Saturday, May 4, 2019

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை )

எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்து அதனைத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) நேற்று என்னை வந்தடைந்தது. உடனடியாகவே இரு பிரதிகளை அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனிடம் சேர்ப்பித்து விட்டேன்.

தொகுப்பு சிறப்பாக வந்துள்ளதற்காக லதா ராமகிருஷ்ணன் பெருமைப்படலாம். தனியொருவராக அவர் மிகவும் அநாயாசமாக இதனைச் சாதித்திருக்கின்றார். அவரது கடும் உழைப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

இத்தொகுப்பு சிறப்பாக வந்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்: பொதுவாக இலக்கிய ஆளுமைகள் தம் விருப்பு, வெறுப்புகளுக்கேற்பச் சிலரின் கவிதைகளையே தேர்ந்தெடுத்து அக்கவிஞர்களின் கவிதைகளையே மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிடுவார்கள். ஆனால் அவ்விதமில்லாது கவிதைகளை லதா ராமகிருஷ்ணன் தன் வாசிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்.

 எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி, யாருடைய வற்புறுத்தல்களுமற்று, முகநூலில் தன் நண்பர்கள் பலர் எழுதிய கவிதைகளை ஒரு வாசகராக வாசித்து, அவை அவரில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவற்றை மொழிபெயர்த்துத் தொகுப்பாக வெளியிட வேண்டுமென எண்ணி அக்கவிதைகளைத் தெரிவு செய்திருக்கின்றார். அதனால்தான் தொகுப்பு தரத்தைப்பொறுத்தவரையில் சிறப்பாக வந்துள்ளது. இவ்விதம் 139 கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதுவே இத்தொகுப்புக்கு வெற்றியினைத் தந்திருக்கின்றது.

கவிதைகள் கணநேர அனுபவங்களின் தொகுப்பு. ஆனால் ஒவ்வோர் அனுபவமும் ஏற்படுத்தும் சிந்தனையின் விரிவோ எல்லையற்றது. 'கணநேர எல்லையின்மை' என்னும் கவித்துவம் மிக்க தலைப்பினை வெளிப்படுத்தும் தொகுப்பு. பெருமைப்படத்தக்க தொகுப்பு.

தமிழகம், இலங்கையுட்படப் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளைப்பெற்று அவற்றை இத்தொகுப்பில் உள்ளடக்கியுள்ளார். தொகுப்பும் மிகவும் தரமாக வெளியாகியுள்ளது.

லதா ராமகிருஷ்ணனின் விடாமுயற்சிக்காக நிச்சயம் அவர் பாராட்டுக்குரியவர். தொடர்ந்தும் இது போன்ற கலை, இலக்கியப்பங்களிப்பு தொடர வேண்டும். கலை, இலக்கிய ஆர்வலர்களும், கலை, இலக்கியப்படைப்பாளிகளும் நிச்சயம் அவரது இவ்வகையான முயற்சிகளுக்கு ஆதரவு நல்குவார்கள்.

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்