Sunday, May 5, 2019

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -


நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

தேன்மொழியின் நோக்கம் பற்றி அதன் முதலாவது இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது: "கட்டிளமை சொட்டுகின்ற கன்னிகையும், காதலனும் ஒன்று சேர்ந்தது போல, எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய்  நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ் - 'தேன்மொழி' கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொணர வேண்டுமென்பது ஒரு எண்ணம்; நவாலியூர் சோமசுந்தரப்ப்புலவருக்கு ஒரு நல்ல நினைவுச்சின்னம் உருவாக்க வேண்டுமென்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து 'தேன்மொழி'யை உருவாக்கி விட்டன.  ஈழத்தின் மறுமலர்ச்சிக் கவிவாணர்களில் முக்கியமான பலர் இந்த முதலாவது இதழை அலங்கரித்திருக்கின்றார்கள்."
கவிதைக்காக ஓரிதழ். தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவருக்காக எழுத்தால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னமாக ஓரிதழ். ஒரு கல்லில் இரு மாங்காய்கள். இன்று வரலாற்றில் 'மறுமலர்ச்சி' இதழ் போல் கவிதைக்காக மட்டுமே வெளிவந்த சஞ்சிகையான  'தேன்மொழி'யும் நின்று விட்டது. அதே சமயம் சோமசுந்தரப்புலவரின் நினைவுச்சின்னமாகவும் தேன்மொழி விளங்குகின்றது.

தேன்மொழிச் சஞ்சிகையில் வெளியான கவிதைகளை அறிவதுதான் இப்பதிவின் நோக்கம். முதலில் தேன்மொழி சஞ்சிகையின் முதலாவது இதழில் வெளியான கவிதைகளைப்பார்ப்போம்.

இவ்விதழில் வெளியான கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. நாவற்குழியூர் நடராசன் - 'படுத்துகிற பார்வை!"
2. சாரதா - துயிலெழுச்சி
3. யாழ்ப்பாணன் - அவள்
4. சோதி - நதி ( ஒரு ஸ்பானியக் கவியின் எண்ணம்)
5. வி.கி.இராசதுரை - காதல் போச்சோ?
6. மிருசுவில், அரி அரன் - நிலவு விடு தூது.
7. அ.ந.கந்தசாமி - எதிர் காலச்சித்தன்ன் பாடல்
8. சோ.பத்மநாதன் - யாருக்கு வெறி?
9. முருகையன் -  புத்தொளி பாய்ச்சுக!
10. மஹாகவி - பல்லி!
11. வரதர் - காதலாம், காதல்!

இவற்றிலுள்ள கவிதைகளில் மிக நீண்ட கவிதை அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச்சித்தன் பாடல்'. எனக்குப்பிடித்த கவிதைகளிலொன்று. தமிழில் வெளிவந்த முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுவது  இக்கவிதையைத்தான். இக்கவிதை ஒரு கதையைக் கூறுகின்றது. ஒரு மதம், ஒரு மொழி, ஓர் அரசு என்று நிலவும் எதிர்காலப்பூமியில் ஏழை, பணக்காரனென்று எவ்விதப் பேதங்களுமில்லை. மனிதர்கள் மனிதர்களாகச் சமத்துவமாக வாழ்கின்றார்கள். அவ்வெதிர்காலத்துக்கு நிகழ்கால மனிதனான கவிஞன் செல்கின்றான். அங்குள்ள எதிர்கால மனிதனுடன் உரையாடுகின்றான்.

