Saturday, May 18, 2019

'மண்ணில் குரல்' தொகுப்புக் கவிதைகள்!

கனடாவின் முதல் தமிழ் நாவலாக 1987 தை மாதத்தில் வெளிவந்த  நூல் எனது 'மண்ணின் குரல்' . இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் 'மண்ணின் குரல்'. அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன். இக்கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல் அனைத்தும் ,மான்ரியால் நகரில் அக்காலகட்டத்தில் (1984 - 1986)  வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானவை. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினர் வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை 'புரட்சிப்பாதை'

இந்நூலில் அட்டையினை வடிவமைத்தவர் தற்போது மான்ரியாலில் வசிக்கும் கட்டடக்கலைஞர் பெ.பாலேந்திரா அவர்கள்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

1. மாற்றமும் ஏற்றமும்

அம்பிகையே! அன்பின் அவதாரமென
ஆன்றோர் கூறினரேயுனை. உன்
ஆற்றல் அவ்வளவுதானா?
அம்பிகையே! இவ்வளவுதானா?

ஓரிரவில் அவர்கள்
கண்ணுக்குக் கண்ணான என் கண்மணியைக்
குளிரினில் இழுத்துச்சென்றார்களே!
நீ
காணவில்லையா?.. நான்
கண்டேனே.

பின்னுமோரிரவில் பிஞ்சுக்குப்
பாலூட்டிக்கொண்டிருந்த என்
புதல்வியை,அருமைச்செல்வியை
'பிய்த்துப்' பிடுங்கிப் போனார்களே?
நீ
பார்க்கவில்லையா?

கண்ணிருந்துங் குருடியானாய்.
அம்பிகையே
குருடியானாய்.

இன்னுமோரிரவும் அவ் ஓநாய்க்கூட்டம்
இங்கு வரக்கூடும்.
ஆயினும் அவர்க்குப் பதில் சொல்லிட
அம்பிகையே நீ வரத்தேவையில்லை.
என் கைகளிலுள்ள துப்பாக்கியே
போதுமம்மா.. ஆமாம்.

2. அர்த்தமுண்டே..

பாலைகள் வீசி புழுதிகள் படர்கையிலே
நெஞ்சினில் தானெங்கனம் நிம்மதியேது?
ஆயினுமென் நெஞ்சோ
துவண்டு விடுவதில்லை. சோகத்தாலுதிர்ந்து விடுவதில்லை.
தொலைதூரத்தே , கண்ணாடியினூடே
நீலவானமிரவின் கருமையில் உறைந்து கிடக்கும்
ஒளியாண்டுகளில் ஓய்ந்திருக்கும் அமைதியில்
சுடர்க்கன்னிகளின் 'கெக்கலி' மட்டும்
மின்னி மெல்ல மறையும்...
நெஞ்சகமோ குலுங்கி மெல்லக் குளிரும்.
கூடவே,
மென்தென்றலில் நாணிச்சிரிக்கும்
மல்லிகைகளும்,
வயல்களில் மாரிகளில் படரும்
தவளைக்கச்சேரிகளும்,
கருங்குருவிகளின் ஒயிலாட்டங்களும்,
மாவினுள் மறைந்து மருளும் குயில்களும்,
மலிந்த என்னூரின் நினைவலைகளும் மெல்ல
எழும்...
ஆயின், அங்கும் அமைதியில்லை.
இரவுகளில் இரத்தங்கள் வீதிகளில்
ஆறெனப்பெருகிக்கிடக்கையில்
கற்புத்திரைகள் கிழிந்து , கண்ணீர்பொழிகையில்,
அந்த நினைவுகளும் இன்னும்
நெருஞ்சி முட்களாகத்தான் குற்றுகின்றன.
கண்ணீருங் கம்பலையுமே கவிந்துவிட்ட
வாழ்வினிலே..
அர்த்தங்கள் அவர் வாழ்விலில்லை.
காலைச்சாலைகளில், அங்கு
வசந்தப்பூக்களும் வாடியே பூக்கின்றன.
அநீதியின் பொருமலுக்குள் அவரெல்லாம்
சிதைந்து, இடிந்து கிடக்கின்றார்.
எங்கனும்
வியாபித்துக்கிடக்கும் இயற்கைத்தாயே!
எதற்கு இவையெல்லாம்..? எதற்கு?
ஆயினும்,
விலகியோடுவதில் அர்த்தமில்லை.
உணர்ந்து பின் வாழ்வதிலும்
உண்டே அர்த்தங்கள்.
'போரற்று அமைதியிங்கு
பிறப்பதில்லை.
புரட்சிகள் வெடிக்காமலிங்கு
புதுயுகங்கள் மலர்வதில்லை.'
அர்த்தமற்ற வாழ்விலுமோர்
அர்த்தமுண்டே ! அறிந்திடுவோம்!
கோழையைப்போலோடுவதால்
கண்ட பயன் தானென்ன?
நாளை நாம் படைப்போம்,
நல்லதொரு பொற்காலம்.

