[ நண்பர்களே! என் புதிய நண்பர்களுக்காகவும், ஏற்கனவே வாசிக்காத பழைய நண்பர்களுக்காகவும் புகலிட வாழ்வனுபவத்தை விபரிக்கும் எனது சிறுகதைளை அறிமுகப்படுத்தலாமென்று நினைக்கின்றேன். புகலிடம் நாடிப் புலம் பெயரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பல் வகையின. அவற்றை வெளிப்படுத்தும் கதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அவற்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவேன். வாசியுங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.]
அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால் அமைக்கப் பட்டிருந்தது. இவ்விதமான குப்பை சேகரிக்கும் பெட்டிகளை மேற்கு நாடுகள் பலவற்றில் ஆங்காங்கே வைத்திருப்பார்கள். மூன்றாம் உலகத்து நாடுகள் பலவற்றில் இவற்றைக் காண்பதே அரிது. இத்தகைய பெட்டிக்குள் குப்பைகளைக் கழிவுப் பொருட்களைப் போடவேண்டுமென்றால் போடுவதற்கு வசதியாக கைகளால் உட்புறமாகத் தள்ளக் கூடியமூடியுடன் கூடியதொரு துவாரம் வைக்கப் பட்டிருக்கும். மனிதர்களால் மட்டும் தான் குப்பைகளைல் இதற்குள் போட முடியும். ஏனெனில் கைகளைப் பாவித்து மூடியை உட்புறமாகத் தள்ளுவதற்குரிய திறமையுள்ள உயிரினத்தால் தான் இது முடியும். ஒருவேளை நன்கு பழக்கப் பட்ட மனிதக் குரங்கான சிம்பான்ஸி அல்லது கொரில்லாக் குரங்குகளால் முடியக் கூடும்.