அவ்வெதிர்காலத்து உலகில் நிலவும் மானுட சமுதாய அமைப்பால் கவரப்பட்ட நிகழ்கால மனிதன் , எதிர்கால மனிதனை, இனம், மதம், மொழி, வர்க்கம் என்று பிளவுகளால் சீரழிந்து கிடக்கும் நிகழ்காலத்துக்கு வரும்படியும், வந்தால் பிளவுகளில் மூழ்கிக் கிடக்கும் நிகழ்கால மனிதரின் எண்ணம் உயரும். புதுவாழ்வு கிட்டும் என்றும் வேண்டுகின்றான். அதற்கோ அவ்வெதிர்கால மனிதன் 'மயக்கத்திலுள்ள உன் நிகழ்கால மனிதர் ஞானத்தைக் காணார். என்னை ஏற்றி மிதித்திடுவார். ஆலத்தைத் தந்து அன்று சோக்கிரதரைக் கொன்றவர்களல்லவா உன் மனிதர். ஆகவே நான் வரேன். நீ செல்க' என்கின்றான். முயற்சியில் தோல்வியுற்ற நிகழ்கால மனிதன் ஏமாற்றத்துடன் ' பாதகர்கள் முழுமடைமைப் போர்கள்சூழும் , பாருக்கு'த் திரும்பி வந்தான். 'எங்கும் தீதுகளே நடம்புரியும்' நிலைமைகண்டு திடுக்கிடுகின்றான். 'என்று இவர்கள் உண்மைகாண்டல்?' என்று பெருமூச்சு விடுவதுடன் இந்நீண்ட கவிதை முடிகின்றது.

இந்தக் கவிதையை நான் இருபதாம் நூற்றாண்டில் இதுவரை வெளியான சிறந்த தமிழ்க் கவிதைகளிலொன்றாகவும் கருதுவேன். இக்கவிதை 1955இல் காலத்தைக் கடந்து எதிர்கால உலகுக்குச் செல்லும் நிகழ்கால மனிதனைப்பற்றிக் கூறுகின்றது. அவ்வெதிர்காலத்தில் நிலவும் மானுடர்கள் அனைவரும் யுத்தங்களற்று, பிரிவுகளற்று ,  அன்புடன் சமத்துவமாக வாழும் சமுதாய அமைப்புப் பற்றிக் கூறுகின்றது. மதம், மொழி, இனம் , வர்க்கம் என்று பற்பலப் பிரிவுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய மானுட சமுதாயத்தைப்பற்றி விமர்சனம் செய்கின்றது. இன்றைய மானுடரின் பிரச்சினைக்கு அவ்விதமானதோர் அமைப்பு தேவைப்படுகின்றது என்பதை வலியுறுத்துகின்றது. கூறும்பொருள் காரணமாக, கூறும் கவிதை மொழி காரணமாக இக்கவிதை சிறந்ததொரு தமிழ்க் கவிதை. மேலும் காலத்தைத் தாண்டிச்செல்லும் பயணத்தைப்பற்றிக் குறிப்பதால், இக்கவிதை அறிவியற் கவிதை என்னும் பிரிவுக்குள்ளும் அடங்குகின்றது. அ.ந.க.வின் இக்கவிதையை 'எதிர்காலச்சித்தன்' என்றொரு சிறுகதையாக எழுதியிருக்கின்றேன். அது 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது.

அ.ந.க. நூற்றுக்கணக்கில் கவிதைகளை எழுதிக்குவித்தவரல்லர். ஆனால் அவரது கவிதைகளில் 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'சிந்தனையும் மின்னொளியும்',  'துறவியும் குஷ்ட்டரோகியும்' போன்ற கவிதைகள் நவீனத்தமிழ்க் கவிதைகளில் தவிர்க்கப்பட முடியாத கவிதைகள் என்பேன். அத்துடன் அவர் 1967இல் இலங்கையில் நிகழ்ந்த சாகித்திய விழாவில் பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் கவிதையைப்பற்றித் தென் புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள் மிகவும் சிலாகித்து 'ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற கவிதை தோன்றும்' என்று குறிப்பிட்டதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா அ.ந.க. பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார். அது அக்கவிதையை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. அக்கவிதைபற்றிக் கேட்டதிலிருந்து இன்றுவரை அக்கவிதையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. உங்களில் யாரிடமாவது அக்கவிதை இருந்தால்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அறியத்தாருங்கள்.

நாவற்குழியூர் நடராசன் நல்லதொரு கவிஞர். மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து எழுதத்தொடங்கியவர். இவரது 'படுத்துகிற பார்வை' என்னும் கவிதையில் வள்ளுவரின்  'யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்' குறளின் தாக்கத்தைக் காணலாம். கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்படப்பாடலான 'நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ' பாடலில் வரும் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே. விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே' என்னும் பாடலிலும் வள்ளுவரின் மேற்படி குரலின் தாக்கத்தைக்காணலாம்.