3. விடிவிற்காய்....

யன்னல் கம்பிகளினூடே, மெலிதாய்
வெளிச்சம் பரவுகையில் வெகு
தூரத்தே வெள்ளை வெளேரென
வானம் விரிந்து கிடக்கும்.
அடித்து விட்ட சித்திரமாய்
சலனமற்ற வெண்பரப்பும்
உயர்ந்து, உறைந்து கிடக்கும்
கொங்கிறீற் உருவங்களுமென
ஒரு காட்சி விரிகையில்,
மெல்லிய தென்றலும், சிட்டுகளும்,
சரசரக்கும் பனையோலைகளும்
அழுது வடியும் என் கிராமத்தின்
நினைவொன்றே எழுந்து விடும்.
செம்மண் புழுதி படர்ந்த சாலைகளில்
கவச வாகனங்கள் விரைவதும்,
குடில்களுக்குள் குமருகள் குடங்குவதும்,
விதிர் விதிர்த்து நடுங்குமொரு
வாழ்விலங்கு மக்கள் , வெடவெடத்துச்
சுருண்டிருப்பர்.
நிச்சயமற்ற பொழுதுகளில்
இரத்தக்கறைகளுடன் காலைகள்
மலர்கையிலே
உயிர்களின் மதிப்பே அற்றவொரு
வாழ்விலவர் வாடிக்கிடப்பர்.
நொந்து, நைந்த இதயங்களின்
சோகங்களும், இரத்தக்கண்ணீர்த்
துளிகளும், வெந்து படரும் மூச்சுக்'
காற்றுகளும்
ஒரு வரலாற்றை இங்கு வந்து
படைத்து வைக்கும்;
'விடிவொ'ன்றை மலர வைக்கும்.

4. புல்லின் கதை இது!

புல்லின் கதை உமக்குப் புரியுமா?
புரியாவிடில் நாமுமக்குப் புரியவைப்போம்.

"புல்லே! பசிய எழிற் புல்லே! உன்னைத்தான்
பசிய எழிற்புல்லே!
மிதிபட்டு, மிதிபட்டு, மிதிபட்டே வாழுமொரு வாழ்வில்
என் சிறு புள்ளே! நீ
மாய்ந்திடவில்லை. மனதொடிந்து
ஓய்ந்திடவில்லை. அதை இவர்க்குப்
புரிய வைத்திடு. புரியாவிடின், ஆமாம்
புல்லே புரிய வைத்து விடு!
அடங்கி, அயர்ந்து, அடிமைகளாய்க்
குடங்கிக் , குமைந்து, கூனிக் குறுகியே
வாழ்மெம் மக்கள் உன்னிடம்
அறிந்ததோ பற்பல.
அதை இவர்க்கு உரைத்துவிடு புல்லே!
புல்லின் நுனிகளிலும்
புரட்சிகள் பூத்துவிடும் காலமிது என்பதனை
புரிய வைத்திடு இம்மூடரிக்குப் புல்லே!

