Sunday, May 5, 2019

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!

ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

 'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று....' (ஈழகேசரி)


இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.

'....அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'


மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்தவர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது.] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:

'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'

இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப்
புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.

இவரது இன்னுமொரு கவிதையான 'வில்லூன்றி மயானம்' சமுதாயத்தில் நிலவிய சாதிக் கொடுமையினை, அதன் கட்டுப்பாடுகளை வன்மையாகச் சாடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகர சபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வைச் சாடும் கவிதையிது. இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் ஏனைய கவிஞர்களெல்லாரும் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் , அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகத் துணிச்சலுடன் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித் தீயாக அதனை இனங்கண்டார்:

'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது...'


மனிதர்கள் ஏழை, பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தல் தகாது. ஒருவரிற்கொருவர் அன்புடன் வாழ்தல் வேண்டும். அருவருப்பினையொதுக்கிச் சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்பதை இவரது 'துறவியும், குஷ்ட்டரோகியும்' என்னும் கவிதை கூறுகிறது. தானமெடுப்பதற்காகச் செல்லும் துறவியொருவருக்குத் தானமிடுவதற்காகச் செல்வர்கள் பலர் காத்து நிற்கின்றார்கள். அவரோ குஷ்ட்டரோகத்தால் வ்ருந்துமோர் ஏழை தரும் உணவை அன்புடன் வாங்கி உண்ணுகிறார். அவ்விதம் உண்ணுகையில் அப்பாத்திரத்தினுள் நோயினால் அழுகி வீழ்ந்திருந்த அந்த ஏழையினது விரலொன்றினைக் க்ண்டும் அருவருப்படையாது, முகம் சுளிக்காது , அதையொதுக்கி வைத்துவிட்டு உணவையுண்ணுகின்றார். இதனை மேற்படி 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்த 'துறவியும், குஷ்ட்டரோகியும்' கவிதை விபரிக்கும்:

'உணவையிடும் போதந்தக் குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழ்ந்தந்தப்
பீடைதனைக் கண்டனன் கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.

புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவொரு நண்பன் இந்த முனியில் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதிய·து போயொளியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.. ' (சுதந்திரன்)


'கவீந்திரன்' என்னும்பெயரிலும் அ.ந.க கவிதைகள் எழுதியுள்ளார். 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது. [மேலும் பல புனைபெயர்களில் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். இது பற்றியும் விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டும்.] 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.

'பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!

தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '

இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.
அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை அ.ந.க.வின் மிக முக்கியமான கவிதைளிலொன்று. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட் கவிதை.
'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­அவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'

என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,

"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.


அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:

'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'


மேற்படி கவிதையினை நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றது.
அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார். அ.ந.க.வின் கவியரங்கப் பங்களிப்பைக் குறிப்பிடும் அந்தனி ஜீவா த்னது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில் '1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய ''பாவோதல்'' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ''கடவுள் என் சோர நாயகன்'' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலைமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க' என்று குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது.  இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும்
அ.ந.க

'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.
இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.


அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'

'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:

'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'


இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்

'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'


என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார். இச்சமயத்தில் அ.ந.க.வின் இலக்கியம் பற்றிய கருத்துகளை நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. அவரது எழுத்தின் நோக்கம் பற்றிய அவரது உள்நோக்கத்தினை எடுத்தியம்பும் வரிகளிவை. அவரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவக் கூடிய வரிகளிவை.:

'மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில்> ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை.... உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.'

இவ்விதமாக எழுத்து பற்றிய கருத்துள்ள அ.ந.க வள்ளுவரையும் அவ்விதமான, மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்

'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்'
என்கின்றார்.

அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி

'ஒப்பரிய காந்தியரி னொப்பில்லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்'
எனவும்
'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்'


எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.

இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார். முற்போக்குக் கவிஞரொருவர் இவ்விதமாகவெல்லாம் பாடலாமா என்ற்ம் சிலர் கேட்பர். அதற்கு அ.ந.க. முன்பு குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையினை மீண்டும் ஒருமுறை அசைபோடுதல் தகுமே. அதிலவர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பார்:

'எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.
பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். 'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன். ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.'

ஈழத்து மரபுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்களிலொருவர் வித்துவான் க.வேந்தனார். இவரது கவிதைகளின் சிறப்பம்சங்களிலொன்று அவரது கவிதைகளில் காணப்படுகின்ற முற்போக்குக் கருத்துகள். ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இவரது 'காலைத் தூக்கிக் கண்ணில் வைத்து கட்டிக் கொள்ளும் அம்மா' என்னும் குழந்தைப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. க.வேந்தனாரின் இன்னுமொரு கவிதை 'கவிஞன்' அதிலவர் பின்வருமாறு கூறுவார்:

'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்!'


இவ்விதமாகக் வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள கோளரியாக வாழ்ந்த கவிஞன்தான் அ.ந.கந்தசாமி. ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் முக்கியமான கவிஞரான அ.ந.கவின் தமிழ்க் கவிதைக்கான பங்களிப்பை மறைத்துவிட முனைவோர் முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் மறைக்க முயலும் அறிவிலிகளே! ஆய்வாளர்களல்லர்.



No comments:

மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!

கவிஞர் கந்தவனத்தின் மணி விழாவினையொட்டி மணிவிழாக்குழுவினால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு 'மணிக்கவிகள்' நூலுக்கான பதிப்புரையில் மணிக...

பிரபலமான பதிவுகள்