'நான்பார்க்கத் தான்பாராள் நான்பாரா விட்டதன்பின்
தான்பார்த்து வான்பார்க்கும்; நான்பார்க்கில் - தான்பார்த்த
வான்பார்த்து மீன்பார்த்து வையத் துளவெல்லாம்
தான்பார்க்கு மென்னைத் தவிர்த்து.'
என்று நாவற்குழியூர் நடராசனின் மேற்படி 'படுத்துகிற பார்வை' கவிதை ஆரம்பமாகும்.

இவ்விதம் ஆரம்பித்துச் செல்லும் கவிதை ,

'பார்த்தாலும் துன்பம், படுத்துகிற பார்வையினை
நீத்தாலும் ஆங்கே நெடுந்துன்பம் - பார்த்தால்
படுத்தும் அவளை, அதுஇன்றேல் என்னை
அடுத்துக் கெடுக்கும் அது'
என்று முடியும்.

கவிஞர் சாரதாவின் 'துயிலெழுச்சி' கவிதையும் நல்லதொரு கவிதை. தேன்மொழியில் பத்து வருடங்களின் முன் எழுதிய கவிதைகளுக்கான பிரிவில் மேற்படி 'துயிலெழுச்சி' அடங்கியுள்ளது.  உலகெல்லாம் புரட்சிக்கூச்சல் கேட்கையில், அதுபற்றி உணராது 'பழந்தமிழர் பெருமை' பேசியும், வேதாந்தம் பேசியும் இருக்கிறோம்.  இந்நிலை மாறவேண்டும். 'உலகத்தோடு சரிநிகராய்த் தமிழரினித் தலையெடுக்கச் சாத்திர ஞானம் தமிழில் தழைக்க வேண்டும்.  அரசியல் விஞ்ஞான நிலை, பொருளாதாரம் அனைத்தையும் நாம் ஆய்ந்து புது ஆக்கஞ் செய்யவேண்டும்'  என்று அறை கூவல் விடுக்கும் கவிதை. இதற்காகத் தூக்கத்திலிருந்து எழ வேண்டும் என்பதற்காகத் 'துயிலுழுச்சி' பாடுகின்றது.

மிருசுவில் , அரிஅரனின் 'நிலவு விடு தூது' கவிதையின் தலைவி நிலவைத் தன் அத்தானிடம் தூது செல்லும்படி வேண்டுகின்றாள். வழக்கம்போல் தன் வேதனையை அத்தானிடம் வேண்டும் தலைவியின் பின்வரும் கூற்றுப் படிப்பவர்கள் இதழ்களில் புன்னகையைப் படர வைக்கும். 'குயில் பாடுகின்றது. பாடுங்குயில் அத்தானோ என்று ஓடிச்சென்று ஏமாந்தாளாம் தலைவி. இதனையும் போய் அத்தானிடம் 'பாடுங்குயில் அத்தானோ? என்று  ஓடிப்போய்க் காமாந்தகாரி கருங்குயிலைத்தான் கண்டு ஏமாந்தாள்' என்றும் கூறும்படி நிலவை வேண்டுகின்றாள் தலைவி. எப்படியெல்லாம் நம் கவிஞர்களின் கற்பனை ஓடுகின்றது!

சோ.பத்மநாதனின் 'யாருக்கு வெறி?' மதுவருந்தி வாகனமோட்டும் செல்வனொருவன் ஏழையொருவனைத் தன் வாகனத்தால் இடித்து விட்டான். அடிபட்டவன் இறந்து விடுகின்றான். வழக்கு நடக்கிறது. நீதிபதியோ மதுவெறியில் அவ்வேழை தெருவில் நடந்ததன் காரணமாகவே அவன் அடி பட்டு இறக்க வேண்டி வந்தது என்று தீர்ப்புக் கூறுகின்றார். அச்செல்வன் விடுதலையாகின்றான். 'மதுவைத் தன் வாய்க்குள் விட்டுக் கடையாகிக்கள்ளு வெறியால் மருண்ட  கசடர் - இழிந்தோர் எவரோ? என்று கவிஞர் கேட்பதுடன் கவிதை முடிவுக்கு வருகின்றது. ஏழைக்குச் சார்பான நீதிபதியின் தீர்ப்பு , பிரெக்டின் 'யுகதர்மம்' நாடகத்தை நினைவுக்குக் கொண்டுவந்தது.