புரிந்ததா மூடரே! புரிந்ததா?
புரிந்துமா நிற்கிறீர் எதிர்த்தெமை.
ஆமாம்! நீர் போக மாட்டீர். ஆயின்
போக வைப்போம் நாம்.
புரட்சிகள் வெடிக்காமல்
புதுயுகங்கள் பிறப்பதில்லை என்பதனைப்
புரிய வைப்போம் பதரே! ஆமாம்!

* இக்கவிதை 80/81 காலப்பகுதியில் எழுதப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தொகுப்பொன்றுக்காக என் தம்பியின் நண்பரான இளங்கவிஞர் ஒருவர் வாங்கிச்சென்றார். பின்னர் நான் நாட்டிலில்லாத சூழலைப்பயன்படுத்தித் தனது தொகுப்பொன்றில் இக்கவிதையைத் தன் கவிதையாக வெளியிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அத்தொகுப்பினை இதுவரை நான் பார்க்கவில்லை. அதனால் அச்செய்தியின் உண்மைத்தன்மையினை இதுவரை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

5. ஒரு காதலிக்கு....

அன்பே! அதிகாலைக்கருக்கிருளில் மெல்ல நீ
ஆடி அசைந்து வருகையில், காலையுமோர் எழில் பெற்றிலங்கும்.
காற்சதங்கைகள் எழுப்புமின் கீதத்தில் இயற்கையும் ஸ்தம்பித்துவிடும்.
வயல் வெளியில், மாரிகளில் மெல்ல நீ
வளைய வருகையில் சில்லிடும் தென்றலென அதுவேயோர்
இனிமையென நெஞ்சினில் வீசி நிற்கும்.

அன்பே!
அந்த நாட்கள் எங்கு போயின?
அந்த நாட்கள் எங்கு போயின?

உனது அந்தக் காந்தள் விரல்களை, மெல்லிய ரோஜா இதழ்களை,
பூவினும் நுண்ணிய உந்தன் மெல்லுடலை..
அவர்கள் என்ன செய்தார்கள்?

கருக்கிருளில் ஒரு நாள் நீ
கருகிப்போனாய் என் அன்பே! இல்லை,இல்லை
கருக்கப்பட்டாய் என் அன்பே!

அன்று நீ வடித்த இரத்தக்கண்ணீர்த்
துளிகளைச் சுமந்து வந்த காற்றும்
சோகத்தால் கனத்துப் போனது.

என் அன்பே!
நீ நம்பிய தர்மங்களுக்குப் பொருளிருக்குமாயின்
நானின்று உன்மேல் ஆணையிடுகின்றேன்.
'இந்த உலுத்தர்களை உக்கி உதிர விடும் வரை
நானினித்தூங்கிட மாட்டேன்.'

6. மண்ணின் மைந்தர்கள்!

அம்மா!
சோகத்தால் நான் துக்கித்த வேளையெல்லாம்
மென்தென்றல் வீசி எந்தன்
நெஞ்சில் இனித்தாய்.

சினத்தீயில் வெந்த போதெல்லாம்
சுனைகளில் ஓடைகளிலாழ்த்தி எந்தன்
சிந்தையில் கொதிப்பினைக்குறைத்தாய்.

நோயினில் நலிந்து நானிருந்த
நேரமெல்லாம்,
நோயகற்றிச் சீராட்டி நெஞ்சினில்
நிறைந்தாய்..
அம்மா!

அடித்தாரை நீ அரவணைத்தாய்.
அன்பின் வலிமையினை நீ
அவனிக்கெல்லாம் எடுத்துரைத்தாய்.

உன்னை அவர்கள் கொத்திக்குதறிய
வேளைகளிலெல்லாம்
ஆடை பற்றியிழுத்திட்ட நேரமெல்லாம்
நீ மெளனித்துக்கிடந்தாய்.
சோகித்த நீ வடித்த கண்ணீர்த்
துளிகளுக்கு அவர்கள் பதில் சொல்லும்
காலம் வந்து விட்டது.

