[ அண்மையில் 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது இங்கு முழுமையாக இடம் பெறுகின்றது.]
பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு (தொடர்ச்சி)
'சங்கிலித்தோப்பு' வாயில் அல்லது கல்தோரண வாயில் பற்றி....
சங்கித்தோப்பு வாயில் என்று இது அழைக்கப்பட்டாலும், உண்மையான சங்கிலித்தோப்பு மந்திரிமனையை அண்டிய பகுதியே. அக்காணிப்பெயர்தான் சங்கிலித்தோப்பு என அழைக்கப்படுகின்றது. இவ்வாசல் உள்ள பகுதி பாண்டியமாளிகை வளவு என்றழைக்கப்படுகின்றது.
இந்த வாயில் பற்றியும் மயூரநாதனின் இந்நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கிய விடயமொன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார். இதன் குறைந்த பருமன் இதனுடன் அகலமான மாளிகைச் சுவர்கள் பொருந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார். இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயிலாக இம்முகப்பு இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்கலாம் என்கின்றார்.(பக்கம் 222).
அதே நேரம் இத்துடன் மயூரநாதன் இம்முகப்பு பற்றிய கருத்துகளை நிறுத்தி விட்டார். எனக்கு ஆச்சரியம் தந்த விடயம் என்னவென்றால், மயூரநாதன் குறிப்பிட்டுள்ள மேற்படி ஒல்லாந்தர் காலத்து நல்லூர் வெளிப்படுத்தும் சில முக்கிய விடயங்களை எதற்காக அவர் இம்முகப்புடன் இணைத்துப் பார்க்கவில்லை என்பதுதான். இந்நூலின் 207 - 211 பக்கங்களில் அவர் முக்கியமான விடயமொன்றினை, ஒல்லாந்தரின் அப்பகுதி பற்றிய நிலப்படத்தின் அடிப்படையில் , சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதனைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:ஒல்லாந்தரின் 1919ஆம் ஆண்டில் வரையப்பட்ட வலிகாமப் பிரிவில் காணப்படும் நல்லூர் பற்றிய நிலப்படங்களின் அடிப்படையில் தற்போது சங்கிலித்தோப்பு முகப்பு காணப்படும் பகுதியில் ஓர் அரசாங்கத்தோட்டம் அமைந்திருந்தது. (படம் 52, 53 & 54, பக்கம் 207, 208 & 209) ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர் ஒல்லாந்த அரச அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் செல்லும் சுற்றுலாத்தலமாக இருந்ததை அவர்கள் கால ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அதனை மயூரநாதனும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார். இதனைச்சுட்டிக்காட்டும் மயூரநாதன் பின்வருமாறும் குறிப்பிடுவார்:
"ஒல்லாந்தர் காலத்தில், 1719 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிலப்படமொன்று இந்தத்தோட்டத்தைப் பெயர் குறித்துக் காட்டுகின்றது.... இது பருத்தித்துறை வீதி, செம்மணி வீதிச் சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்தது எனலாம். இந்தத்தோட்டத்தின் பருத்தித்துறை வீதியிலிருந்து ஒன்றும், இன்றைய செம்மணி வீதிப்பக்கம் இருந்து ஒன்றுமாக இரண்டு நுழை வாயில்கள் இருந்தன. நிலப்படத்தில் உள்ள குறியீடுகளிலிருந்து இவாயில்களில் சங்கிலித்தோப்பு வளைவு போன்ற வளைவுகள் இருந்ததை அறியக்கூடியதாக உள்ளது. ... நிலப்படத்திலிருந்து , உள்ளே தோட்டத்தின் தெற்கு மதிலை அண்டி ஒரு கட்டடமும், மேற்கு மதிலிலிருந்து சற்றுத்தள்ளி உட்புறமாக இன்னொரு கட்டடமும் இருந்ததை அறிய முடிகின்றது" (படம் 55,பக்கம் 210)
இதிலிருந்து தற்போது காணப்படும் முகப்பு மேற்படி அரச தோட்டத்தின் கிழக்குப் பகுதி நுழை வாயிலே சங்கிலியன் தோப்பு வாசல் என்று இன்று அழைக்கப்படும் வாயிலாக இருந்திருகக் வேண்டும். இதனை ஏன் தன் கவனத்தில் மயூரநாதன் எடுக்கவில்லை. எடுத்திருந்தால் 'இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயில் என்பதை ஊகிக்கலாம் என்கின்றார் என்று கூறும் மயூரநாதன் (பக்கம் 222) மேற்படி அரச தோட்டத்தின் மதிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த மதிலில் உள்ள நுழைவு வாசல்தான் இந்தச் சங்கிலியன் தோப்பு முகப்பு என்று கூறியிருக்கலாமே! ஏன் கூறவில்லை. இது வியப்பைத்த்ருகின்றது.
மேற்படி சங்கிலியன் தோப்பு வாசல் எதுவாகவிருக்கும் என்பதற்கான முக்கிய ஆதாரங்களாக அரச தோட்ட நிலப்படம் இருக்கையில், இரண்டையும் இணைத்து எதற்காக மயூரநாதன் இறுதி முடிவை எடுக்கவில்லை! மயூரநாதனின் இந்நூல் அரச தோட்டம் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகின்றது. அத்தகவல்களின் அடிப்படையில் தற்போது காணப்படும் சங்லியன் தோப்பு வாசல் ப்ற்றிய நல்லதொரு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு வந்திருகக வேண்டிய மயூரநாதன் எதற்காக அதனைத் தவற விட்டார்? நான் நினைக்கின்றேன், கிடைத்த தகவல்களை ஆவணப்படுத்திய மயூரநாதன் , மேற்படி தற்போதுள்ள சங்கிலித்தோப்பு வாசல் பற்றிய இறுதிக் கருத்துகளைக் கூறுகையில் கவலையீனமாக அவற்றைத் தவறவிட்டு விட்டார் என்று. அப்படித்தவறி விட்டாலும், அவரது ஒல்லாந்தர் கால நிலப்படம் இந்தச் சங்லித்தோப்பு வாசல் பற்றிய நல்லதோர் ஊகத்துக்கு வலுச்சேர்க்கும் முக்கிய சான்றுகளில் ஒன்று.
மேலும் ஒல்லாந்தரின் நிலப்படத்திலிருந்து மேற்படி கிழக்கு வாசல் பருத்தித்துறை வீதியிலிருந்து கிழக்காக, உள்ளே இருப்பதால் அத்தோட்டத்தின் மாளிகையைச் சுற்றி அமைந்துள்ள மதில் கிழக்குப் பகுதியில் வீதியிலிருந்து சிறிது தள்ளி அமைந்திருகக் வேண்டும். தெற்குப் பகுதி வாசல் செம்மணி வீதியை அண்டி அமைந்திருப்பதையும் அறிந்து கொள்ள் முடிகின்றது.
[தொடரும் ]
girinav@gmail.com






No comments:
Post a Comment