மஹாகவியின் 'பல்லி' கவிதையும் இதழின் முக்கியமான கவிதைகளிலொன்று. தாயிடம் பாலருந்திய குழந்தையொன்று பாயில் படுத்திருந்தபடி கால்களை உதைத்தபடியிருக்கிறது. ' காற்றில் எழும் கடுகோ'என்னும்படியான வண்டொன்று பறந்து திரிகின்றது . குழந்தையின் பார்வையும் அவ்வண்டினைத்தொடர்கிறது. 'சிந்திய மைத்துளி'போல் குந்திய வண்டினைப் பொந்தொன்றிலிருந்து வெளிவந்த பல்லியொன்று உண்டு செல்கிறது. திடீரென நடந்த இச்செயலால் ஆத்திரமுற்ற குழந்தை, 'உளம் வெந்து வெகுண்டு, விம்மி' அழுகிறது. குழந்தையின் அழுகைக்குக் காரணம் புரியாத , உலை மூட்டிக்கொண்டிருந்த தாயார், பசியால் அழுவதாக நினைத்தோ என்னவோ பாலூட்டத் தொடங்கினாள்.  பல்லிக்கதையைக் கூறும் கவிதை நல்லதொரு கவிதை.

வரதரின் 'காதலாம் காதல்' இன்றைய இளம் பருவத்தினர் மத்தியில் பார்க்கில், பீச்சில், போக்குவரத்தில் , 'காணிவலில்', பள்ளிக்கூடத்தில் கண்டதும் ஏற்படுங் காதலை  'போக்குவ்வரத்தில், பொழுதைப்போக்கும் 'பாக்கில்', சினிமா, 'பீச்'சிலும் வருவது - ஐயோ காதல்! காதல்!!' என்று நையாண்டி செய்கின்றது.

அடுத்து 'தேன்மொழிக்கவிதைகள் -2'இல் தேன்மொழி இதழ் 2 பற்றிப் பார்ப்போம்.

விதை: எதிர்காலச் சித்தன் பாடல்! - அ.ந.கந்தசாமி -

'நூலகம்' தளத்தின் உதவியுடன் ஏற்கனவே தட்டச்சு செய்யப்பட்ட நிலையில் சக எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பலவற்றின் தட்டச்சுப்பிழைகளை மூலப்பிரதியுடன் ஒப்பிட்டுத் திருத்த முடிகின்றது. என்னிடமில்லாத அ.ந.க.வின் படைப்புகளைத் தேடிப்பெற வழி செய்கின்றது. இக்கவிதையும் அவ்விதம் திருத்த 'நூலகம்' உதவியிருக்கின்றது. நன்றி 'நூலகம்'.

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குமுத வாயன்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்காரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொடு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச்சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்தவார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்குசொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றாவண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம்யாவும்
நொருங்கிவிழும் உலகெல்லாம் ஒன்றேயாகும்
நோக்கிடுவாய் தூரஎதிர் காலமீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச்சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்களென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம்சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மக்களெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்றஇன மென்பார்
அரசர்கள் ஏழைபணக் காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்துவிடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலைதூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனம்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனிதஇனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்தமொழி தானப்பா அரசாளும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இதுகேட்டுச்  சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொதுமொழியும் ஆகும்
புதுமைதனைக் காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணுமபி  மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந் திடுவோம்.
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த் திடுவார்.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத்   தீதுணர மாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும்  விளைப்பார்
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன்இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன்நீ வந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச் செல்லாயோ" என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையு மங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதைநீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்க ளப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித் திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக்  கொன்ற
அன்பர்க ளுன்மனிதச் சோதரர்க ளன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதாஅங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான்ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம்தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள்சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமைகண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?

- தேன்மொழி, இதழ் 1

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகள் அத்துடன் ஆனை பார்த்த அந்தகர்களும்தாம்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணி பட்ட பாடு'. விளக்...

பிரபலமான பதிவுகள்