Saturday, May 4, 2019

இலங்கைத் தமிழ் இலக்கியமும் , 'இன்ஸான்' பத்திரிகையும்.


எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:

"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."

எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:


" அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். "

கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் செப்டம்பர் 30, 2012 தினகரன் (இலங்கை) பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிய 'நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:

"1965-1968 காலப்பகுதியில் இன்ஸான்” எழுப்பிய அலை ஓசையை மறக்க முடியாது. முஸ்லிம்களின் வரலாறு கலை இலக்கியம் சமூகவியல் போன்றவற்றில் இன்ஸான் ஆற்றிய பணி கால ஓட்டத்தில் கரைந்துவிட முடியாத ஒன்று “இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கான சோனகத் தமிழ் அழகை வீச்சாகக்கொண்டு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பத்திரிகை அது"

ஏ. ஏ. லத்தீப் அவர்களே 'இன்ஸான்' பத்திரிகையையும் நடாத்தியதை மேற்படி கட்டுரையிலுள்ள "நானும் இலக்கிய ஆர்வலர் ஜனாப் நkர் ரியாலும் இன்ஸான் லத்தீஃபை பற்றி பலமணிநேரம் கலந்துரையாடினோம்" என்னும் கூற்று வெளிப்படுத்துக்கின்றது. மேற்படி கட்டுரை எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிப் பின்வருமாறு கூறுவது அவரது கலை, இலக்கியப்பங்களிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது:

" பல புனைப்பெயர்களில் லத்தீஃப் எழுதுவதை ஒரு கலையாக கொண்டிருந்தார். ஏ.ஏ.சுல்தால், அப்துல்லா, காக்கா என்பன சிலவாகும். மூதறிஞர் வ.மி சம்சுதீனை கெளரவ ஆசிரியராகக் கொண்டு தாரகையில் இவர் எழுதிய அத்துல்லா காக்காவின் உளறு பலாய் நெயினா முஹம்மதின் நகைச்சுவை பேனாச் சித்திரங்களான கிச்சடிப்பாளை என்பன அந்த சஞ்சிகை பரபரப்புடன் பேசப்பட்டு விற்பனையாவற்கு பெரும் காலாயின. எ.எ.லத்தீஃப் ஒரு சிறுகதை எழுத்தாளர் இவர் படைத்த சிறுகதைகள். மிகச்சிலவே சிறுகதை விடயத்தில் இவர் மெளனியைப் போல் தனது கவிதைக்காக ஜப்பானில் சர்வதேச விருதும் பரிசும் பெற்ற அமரர் கண்டி தலாத்ஓயா கே. களோசின் பாரதி இதழிலும் வீரகேசரியிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. நீதியே நீ கேள்.... என்ற நாவலைப் படைத்தவர் சுபையீர் இளங்கிரன் 1960களில் இளங்கீரன் வெளியிட்ட மரகதம் சஞ்சிகையில் லத்தீஃப்பின் மையத்து சிறுகதை வெளிவந்தது லத்தீஃப் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் படைத்தார். இளங்கீரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஜனவேகம் பத்திரிகையில் விக்கி எனது நாங்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற சிறுகதையினை பிரசுரிக்க உதவியுள்ளார். லத்தீஃப்பின் மையத்து சிறுகதையில் அவருடைய இறுக்கமான நடையினையும் சம்பவத்தையும் அப்படியே எழுத்தின் ஆற்றலால் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்திவிடும் வல்லமையினையும் பின்வரும் பந்திகள் துல்லியமாக நமக்கு காட்டுகின்றன. “காற்றோட்டமற்ற அந்த ஓலைக் குடிசையைக் கெளவிக் கொண்டிருந்த துர்நாற்றத்தை பெயர்த்தெறிய ஊதுபத்தி, சாம்பிராணி , அத்தர் முதலிய வாசனைத் திரவியங்களில் கூட்டு முன்னணி நிறுவி நடத்திய போட்டி யும் நிசப்தமும் பிரேதத்தின் துர்நாற்றத்துக்கு ஒரு அமானுஷ்ய தன்மையைப் பாய்ச்சின. காதற்ற ஊசியும் உடன் செல்லாத கடை வழி யாத்திரைக்கு மஜீத் நானாவுடைய மையத்து கபன் உடுத்தி சந்தக்கு ஏறி தயாராவதற்கு முன்னரே மையத்தைப் பார்க்க வந்தவர்கள் துர்நாற்றத்தால் சாடப்பட்டு விலகி லேஞ்சிகளால் மூக்கை மூடிய வண்ணம் வெளியே சென்று வம்பளந்து கொண்டிருந்தார்கள். பன்னாமத்துக் கவிராயர் லத்தீஃப்பின் ஆங்கிலக்கவிதைகளைப் பற்றி குறிப்பிடும் போது 1983க்குப் பின் லத்தீஃப் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் இனப்பாகுபாடு மையாலும் பூசல்களாலும் இந்நாட்டை சாபக்கேடாகப்பிடித்த மானுட அழிவுகளின் சோகத்தைச் சொல்வன என்று குறிப்பிடு கின்றார். லத்தீப் மானுடநேய மிக்க படைப்பாளி, சண்ட மாருதம் புரிந்த சமூகப் போராளி, பத்திரிகை யாளன், முற்போக்கு சிந்தனை யாளன், சிறுகதை எழுத்தா ளன், கவிஞன் மொழிபெயர்ப்பாளன், மறு கைக்கு தெரியாமல் ஏழைக்கு உதவிபுரிந்த கல்விமான். புகழ்பூத்த அரசியல்வாதிகளான எ.சி. எஸ். ஹமீட் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்டி சில்வா, பீட்டர் கென மன் எஸ்.எ. விக்கிரமசிங்க ஆகியோருடன் நெருங்கிய தொடர்பும், தோழமையும் கொண்டிருந்தவர்."
இக்கூற்றுகள் மூலம் "இன்ஸான்" பத்திரிகை , எழுத்தாளர் எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெளிவாகத் தெரிகின்றது.

எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்களிடமும் சிதைந்த நிலையில் 'இன்ஸான்' பத்திரிகைப்பிரதிகள் சில உள்ளதாக அறிவித்திருக்கின்றார். அவை முற்றாகச் சிதைந்து போகும் முன்னர் அலைபேசி மூலம் அவற்றைப்படமெடுத்துப் பதிவு செய்து வைப்பதும் அவசியமானது. அதன் மூலம் அவற்றைப் பாதுகாக்கலாம்.

எழுத்தாளர் திக்குவல்லை கமால் முகநூலில் பதிவு செய்த இன்ஸான் பத்திரிகையின் பக்கமொன்றினையே இங்கு காண்கின்றீர்கள்.

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்