மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:
கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவொளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.
இரவு வானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திர சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கிறேன்.
எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன் காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவென்று பின்
உனைப் புரிதல்தான்.
ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்து விடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவம்
உண்டு; புரியுமா?
வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?
இடம், வலம், மேல், கீழ்
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒரு திசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
உன் புதிரவிழ்த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?
இரவி, இச் சுடர் இவையெல்லாம்
ஓய்வாயிருத்தலுண்டோ?
பின்
நான் மட்டுமேன்?
நீ எத்தனை முறைதான்
உள்ளிருந்து
எள்ளி
நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ போடும் புதிர்களுக்கு
விளக்கம்
காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.
வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில்
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்
மட்டும்தானா?
அண்மையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்துத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) தொகுப்பிலும் எனது கவிதையொன்று வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள எனது கவிதை: "குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி. "
கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி. - வ.ந.கிரிதரன் -
குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.
'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழிலும் எனது கவிதையொன்று வெளியாகியுள்ளது. அதன் தலைப்பு: "காலவெளிப்பயணியின் நெடும் பயணம்"
கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்
என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.
இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.
முடிவற்ற நெடும் பயணம்!
தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!
என்று முடியும்? எங்கு முடியும்?
நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.
காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!
அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்
No comments:
Post a Comment