Sunday, May 5, 2019

பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...- வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

இந்தச்சிந்தனை அவருக்கு இருந்ததனால்தான் அவர் மானுட வாழ்வே ஒரு கனவு என்று வருந்தி, ஒதுங்கி, ஓர் ஓரத்தே ஒடுங்கிக்குடங்கி இருந்து விடாமல், இயன்ற மட்டும் நூல்களை வாசிப்பதில் , இருப்பை அறிவதில், இருப்பில் நிறைந்து கிடக்கும் வறுமை, தீண்டாமை, அடிமைத்தனம், வர்க்க வேறுபாடுகள், மத வேறுபாடுகள், பெண் அடிமைத்தனம் எனப் பல்வேறு சீர்கேடுகளையும் சீரமைக்க வேண்டுமென்று சிந்தித்தார். அந்த அவரது பரந்து பட்ட சிந்தனைகளே கவிதைகளாக, கட்டுரைகளாக, வசன கவிதைகளாக, கதைகளாக , மொழிபெயர்ப்புகளாக என்று பல்வேறு வடிவங்களில் உருப்பெற்றன. அவ்விதம் உருப்பெற்றதால்தான் அவை இன்னும் மானுடர்க்கு அரிய பலவகைகளிலும் பயனுள்ளவையாக விளங்கி வருகின்றன. இன்னும் பல் ஆயிரம் வருடங்களுக்கு அவ்விதமே அவை இருக்கும்.

இந்தச்சுயசரிதையில் ஆரம்பத்தில் அவர் தன்னைப்பற்றிக்கூறியுள்ள கீழுள்ள வரிகள் என்னைக் கவர்ந்தன. அவை:

"வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரனிலை யென்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ?
உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே."


வாழ்வு முற்றுங் கனவெனக்கூறிய மறையோர் கூற்று பிழையன்று காண் என்கின்றார். ஆனால் 'பாழ்கடந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை' என்கின்றார். மேலும் 'உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்' என்கின்றார். மேலும் மாயை பொய்யென்பதை முற்றும் கண்ட தான் பிரம்மத்தின் இயல்பினை ஆயும் வகையிலான நல்லருளைப்பெறவில்லை என்கின்றார்.  அதே நேரத்தில் தேசத்தில் உள்ளவர்கள் கூறும் சொற்கள் தன்னுடைய அறிவினுக்குப் புலப்படவில்லையென்றால் அவற்றைச் 'செம்மை யென்று மனத்திடைக்கொள்ளும்' 'தீய பக்தி இயற்கையும்' வாய்த்தவனல்லன் தான் என்றும் கூறுகின்றார். அறிவினுக்குச் சரியென்று படாத ஒன்றை, அறிவினுக்குப் புலப்படாத ஒன்றினை, வெறும் பக்தியின் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறும் பாரதியார் அவ்விதமான பக்தியைத் 'தீய பக்தி'  என்றும் கூறுகின்றார். 'சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே' என்கின்றார்.

மாயை விடயத்தில் பாரதியார் மிகவும் தெளிவான நிலைப்பாடினைக்கொண்டிருந்தார்.  அதனால்தான் அவர் இக்கவிதையிலும் 'மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்' என்று கூறுகின்றார். அவரது இந்த நிலைப்பாட்டினை அவரது வேறு கவிதைகளிலும் காண முடியும். உதாரணமாக 'மாயையைப் பழித்தல்' என்னும் கவிதையைக்கூறலாம். அதிலவர் 'யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே! உன்றன் போர்க்கஞ்சுவேனோ, பொடியாக்குவேனுன்னை மாயையே' என்று கூறுவது அதனால்தான்.

