தான் காண்கின்றேன்.


9.  விளங்கிச்செல்வோம்.

பாட்டாலே நாட்டினிலே புதுமை செய்ய
முடியுமென்றால்,
பாட்டெழுதும் பைத்தியமே எனப்
பரிகசிப்பார். பல சொல்வார்.
எழுத்தாலே ஏற்றம்தனை
ஏற்றிட முடியுமென்றால்,
'கிழித்தாய் போ'வென்றே
கிண்டல்கள் பண்ணி நிற்பார்.
சொல்லின் வலியறியா மூடரிவர்
சொல்வதெல்லாம், செய்வதெல்லாம்
செல்லரித்த அமைப்புதனைச்
செகத்தினிலே
தக்க வைத்துவிடும் தந்திரமே,
விளங்கிச்செல்வோம்.


10.  எங்கோ இருக்கும் கிரகவாசிக்கு...
முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்



11. ஐன்ஸ்டைன்

பிரபஞ்சப்பெருவெளியின்
போக்குதனைப்புரிய வைத்த
பெரு மேதை.
'காலவெளி'ச்சார்பு எனுங்
கருத்துதனை
விளக்கி வைத்த விஞ்ஞானி.
நிலைத்து நின்ற நியதிகளை
நிலை தடுமாறிட வைத்த
நீ
அறிவியல் உலகினிலே
மாபெரும் புரட்சிவாதி.



12.  என்ன நியாயம்?

எம் மண்ணின் முதுகெலும்பாக முதுகொடிந்திட்ட
லெட்சுமணனும், லட்சுமியும்
நாட்டை இழக்க அன்று
நாங்கள் துணை போனோம்.
இன்று
கூடப் பிறந்து, தவழ்ந்து, புரண்டு, வளர்ந்த
'காக்கா'க்களை, 'பசீர்'களை
மண்ணை விட்டே விரட்டியோட்டினோம்.
அது மட்டுமா,
கருத்தில் வேற்றுமை கொண்டவர்களை
வேற்றுலகம் அனுப்பி வைத்தோம்.
இழந்த உரிமைகளைப்பெறுவதற்காய்ப்
போர் தொடுப்பவர்கள் நாங்கள்.
மற்றவர் உரிமைகளை மதித்திட
நம்மாலேன்
முடியவில்லை.


13.  மார்க்ஸ்

சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்.
ஏழ்மை இவன் எண்ணங்களைச்
சிதைத்திட என்றுமே இவன்
அனுமதித்ததில்லை.
முயற்சி , ஊக்கத்தை மூலதனமாக்கி
மூலதனம் படைத்தவன்.
நேற்றைய மாற்றங்களை எதிர்வு கூறிய
இவன் ஏன்
இன்றைய மாற்றங்களைக்கூட
எச்சரிககை செய்தவன் தான்.
உண்மைகளை மண்ணுலகின்
நீண்ட பாதையிலே
மக்கள் மீண்டுமொருமுறை
அறிந்து கொள்வர்.


14. பாரதி என் தலைவன்.

'பாட்டுகொரு பாரதி'யென
நாட்டினிலே
காட்டிவிட்ட பாரதியே! மா
கவியே! என் குருவே! வணக்கம்.
பொய்மையினால் பூட்டிக்கிடந்த
உலகினை நீ - கவிச்
சாட்டை கொண்டே சாடினாய்.
தலைவா! உனக்கு வணக்கம்.
அடிமையிருளில் குடியிருந்த நாடுதனில்
விடிவிற்காய் நீ
துடித்தெழுந்தாய். கவி
வடித்துயிர்த்தாய்.
தலைவா! உன் தாள் பணிகின்றேன்.
வறுமைத்தீயினில்
பொறுமை போதித்த
சிறுமை கண்டு சினந்தாய். சொல்லில்
பெருமை தந்தாய்.
தலைவா! நீ வாழி. உன் புகழ் வாழ்க.
பெண்ணினத்தைப்பழித்துவிட்ட
மண்ணினிலே விடுதலைக்காய்
விண்ணதிர முழங்கினாய்.
வீரத்தலைவா! உனக்கென் வணக்கங்கள்.
நீ வாழ்க. உன் புகழ் வாழ்க.