அம்மா!
உனது மைந்தர்கள் விழித்து விட்டார்கள்.
ஆமாம்! அம்மா! ஆமாம்!
வேள்வித்தீயினில் அவர்கள் பற்றி எரிகையிலெல்லாம்
சோகித்த உனது கண்களில் வடிப்பதற்கோ
கண்ணீரில்லை.. ஆயினும் உனது முகத்தில் விரவி நிற்கும்
அந்தக் கம்பீரம்..
ஆமாம்! அம்மா நீ நிச்சயம்
பெருமைப்படலாம்.
உனது மைந்தர்கள் கோழைகளல்லர், நெஞ்சம்
உதிர்ந்தவரல்லர்.
உருக்குகள் அம்மா! உருக்குகள்!
உலுத்தர்தமை உதிர்த்துவிட
எழிந்திட்ட நெருப்புகள்.

7. புதுமைப்பெண்!

கண்ணென்றும், மணியென்றும் , இன்
கனியென்றும் , பொன்னென்றும்,
பஞ்சனையின் மந்திரமென்றும்
புளகித்துக்கிடந்த பாவலரே!

பழைய பல்லவிகளையெல்லாமினி
புதை குழிக்குள் தள்ளி விடுங்கள்.
இல்லாவிடில் காலச்சுழற்சிக்குள் நீர்
புதையுண்டு போய் விடுவீர்!

கண்ணசைப்பில் காளையரை வீழ்த்தி
புன்னகைப்பதற்குத் தருணமிதுவல்ல.
பாவாணரே! புரிந்து கொள்ளும்.

காலத்தின் சுழற்சியினை உணர்ந்திட்ட
காரிகையர் நாம் கண்டு கொண்டோம்
புரட்சியின் மகத்துவத்தை.
நிக்கரகுவா, சல்வடோர்களில்,
கியூபா, ரஷ்யாக்களில் தோழியர்
கற்றுத்தந்த வழிதனில்
உடைத்தெறிவோம் அடக்குமுறை
யந்திரத்தை..
தகர்த்தெறிவோம் தோழியரே!
வாரீர்! வாரீர்! வாரீர்!

8. பொங்கட்டும்! பொங்கட்டும்!
பொங்கலோ பொங்கலென்று
பொங்கலோ பொங்கலென்று
பொங்கட்டும். பொங்கட்டும்.
பொங்கிடுவோம். பொங்கிடுவோம்.

பானைகளில் பொங்கல் செய்ய
பா'வையரே நேரமல்ல.
ஏரூட்டும் தோழர்களே!
எமக்கிது நேரமல்ல.

இன்று நாம்
உதிரத்தால் பொங்கல் செய்வோம்.
உரிமைக்காய்ப் பொங்கல் செய்வோம்.
உண்மைக்காய்ப்பொங்கல் செய்வோம்.
அம்
மண்ணிற்காய் மடிந்தார் மறத்தோழர்.
அம்
மண்ணின் மைந்தர்க்காய்ப் பொங்கிடுவோம்.

பொங்கட்டும். பொங்கட்டும்.
பொங்கிடுவோம். பொங்கிடுவோம்.
பொங்கலோ பொங்கலென்று
பொங்கலோ பொங்கலென்று

ஏற்றமொன்றைக் காண்பதற்காய்
எரிந்து விட்டார் எம் தோழர்.
மாற்றமொன்றைப் படைப்பதற்காய்
மறைந்து விட்டார் நம் வீரர்.

எரிமலையாய்ப் பொங்கிடுவோம்.
எரிமலையாய்ப் பொங்கிடுவோம்.
புயலெனவே பொங்கிடுவோம்.
புத்தமைப்பைப்பொங்கிடுவோம்.

ngiri2704@rogers.com

No comments:

ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?'

எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது ஆசிய ஜோதி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, திரைக்கதை , வசனம் எழுதி வெளியிட்ட திரைப்படங்கள் உன்னைப்போல்  ஒருவன் ...

பிரபலமான பதிவுகள்