இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.
நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.

இறுதியாக மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதுக்கான தேடல் மகிழ்ச்சிகரமாக முடிவுக்கு வந்தது உண்மையில் மகிழ்ச்சியே. இதற்காக எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். காத்யானா அமரசிங்க இலங்கையில் அனைத்து மக்களும் பூரண உரிமைகளுடன் வாழ வேண்டுமென்ற நம்பிக்கையுள்ள எழுத்தாளர்களிலொருவர். தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுள்ளவர். தமிழர் மற்றும் இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளையும் உணர்ந்தவர். அண்மையில் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' சிங்கள மொழியில் வெளிவருவதற்கு மிகவும் உதவியவர். அத்துடன் நூல் பற்றிய விரிவான கட்டுரையொன்றினையும் லக்பிம தினசரியின் வாரவெளியீட்டில் எழுதியவர். அவருக்கு அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதைப்பெற்றுத்தந்ததற்காக மீண்டுமொருமுறை நன்றி.
No comments:
Post a Comment