15. மேப்பிள் மண்ணின் மைந்தர்களே 1

'எம் குடிகெடுக்க வந்த சட்டவிரோதக்
குடிகள். உடனிருந்து உறுஞ்ச வந்த
புல்லுருவிகள்' என் நீங்கள்
எம்மை வர்ணிக்கின்றீர்கள்.
மேப்பிள் இலையென்றால் மேனி சிலிர்க்கும்
இம் மண்ணின் மைந்தர்களே!
நீங்கள் கூட நேற்றைய இம்மண்ணின் புதல்வர்களை
நிர்மூலமாக்கிவிட்டு வந்த
இன்றைய இம்மண்ணின் புதல்வர்கள்தாம்.
பொருள்நாடிப் புத்துலகம் கண்டவர்கள் நீங்கள்.
நாங்களோ...
பொருளிழந்து, உருண்டு, புரண்ட மண்ணிழந்து,
மண்ணிலெம் சொந்தம், பந்தமிழந்து
கனவுகளைத்தாங்கி
கடல் கடந்தவர்கள்.
பொருளுக்காய் நீங்கள் உங்கள் மண்ணிழந்தீர்கள்.
அதனால்தானோ என்னவோ
உங்களால்
எங்களைப் புரிய முடியவில்லை.
அன்னியரென்பதால் அகதிகள் அகங்களை
இழந்தவர்களென்பது பொருளல்ல.
அவர்களுக்கும் அகங்களுண்டு.
மேப்பிள் மண்ணின் புதல்வர்களே!  புரிந்து
கொள்ளுங்கள். முடியாவிட்டால்
புரிந்துகொண்டிட முயலுங்கள்.


16.   மேப்பிள் மண்ணின் மைந்தர்களே 2

எங்கள் இரத்தத்திற்கு நீங்கள் நிறமுலாம்
பூசுவதில்லை. பாவிக்க நீங்கள் தயங்குவதில்லை.
ஆனால்
எங்கள் தோல்களில் மட்டும் நீங்கள்
நிறத்தைத்தேடுகின்றீர்கள்.
மேப்பிள் மண்ணின் மைந்தர்களே! உங்களை
எனக்குப் புரியவில்லை.
Blue Jays பேஸ் போலொன்றேல்
உங்களுக்கு உயிர்.
ஆடுபவர் நிறமென்ன, நாடென்ன
என்றெல்லாம் நீங்கள் பார்ப்பதில்லை.
எல்லோருமே உங்களுக்குக் 'கனேடியர்'.
அரங்கிற்கு வெளியிலோ...
மேப்பிள் மண்ணின் மைந்தர்களே!
உங்களை எனக்குப் புரியவில்லை.

17. மேப்பிள் மண்ணின் மைந்தர்களே 3

பனிமழை பொழிந்து, பாதையெல்லாம் ஒரே
சறுக்கல். குளிரோ உடலைக்குற்றியபடி ஒரே
குதியாட்டம்.
'ரொறான்ரோ' மாநகரின்
அழகானதோர் அவென்யு
யூனிவர்சிட்டி அவென்யு.
அகன்ற சாலை, அதன் நடுவே
அழகான் சிலைகள், நீரூற்றுகள்,  மரங்கள்..
இருபுறமும் உயர்ந்து இலங்கும்
கட்டடப்பரப்புகள்.
சிலையொன்றின் அடிப்புறத்தே...
ஆதிமனிதர்கள் சிலரை நீங்கள்
காணலாம்.
ஆண், பெண் பேதமின்றி
ஒருவரையொருவர் ஒன்றாக
அணைத்தபடி
கந்தலுடன் தழுவலின் கணச்சூட்டில்
தம்மை மெய்ம்மறந்தபடி..
யாரிவர்கள்?
நகரில் திரியும் நாடோடிகளா?
இவர்களுக்கு வீடு, வாசல், குடும்பம், குழந்தை
என்று எதுவுமேயில்லையா?
யாரிவர்கள்?
இவர்கள் நாடிழந்தவர்கள்.
இருந்த மண்ணிழந்தவர்கள்.
இவர்களுக்கென்றொரு கலை,
இவர்களுக்கென்றோரு கலாச்சாரம்,
இவர்களுக்கென்றொரு பண்பாடு,
இவர்களுக்கென்றோரு நாகரிகம்,
எல்லாமேயிருந்தன ஒரு காலத்தில்.
அன்று கொடிகட்டிப்பறந்தவர்கள்
இன்று இடிபட்டுச்சிறுப்பவர்கள்.
இவர்கள்தாம்
இந்நாட்டின், இம்மண்ணின்
உண்மையான மைந்தர்கள்.
இவர்களது உணர்வுகள் மதிக்கப்படாவிட்டால்,
இவர்களது உரிமைகள் கொடுக்கப்படாவிட்டால்,
இன்று இழந்தவர்கள்! நாளை
எழுந்தவர்கள்.


18. காடு!

ஒன்றுபட்டாலுண்டு வாழ்வென்ற
தத்துவத்தை
ஒழுகிவாழ்ந்திடும் ஓங்கிய விருட்சங்களின்
ஒன்றிய சமூகம்.
இயற்கையன்னை
மிருகபட்சிக்குழந்தைகளை
ஈன்றெடுத்திட்ட மடி.


ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்