பாரதியாரின் பால்ய காலத்தில் அவரையொத்த சிறுவர்கள் எல்லாரும் ஆடியும், பாடியும், ஓடியும் விளையாடிக்கொண்டிருக்கையில் , பாரதியாரால் மட்டும் தந்தையின் கண்டிப்பு அஞ்சி அவ்விதம் அச்சிறார்களைப்போல், அவர்களோடு ஆடிப்பாடிட முடியவில்லை. அதனால் தனிமையில் , தோழ்மையின்று அவர் வருந்தினார். அதனைத் தனது சுயசரிதையில் பாரதியார் பின்வருமாறு கூறுவார்:

ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் '
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
என்னோ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ் மைபிறி தின்றி வருந்தினேன்.

பாரதியார் தன் சுயசரிதைக் கவிதையில் விரிவாகவே தன் பிள்ளைக்காதல் அனுபவங்களை விபரித்திருக்கின்றார். பாரதியாருக்குக் காதல் பற்றி, பெண்கள் பற்றி உயர்ந்த எண்னமுண்டு, இதனால்தான் காதலின் சிறப்பைப்பற்றி, பெண்களின் உயர்வைபற்றியெல்லாம் அவரால் சிந்திக்க முடிந்தது.
அவற்றை மையமாக வைத்துக் கவிதைகள் பலவற்றை எழுத முடிந்தது. ஆனால் அவரை அந்த முதற் காதல் மிகவும் அதிகமாகவே பாதித்திருப்பதை அது பற்றி விரிவாகவே அவர் எழுதுயிருந்த கவிதை வரிகள் மூலம் அறிய முடிகின்றது. நீரெடுப்பதற்காக, நித்திலப்புன்னகை வீசி அவள் வரும் அழகினை, அவளுக்காகக் காத்திருந்து அவளழகைக் கண்டு அவளழகில் களித்திடும் மனப்போக்கினை எல்லாம் அவர் விரிவாகவே விபரித்திருக்கின்றார் தன 'சுயசரிதை'யின் 'பிள்ளைக்காதல்' என்னும் பகுதியில்:

"நீரெ டுத்து வருவதற் கவள், மணி
நித்தி லப்புன் நகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும் வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்"

"காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேளைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயிரெய்துவேன்"


ஆனால் அவரது முதற்காதலான இந்தப் பிள்ளைக்காதல் தோல்வியிலேயே முடிந்தது. பத்து வயதில் அவர் நெஞ்சை ஒருத்தி ஆட்கொண்டாள். ஆனால் அவரது தந்தையோ பன்னிரண்டு வயதில் தான் பார்த்த பெண்ணொருத்தியை அவருக்கு மணம் செய்து வைத்தார். அதனைப்பாரதியார் மேற்படி 'சுயசரிதை' கவிதையில் பின்வருமாறு விபரிப்பார்:

"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்."


இவ்விதமாகத் தான் காதலித்த பெண்ணை இழந்து, இன்னுமொருத்தியை மணம் செய்தபோதும், ஏற்கனவே தான் இன்னுமொரு பெண்ணிடம் கொண்டிருந்த காதல்தான் நிற்க வேண்டுமெனத்தான் தான் ஒருபோது தன் உள்ளத்திலெ எண்ணியவனல்லன் என்றும் கவிஞர் கூறுகின்றார்:

"மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழுதுமுன்
மாத ராளிடைக் கொண்டதோர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்'


இவ்விதம் ஒருத்தியை நினைத்திருக்கையில், இன்னொருத்தியை மணப்பது தவறென்றாலும், அதனை எடுத்துத் தந்தையிட கூறும் திறனிலலாயினேன் என்று கூறும் பாரதி, சுவாலைவிட்டு எரியும் காதல் தழலானது எவ்வளவு தூரம் தன் உள்ளத்தை எரித்துள்ளதென்பதையும் தான் கண்டிலேன் என்கின்றார்.
இவ்விதம் இந்தச் 'சுயசரிதை' கவிதையின் மூலம் பாரதியாரின் தனிப்பட்ட வாழ்க்கை , அது பற்றிய உணர்வுகள் பலவற்றை அறிய முடிகின்றது. அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க கவிதையாக மிளிர்கிறது .

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்